‘ அவ தேசமே நேசிச்ச பொம்பளைடா’- சூடு பிடிக்கும் சிலுக்கு வியாபாரம்

kaliyugam

வடக்கே ‘டர்ட்டி பிக்ஷர்ஸ்’ என்ற பெயரில் சிலுக்குவை வைத்து ஒரு கும்பல் கல்லா கட்டியதைத்தொடர்ந்து, மேலும் சிலர், மாநில பாரபட்சமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள மொழிகளில் ‘சிலுக்கு வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இதில் உச்சக்கட்ட காமெடியான சமாச்சாரமே அனைவருமே ’சிலுக்கின் சதையைக்காட்டாமல், அவருடைய ஆன்மாவை மக்களுக்கு காட்ட படமெடுக்கிறோம்’ என்று சற்றும் கூச்சநாச்சமின்றி பேட்டி கொடுப்பதுதான்.

இந்த ‘சிலுக்கு வியாபாரத்தில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர், இயக்குனர் யுவராஜ் அழகப்பன்.

‘பூக்களைப்பறிக்காதீர்கள்’ படத்தை இயக்கிய வேந்தன்பட்டி அழகப்பனின் புதல்வரான யுவராஜ், தற்போது, முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘ கலியுகம்’ படத்தை இயக்கிவருகிறார். படத்துக்கு தாஜ்நூர் உட்பட மூன்று இசையமைப்பாளர்களைப் பயன்படுத்தியிருக்கும் யுவராஜ், நடிகை சிலுக்கின் நினைவைப்போற்றும் வகையில் ஒரு முழுப்பாடலை படத்தில் வைத்திருக்கிறார்.

கதை 70 மற்றும் 80 களில் நடைபெறும் பீரியட் கதை என்பதால், சிலுக்கை ஒருதலையாய் காதலிக்கும், கதையின் ஒரு முக்கிய கதாபத்திரம் ‘ அவ தேசமே நேசிச்ச பொம்பளைடா’ என்று தொடங்கும் அந்தப்பாடலை தனது நண்பர்களுடன் பாடுகிறது.

படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது அந்தப்பாடலை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக்காட்டினார்கள். பாரில் குடிக்க ஆரம்பித்து, பல லொக்கேஷன்களுக்கு பயணிக்கும் அந்தப்பாடலில், கடைசி ஷாட்டில் சில்க் பார்க்கும் ஒரு வசீகர பார்வை தவிர்த்து, பெண்கள் யாரையும் ஒரு ஷாட்டில் கூட பயன்படுத்தவில்லை.

‘’கலியுகம்’ எனது நெருங்கிய நண்பரான ஒரு போலீஸ் அதிகாரியோட கதை. காவல்துறையில சின்ன பதவிலருந்து மேல வர்றப்ப, அவர் சந்திச்ச அனுபவங்கள என்கிட்ட ஒரு நாள் சொன்னார். அதுலஒரு குறிப்பிட்ட சமாச்சாரத்துல இருந்து இந்தக்கதை ஆரம்பமாச்சி. விறுவிறுப்பான கதை. கதையில துளி கூட கிளாமர் இருக்காது’’ என்கிறார் யுவராஜ்.

நீங்க சொல்றதை சிலுக்கு பாட்டு பாத்தப்பவே புரிஞ்சிக்கிட்டோம் பாஸ். கதாநாயகிகளையே உரிச்சிக்காட்டுற கலியுகத்துல இப்படி ஒரு டைரக்டரா ?