அடுத்த படத்துக்கு நான்தான் கதைவசனம் – உதயநிதியிடம் அடம்பிடிக்கும் கருணாநிதி

தாத்தா கருணாநிதியின் பேரைச் சொன்னாலே சினிமா ரசிகர்கள் தியேட்டர் இருக்கிற திசைப்பக்கமே திரும்பிப்பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்திருந்த உதயநிதி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பூஜை துவங்கி, ரிலீஸாகிற வரைக்கும், ஏதோ தத்துப்பேரன் மாதிரி தாத்தாவிடமிருந்து ரொம்பவே ஒதுங்கி இருந்தார்.

‘ரஷ் பாக்கணும், டபுள் பாஸிடிவ் பாக்கணும் ‘என்று கருணாநிதி நச்சரித்த போதெல்லாம்,’’நீங்கள் டயல் செய்திருக்கும் ’பேரர்’ உங்களுக்கு டபுள் பாஸிடிவ் காட்டும் மனநிலையில் இல்லை’ என்றே பதில் வந்தது.

ஒரு வழியாக படம் ரிலீஸாகி ஹிட் என்று தெரிந்த பிறகுதான், அதுவும் படம் ரிலீஸான 5 தினங்கள் கழித்தே தாத்தாவுக்கு, பிரசாத் லேப் தியேட்டரில் படத்தைபோட்டு காட்டினாராம் பேரன்.

படம் பார்த்து சிரித்து மகிழ்ந்த தாத்தா,’’இது உன்னொட முதல் படம் மாதிரியே இல்லை. பத்தாவது படம் மாதிரியே இருக்கு’ என்று வாழ்த்தியதோடு நில்லாமல்,’’ கேப்ல உனக்குன்னு நாலைஞ்சி கதை யோசிச்சி வச்சிருக்கேன். அதுல எதை அடுத்த படமா பண்ணலாம்னு நீ கேட்டு முடிவு பண்ணு. சீக்கிரமே வசனம் எழுதுற வேலைய ஆரம்பிக்கனும்’’ என்றாராம்.

இதைக்கேட்டு, வடிவேலு மாதிரியே’ அவ்வ்வ்வ்வ்வ்…’ என்று ஒரு அரைமைல் நீளத்துக்கு அழுத உதயநிதி, அடுத்த படத்துக்கு பேசாமல் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைத்துவிட்டு மொத்தப்படத்தையும் ஸ்விட்சர்லாந்தில் முடித்துவிடலாமா என்று யோசித்து வருகிறாராம்.