உங்க சேவையை ஹவ் டு நேம் இட், இளையராணி பவதாரிணி?

இப்போது ரிலீஸாகிற படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, அட்மாஸ்பியர் என்ற பெயரில் இளையராஜாவின் பாடல்கள் நாலைந்து தவறாமல் இடம் பெற்று விடுகின்றன. நாம் பார்த்துக்கொண்டிருந்த கொடுமையான படத்தின், ஏதாவது ஒரு கட்டத்தில், ராஜாவின் அந்தப்பாடல்களைக் கேட்டவுடன் தியேட்டரில் ஒரு புத்துணர்ச்சி கிளம்பி விசிலும், கைதட்டலும் கேட்பது வாடிக்கையாகி விட்டது.

அப்படி எங்கும் நிரம்பி வழியும் ராஜா ரசிகர்களுக்காக உற்சாகமான செய்தி ஒன்று வைத்துள்ளார் அவரது செல்ல மகளும், பாடகியுமான பவதாரிணி.

‘2010-ல் அப்பாவில் ‘நத்திங் பட் விண்ட்’ ஆல்பத்தை லைவ் நிகழ்ச்சியாக மேடையேற்றிய போது ரசிகர்கள் தந்த உற்சாகம் ஒருபோதும் மறக்க முடியாதது.அதை ஒட்டி, உடனே செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருந்த வேலை சற்று தாமதமாகி, இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. ஆம் வரும் 29-ம் தேதி, சென்னையில், அப்பாவின்,’ஹவ் டு நேம் இட்?’ ஆல்பத்தை லைவ் மேடை நிகழ்ச்சியாக வழங்க இருக்கிறேன்.பிரபல வயலின் மேதை எல்.சுப்பிரமணியத்தின் புதல்வர்கள் அம்பியும், ராஜேஷ் வைத்தியும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்’’.

மற்றும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பாடகர்கள் ஹரிசரண், ஷாலினி, ஸ்ரீராம் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கு பெறும் இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகையை தன் தாய் அமரர் ஜீவாவின் நினைவாக அறக்கட்டளை துவங்கி ஏழைகளின் கல்விச்சேவைக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளாராம் பவதாரிணி.

யூ ஆர் நத்திங் பட் இளையராணி. உங்க சேவை மனசை ஹவ் டு நேம் இட் பவதாரிணி?