vimarsanam'sakuni'

வெற்றி சிலரை தடுமாறச்செய்யும். தொடர் வெற்றியோ தொடை தட்டச்சொல்லும்.

’வெற்றியை நெற்றியில் ஏற்றினால், கற்றதும், பெற்றதும் போகுமாம் கண்கொள்ளாவிடத்து’ என்று காளமேகப்புலவரின் சிஷ்யப்பிள்ளை ஒருவர் எழுதியதாக ஞாபகம்.

‘பருத்திவிரனில் துவங்கி ‘பையா’ வரை விநியோகஸ்தர்களின் பையை நிரப்பிய கார்த்தியின் 6-வது படம் ‘சகுனி’. தமிழிலும் தெலுங்கிலுமாகச்சேர்ந்து உண்டாகியிருக்கும் மாபெரும் பிஸினஸ். அதனாலேயே

படத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யமுடியும் என்ற ரிச்னஸ்.

அதற்கு அத்தாட்சி படத்தின் முதல் காட்சி.

’சென்னை சிட்டி ரொம்ப பிஸி. பட் ஐ யாம் ரொம்ப பசி’ என்றபடி பசியைத்தீர்த்துக்கொள்ள, நகரத்தின் பல லொகேஷன்களிலும் ஆடிப்பாட ஆரம்பிக்கிறார் ஹீரோ கார்த்தி. அவர் எங்கே ஆடினாலும் சுமார் 50க்கும் மேற்பட்ட ரிச் கேர்ள்ஸும், டான்ஸர்களும் கூடவே ஆடிக்கூத்தடிக்கிறார்கள்.
‘சகுனி’ என்ற ஒரு சட்டி ஃப்ரைடு ரைஸுக்கு இந்த ஒரு ரைஸே பதம்.

சரி வேண்டாம் வெட்டிப்பஞ்சாயத்து, கதைக்கு வருவோம்.

அறிமுக இயக்குனர் சங்கர் தயாள் சர்மா கதை சொன்ன பாணியில் நானும் சொன்னால், நீங்கள் சிலபல மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நேரிடும் என்பதால், நான் புரிந்துகொண்ட வகையில் சொல்லிவிடுகிறேன்.

நாயகன் கார்த்தி காரைக்குடியைச்சேர்ந்த பெரும்பணக்கார வீட்டுப்பிள்ளை. சுற்றியுள்ள கிராம ஜனங்களுக்கெல்லாம் சோறு போடுவதற்காக அவர்கள் வீட்டு அடுப்பு 24 மணிநேரமும் எரிகிறது.

இப்படி சோறு போட்டதாலேயே எல்லாச்சொத்துக்களையும் இழந்து, கடைசியாய் ஒரு பெரிய வீடுமட்டுமே மிச்சமிருந்த நிலையில், அதை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அரசாங்கம் ஸ்வாஹா செய்துகொள்ள நினைக்கிறது.

இதைப்பார்த்துக்கொண்டு, தொடர்ந்து 5 ஹிட்டுக்கள் கொடுத்த கார்த்தி சும்மா இருப்பாரா?

’உசுருக்கு சம்மான நம்ம பெரிய வீட்டை மீட்டே தீருவேன்’ என்று தாத்தா வீ.எஸ். ராகவனுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு சென்னை வருகிறார்.

வந்ததும் முதல்வேலையாக சந்தானத்தோடு கூட்டணி சேர்ந்து ஒருசில தந்தாணத்தோம் பாடுகிறார்.

அடுத்தபடியாக, இட்லிக்கடை வைத்திருக்கும் ராதிகாவை, தனது சப்பை ஐடியாக்களால் சுயேச்சை வேட்பாளாராக கவுன்சிலருக்கு நிறுத்தி மேயர் ஆக்குகிறார்

தனது வீட்டில் ஒருவெளை சோறு தின்றதை மறந்த பிரகாஷ்ராஜை, முதல்வர் பதவியிலிருந்தே அப்புறப்படுத்துகிறார்.

இன்னொரு பக்கம் ஜெயிலிலிருக்கும் எதிர்க்கட்சித்தலைவரை தேர்தலில் நிறுத்தி முதல்வர் ஆக்குகிறார்.

பத்து சீன்களுக்கு ஒருமுறை, சாதா சகுனியிலிருந்து காதல்ககுனியாக மாறி, தனது அத்தை மகள் ப்ரணீதாவை லவ் பண்ணி டூயட்டோ, குத்துப்பாட்டோ ஆடுகிறார்.

இப்படியாக, ராப்பிச்சைக்காரன் பெரிய ரவுண்டு போய்விட்டு, சாப்பிட அமரும்போது தட்டில் காணப்படுமே அவ்வளவு ’வெரைட்டி’யான கதைகள் படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன.

24 மணிநேரமும் சோறுபோடுகிற ஒரு வீட்டைப்பற்றிய கதையின் டிஸ்கசனில் கலந்துகொண்டவர்களுக்கு, ஒழுங்காய் சோறுபோடவில்லையோ என்று சந்தேகிக்கிற அளவுக்கு எல்லா சீன்களிலும் அவ்வளவு ஐடியா வறட்சி.

எதற்கெடுத்தாலும் கேணத்தனமான சிரிப்பு ஒன்றை சிரிப்பதையே நடிப்பு என்று கார்த்தி இன்னும் எவ்வளவு காலத்துக்கு செய்துகொண்டிருக்கபோகிறாரோ என்று நினைக்கும்போது பயம் கழுத்துவரை கவ்வுகிறது.

என்னதான் படம் தயாரிக்கிறது உங்க சொந்த கம்பெனியாயிருந்தாலும் காசு குடுத்து பாக்குறது நாங்க தம்பி. கொஞ்சம் கருணை காட்டுங்க.

இவரும் சந்தானமும் ஆடுகிற கமல்-ரஜினி ஆட்டம் கொஞ்ச நேரமே ரசிக்க முடிகிறது.

ரிலீஸுக்கு முந்தியே படத்தின் ரிசல்ட் தெரிந்தவர் போலவே ‘கதைக்குள்ள கதைன்னு எத்தனை கதையப்பா சொல்லுவீங்க’ என்று சந்தானம் கார்த்தியை கலாய்ப்பது, ’பட் உங்க நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு ஆபிசர் சந்தானம்’

நாயகி ப்ரணீதா ரெண்டே முக்கால் காட்சிகளிலும் மூனே முக்கால் பாடல்களிலும் வந்து விட்டுப்போகிறார். அப்படி வருகிற காட்சிகளிலும் கூட ‘என்னைச்சொல்லி குத்தமில்லை. எனக்குத்தந்த சீன் பத்தவில்லை’ என்றே நம்மைப்பார்க்கிறார் பாவம்.

இசை ஜீ.வி. பிரகாசகுமார்.’இந்தப் படத்துல இதுக்கு மேல என்னை என்ன பண்ணச்சொல்றீங்க பாஸ்’? என்கிறார் பரிதாபமாய்.

இப்பிடி ஒரு சொத்தையான ஒளிப்பதிவையும் உங்களால தர முடியுமா ‘பூ’ பி.ஜி. முத்தையா’?’

பாவம் அறிமுக இயக்குனர் சங்கர் தயாள். ’சகுனி’யும் சரியில்ல, சினிமாவில் அவர் அறிமுகமாகியிருக்கும் சகுனமும் சரியில்ல.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.