விமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க ஆளை

murattukkalai

இசைஞானியின் நெசவில், எஸ்.ஜானகியின் கொஞ்சல் குரலில் ‘எந்தப்பூவிலும் வாசம் உண்டு’ என்று கிறங்க வைத்த ‘முரட்டுக்காளையை சுமார் 18 ஆண்டுகள் கழித்து ரீ-மேக்க ஆரம்பித்து 22 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.

80’ல் வந்த பழைய ‘முரட்டுக்காளையின் கதை என்னவோ வழக்கமான மசாலாதான் என்றாலும், முதன்முதலாக ஜெய்சங்கர் வில்லன் வேடன் ஏற்றதும், சுருளிராஜனின் யாரும் எதிர்பாராத ஃப்ளாஷ்பேக்கும், ‘அண்ணனுக்கு ஜே’

மாமன் மச்சான்’ புது வண்ணங்கள் பொங்கிடும் சோலை’ என்ற ராஜாவின் மெட்டுக்களும் படத்தை பெரும் ஹிட்டாக ஆக்கின.

சரி, புதிய முரட்டுக்காளை’க்கு வருவோம்.

ரஜினியின் காளையன் வேடத்தை சுந்தர்.சி ஏற்க, ரத்தி அக்னிஹோத்ரியாக சிநேகா, சுமலதாவாக சுள்ளான்’ சிந்து துளானி, ஜெய்சங்கர் வேடத்தில் சுமன், சுருளிராஜன் வேடத்தில் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கன்னுக்குட்டிகளைப்போல் தனது 4 தம்பிகளை பாசமாய் வளர்க்கும் காளையன் சுந்தர்.சி., பக்கத்து ஊர்ப்பண்ணையார் சுமன், காளையனை ஒருதலையாய்க் காதலிக்கும் அவரது தங்கை சிந்துதுளானி, கூட இருந்தே பண்ணையாரைப் பழிவாங்க அரவாணி வேடத்தில் அலையும் விவேக், பண்ணையாரால் பெண்டாளத் தேடப்பட்டு சுந்தர்.சி குடும்பத்தில் தஞ்சம் புகும் அனாதை சிநேகா.

மேற்படி கேரக்டர்கள் எல்லாம், தாங்கள் என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் தமிழ்சினிமா தர்மப்படி செய்துவிடுவதால் கதை என்று தனியாக ஒன்று உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

சுந்தர்.சி நடிக்கிறாரோ இல்லையோ படத்துக்குப்படம் தடிக்கிறார். அவருக்கு க்ளோசப் வைக்கும்போதெல்லாம் நமது சிறு குழந்தைகளை கவனச்சிதறல் ஏதாவது செய்து காப்பாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.

சிநேகாவுக்கு கழுத்திலும், வயிற்றுப்பிரதேசத்திலும் ரெண்டுரூபா காய்ன் சைஸில் மச்சம் வைத்திருப்பதின் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்றே விளங்கவில்லை.

‘’ ஏ சுந்தரு சுந்தரு,… ஏ சிநேகா சிநேகா…’ என்று உலக இலக்கியத்தரத்தில் இயக்குனர் செல்வபாரதியே எழுதியுள்ள பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார் சிநேகா.

அரவாணியாக வந்து, இரட்டை அர்த்தத்தில் சரியான அறுவை காமடிகளை தந்து படம் முழுக்க நம்மை நோகடிக்கிறார் விவேக். ‘நீங்க அடிக்கடி மாராப்பை சரி பண்றதெல்லாம் பாத்துப்பாத்து அலுத்துப்போன சரியான போரப்பு.’

கரடுமுரடான வில்லன்கள் குவாலிஸ் கார்களில் வந்து, விதவிதமான ஆயுதங்களுடன் ஹீரோவை ரவுண்டு கட்டி, அவரிடம் வெறுங்கையால் அடிபட்டு ஓடும் கூத்துக்கள் வழக்கத்தை விட இந்தப்படத்தில் ஜாஸ்தி.

இசை ஸ்ரீகாந்த் தேவா. பொதுவாக எம் மனசு தங்கம்’ தவிர ராஜாவின் எந்தப்பாடலையும் பயன்படுத்தாமல் சொந்த டியூன் போட்டிருக்கிறார். பாடல்களிலும் , பின்னணி இரைச்சல்கள் மூலமும், தான் எப்படி வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனோம் என்பதை டியூன் போட்டு விளக்குகிறார்.

மொத்தத்தில், புதிய ‘முரட்டுக்காளை’யின் மூலம் முட்டித்தூக்குகிறார்கள் தியேட்டருக்கு வருகிற ஆளை.