a separation- poster

(ஈரானியத் திரைப்படம்)
2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே

முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.

இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் ‘குடும்பச் சித்திரம்’ வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்’ரிடம் (பெய்மன் மோடி – Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும் ‘சிமின்’ (லைலா ஹடாமி – Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை ‘டெர்மே’வை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

‘அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காகa-separation-2 வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ‘ரஸீயா’வை (சாரா பயாட் – Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள். வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

a-separation-3யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த ‘டெர்மே’ அதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம்a-separation-4 குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?

–ஷாலினி ப்ரபாகர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.