விமர்சனம் ‘தடையறத்தாக்க’ – ஒருமுறை பாக்க நினைத்தால் பாக்கலாம்

thadaiyara-thaakka-1

படத்தை இயக்கியிருப்பவர் ‘காக்க காக்க’ கவுதமின் உதவியாளர் மகிழ் திருமேனி.

நாயகன் அருண் விஜய்குமார், சின்ன வயசிலேயே சென்னைக்கு பொழைக்க வந்து, சொந்தமாய் டிராவல்ஸ் வைத்திருக்கிறார்.

நாயகி மம்தா மோகந்தாஸும் ஒரு

மிடில்கிளாஸ் பெண்ணே. இருவரும் காதலிக்கிறார்கள்.

வழக்கமான காதல்காட்சிகளை வைத்தால் போரடிக்கும் என நினைத்த இயக்குனர் வைத்துள்ள சில வித்தியாசமான காட்சிகளில், சாம்பிளுக்கு இரண்டை மட்டும் பார்ப்போம்.

ஒரு காட்சி : நாயகியை பார்ப்பதற்காக அவளது வீட்டுக்குப்போகிறார் அருண். ’’அவளோட ரூம்லதான் இருக்கா. போய்ப்பாருப்பா’ என்று அனுப்பிவைக்கிறார் வருங்கால மாமியார். அவர் உள்ளே வந்த்தும், ‘’கிச்சன்ல அம்மா பிஸியா இருக்காங்க. இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துக்கு இந்த ரூம் பக்கம் எட்டிக்கூட பாக்க மாட்டாங்க. அதுக்குள்ள என்னைய ரேப் பண்றதா இருந்தா பண்ணிக்கோ’’ என்றபடி தனது இரு கால்களையும் துக்கி அருணின் கால்கள் மீது போடுகிறார்.

நல்லவேளை கல்சுரல் ஷாக் கொடுப்பதை அந்த அளவோடு முடித்துக்கொண்ட டைரக்டர், அங்கே ரேப் காட்சி எதையும் வைக்கவில்லை.

இன்னொரு காட்சி: நாயகன் அருண், ஒரு கார் பயணத்தின்போது, நாயகி மம்தாவுக்கு ஒரு கிஃப்ட் தருகிறார். அதைப்பிரித்துப்பார்த்து எரிச்சலடையும் மம்தா அதை தூக்கி காரின் பின் சீட்டில் எறிய, நாயகனோ அன்பும் வம்பும் செய்து, அதை நன்றாக பிரித்து ‘ரசித்து பார்க்கும்படி கூற நாயகி வாங்கிக்கொள்கிறாள்.

அந்தப்பரிசுப்பொருள் ஏழு நிறங்களில் ஏழு பட்டர் ஃப்ளைகள் எம்ப்ராய்டரி பண்ணப்பட்ட பேண்டீஸ். ’’இனிமே இதையே தினமும் அணிஞ்சிக்கிட்டு வா’’ என்று thadaiyara-thaakka-2ஜொள்ளோசனை சொல்லும் ஹீரோ, அடுத்து நாயகி ஊடல் கொள்ளும் ஒரு காட்சியில் ரிஷப்சனில் போனை அட்டெண்ட் பண்ணும் ஒரு பாட்டியிடம், ‘’இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளைன்னு கேட்டேன்னு சொல்லுங்க’ என்று கலாய்க்கிறார்.

உடனே நாயகி ஊடல் ஒழிந்து, நாயகனை ஓடிவந்து கட்டிக்கொள்ள, ஏழு நிற பட்டர்ஃப்ளைகளையும் அணிந்து டூயட் பாடுகிறார்கள்.

காதல் காட்சிகளில் இப்படி ‘தடையறத்தாக்கியிருப்பதால், இது ஒரு காதல் படம் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.

கந்து வட்டி கும்பல்,அவர்களுக்குள் நடக்கும் மோதல் என்று போகும் கதையில், தனது கஸ்டமர் ஒருவருக்கு உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொள்கிறார் அருண்.

இந்த நேரத்தில் கந்துவட்டி கும்பலின் மூத்த தாதா கொல்லப்பட்டு, அவரைக் கொல்லப் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் அருணின் டிராவல்ஸ் காரில் கிடக்க, தாதாவின் தம்பி உட்பட மொத்த கும்பலும் அருணை கொல்லத் துரத்துவதும், அதை, தனி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக, தயாரிப்பாளரான மாமனாரின் பெரும்பொருட்செலவில், அருண் விஜய் எதிர்கொள்வதும் தான் கதை.

முதல் பாதியில் செம விறுவிறுப்பாகப்போகும் கதை, இரண்டாவது பாதியில் ஏகப்பட்ட கிளைக்கதைகளால், ஏகப்பட்ட திருப்பங்களால் சற்றே அயர்ச்சியை உண்டாக்குகிறது.

அருண் ஆக்‌ஷன் ஹீரோவாக படத்துக்குப்படம் பாஸ் மார்க்கை நோக்கி சற்று வேகமாகவே முன்னேறிக்கொண்டிருக்கிறார். மாமனார் மட்டும் இன்னும் ரெண்டுமூனு படத்துக்கு மனசு வைத்தால், ரிடையரான ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜும் இடத்தை பட்டா எழுதிக்கேட்கலாம்.

பட் ஒன்திங்… பத்துப்பதினைஞ்சி வில்லன்களோட வாழ்க்கையில, நாம வெறுங்கையோட மோதுற அளவுக்கு இன்னும் நாம முன்னேறல பாஸ். .அதை மட்டும் கொஞ்சம் மைண்ட்ல ஏத்திக்கங்க.

கிளாமர், நடிப்பு, கண்ணீர் வடிப்பு என்று எதிலும் குறைவைக்காமல் மனசை அள்ளுகிறார் மம்தா.

நம்ம கேமராமேன் அருள்தாஸ் உட்பட, வில்லன் கோஷ்டிகள் அத்தனையுமே ஒரிஜினல் கந்துவட்டி கும்பலிடமிருந்து கடத்தி வரப்பட்டது போல் அத்தனை கனகச்சிதம்..

’ஒளிப்பதிவு ‘மைனா’ அளவுக்கு சுகமாருக்குன்னு சொல்லமுடியலை சுகுமார்’.

கவுதமிடம் கற்றுக்கொண்ட வகையில், பின்னணி இசையில் சில ஆங்கிலப்பட டிராக்குகளை வைத்து டைரக்டர் ஒப்பேற்ற, பாடல் காட்சிகளில் தம் அடிக்கப்போகவும் விடாமல், உட்கார்ந்து ரசிக்கவும் விடாமல், நம்மை ரெண்டுங்கெட்டானாய் தவிக்க விடுகிறார் இசையமைப்பாளர் எஸ்.தமன்.

மற்றபடி, ‘தடையறத்தாக்க’ ஒரு மினி ‘காக்க காக்க’ தான். ஒருமுறை பாக்க நினைத்தால் பாக்கலாம்.

thadaiyara-thaakka-3