’நாங்க எந்தக்காலத்துல சொன்னபடி ஷூட்டிங் முடிச்சிருக்கோம்?’ – அமீரின் ‘மீதி பகவான்’

சுமார் இரண்டு வருடங்களாக, ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த அமீர்- ஜெயம் ரவி கூட்டணியின் ‘ஆதி பகவான்’ மிக விரைவிலேயே க்ளைமேக்ஸை நோக்கி நகரவுள்ளது என்று கோடம்பாக்க வானிலை அறிக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பகவான்’ முடியும் வரை வேறு எந்தப்படத்திலும் நடிக்காமல், அமீருக்காக நீண்ட நாள் காத்திருந்து பொறுமையிழந்து போயிருந்த ஜெயம் ரவி கோஷ்டியினர் சமீபத்தில்தான், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாண் இயக்கும் ‘பூலோகம்’ படத்தில் இறங்கினர்.

இதற்கு முன்னர், கோவாவுக்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்று சொல்லி அழைத்துப்போன அமீர், பட நாயகி நீது சந்திரா, வேறு ஒரு பட ஷூட்டிங் போக அனுமதி கேட்டபோது தாராள மனதுடன் நடந்துகொண்டு அவரை போக அனுமதித்ததுதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நீது சந்திராவை அனுமதிக்காமல் மேலும் சில நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்திருந்தால் கோவாவிலேயே மொத்தப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வந்திருக்கமுடியுமாம்.

இதற்கு எதிர்ப்பு காட்டுவதற்கென்றே, ஜெயம் ரவி கோஷ்டியினர், பகவானை பாதியில் விட்டுவிட்டு, பூலோகத்தில் இறங்க,’உங்க புதுப்படம் முடியிறவரைக்கும் நான் ஏன் சும்மா இருக்கணும்’ என்றபடி அமீரும், வீம்புக்கு ஒரு படம் துவங்கும் முடிவில் இருந்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏறத்தாழ ஒரு போர் அறிவிக்காத குறைதான்.

நடுவில் பெப்ஸி தேர்தல் வந்து, அமீர் தலைவரானவுடன், அவருக்கும் ஒரு பொறுப்புணர்வு வந்து, ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகனுக்கும் அதே ஃபீலிங் வரவே, ‘பூலோகத்துக்கு கொஞ்சம் கேப் விட்டுவிட்டு ‘ஆதிபகவானை முடிக்க பஞ்சாயத்து பேசி உள்ளனர்.

அதன்படி, ஜூலை முதல் வாரத்தில் ஜெய்ப்பூரில் மையம் கொள்ளவிருக்கும் ஆதிபகவான்’ மிக நீண்ட ஒரு சண்டைக்காட்சியையும், சில பேட்ச் வேலைகளையும் முடித்துவிட்டு, ஜூலை இறுதியில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நாங்க எப்ப சொன்னபடி ஷூட்டிங் முடிச்சிருக்கோம்’ என்று பேலன்ஸ் வைத்துவிட்டு வந்து, மேலும் சில மாதங்களுக்கு அமீர் ஷூட்டிங்கை தொடருவாரேயானால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.