’பீ கேர்ஃபுள்’ ஐஸூ மேடம் அடுத்த கதையை எழுத ஆரம்பிச்சிட்டாங்களாம்

aishvarya dhanush

ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தோடு தனது டைரக்ஷன் முயற்சிகளை முடித்துக்கொள்வார் என்று நினைத்துக்கொண்டிருக்கும், ரஜினி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ரசிகர்களுக்கு ஓர் பேரதிர்ச்சிகரமான செய்தி.

தான், மிகவிரைவிலேயே, அடுத்து இயக்கப்போகும் படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துவிட்டாராம் ஐஸ்.

‘3’ படத்தின் ரிசல்ட் கொஞ்சம் ’முன்னப்பின்ன’ இருந்ததால், இனி படம் இயக்கும் ரிஸ்க்கை ஐஸ்வர்யா எடுக்கமாட்டார் என்று அவரது மாமனார் கஸ்தூரி ராஜாவில் தொடங்கி, கன்னியாகுமரியில் கல்லுடைக்கும் தொழிலாளி கருங்கல் கண்ணாயிரம் வரை நினைத்தார்கள்.

ஆனால் தனது படத்தை கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி நியூயார்க் திரைப்பட விழா வரைக்கும் எடுத்துச்சென்று புதுத்தெம்போடு திரும்பியிருக்கும் ஐஸ்வர்யா தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

‘’ நியூயார்க் திரைப்பட விழாவுக்கு சென்று வந்தது எனக்குள் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து திரும்பியவுடன் குழந்தைகளுடன் பேங்களூரு சென்று அப்பாவைப்பார்த்துவிட்டு வந்தோம். இதோ மீண்டும் சென்னை திரும்பி வழக்கமான வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது.

‘3’ படம் சரியாகப்போகவில்லை என்றதும் நான் ‘ஊரைவிட்டு’ ஓடிவிடுவேன் என்று பலரும், ஏன், எனக்கு நெருக்கமான சிலரே கூட நினைத்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் யாரென்று பதில் சொல்லும் வகையில், எனது இரண்டாவது சப்ஜெக்டை தயார் செய்து வருகிறேன்.

இந்தப்படத்தில் நடித்துக்கொடுக்கும்படி, எந்த சூழ்நிலையிலும் தனுஷிடம் கேட்கமாட்டேன். கதைக்குப் பொருத்தமான நடிகர் யார் என்று முழுக்கதையும் முடிந்த பிறகுதான் யோசிக்கவேண்டும். இப்போதைய நிலவரப்படி இவ்வருட இறுதியில் ஷூட்டிங் கிளம்ப உத்தேசித்திருக்கிறேன்’’ என்கிறார் ஐஸ்வர்யா.

சமீபகாலமாக ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், தனுஷ் காசிக்கு ஓட்டமெடுப்பதற்கும், ஐஸ்வர்யா அடுத்த கதையை எழுத ஆரம்பித்ததற்கும், ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
ishvaryaishvarya