’விமர்சனம் ‘பில்லா 2’ – ‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’

billa2

இப்போது நான் நினைவூட்ட விரும்பும் ஒரு காட்சி, உங்களில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், ஒரு காரண காரியம் கருதி மீண்டும் அதை லைட்டாக தொட்டுவிட்டு செல்வோம்.

1983ம் ஆண்டு,ஜனவரி முதல் நாளன்று வெளியான கே. விஸ்வநாத்தின்சலங்கை ஒலியில் ஒரு காட்சி. பரத நாட்டியக்கலைஞரான கமல் ஒரு பூங்காவில் நாட்டியப்பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது

அவரை வாலண்டியராகப்போய் ஒரு சிறுவன் போட்டோ எடுப்பான். கமலும் அவனை நம்பி ஆசை ஆசையாய் போஸ் குடுத்து, மறுநாள் அவன் ஸ்டுடியோவில் போய்ப்பார்த்தால்,… ஒரு ஸ்டில்லில் கமலின் கை மட்டும் இருக்கும்இன்னொன்றில் கமலின் பாதம் மட்டும் இருக்கும்மற்றொன்றில் கன்னத்தில் ஒரு கொசுவை அடித்துக்கொண்டிருப்பார்.

‘’டேய் டேய் ஒரு ஸ்டில்லைக்கூட ஒழுங்கா எடுக்காம இப்பிடி அநியாயம் பண்ணிட்டியேடா’’ என்று கமல் அந்தப்பொடியனை அடிக்க முயல, அவனோ சாமர்த்தியமாக ஓடி தனது தந்தைக்கு பின்னால் ஒளிந்துகொள்வான்.

அந்தப் பையனின் பெயர்தான் சக்ரி டோலட்டி.

நேற்று ரிலீஸாகி அஜீத் ரசிகர்களை வெலவெலத்துப்போக வைத்திருக்கிறதேபில்லா2’ படத்தின் இயக்குனர்.

29 வருடங்களுக்கு முன்பு, உங்களையும் என்னையும் போல் ஏதோ ஒரு தியேட்டரில் அமர்ந்துசலங்கை ஒலியை ரசித்த அஜீத்துக்கு தெரிந்திருக்குமா, ஒரு ஸ்டில்லையே ஒழுங்காக எடுக்கத்தெரியாத பையன் 2012-ல் 1,85,760 ஸ்டில்களைக் கொண்டபில்லா2’ என்ற படத்தை எடுக்க முடியுமா என்பது?

இதைத்தான் விதி வலியது என்கிறார்களோ? சரி விமர்சனத்துக்கு வருவோம்.

டேவிட் பில்லா, ஒரு அகதியாக, வரும்போதே, ரொம்ப அசதியாக ஒரு முகாமில் இறங்குகிறார்.

அவர் அசதியாக இருப்பது தெரியாமல், ‘அம்மா பேரு, அப்பா பேரு கேள்விகேட்கும் அதிகாரி மேல் அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. அடுத்த காட்சியில் அவருக்கு ஒரு கடத்தல் வேலை கிடைக்கிறது. அதற்கும் அடுத்த காட்சியில் பெரிய டான் ஒருவருக்கு ரைட் ஹேண்டாக மாறுகிறார். இடைவேளையில் தனி டாணாக மாறுகிறார். அதுவரை அவர் சுட்டுத்தள்ளிய மனித உயிரினங்களின் எண்ணிக்கை சுமார் ஐநூறைத்தாண்டியிருக்க, உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறுகிறோம்.

படத்தின் முக்கிய அம்சமாக நான் கருதுவது சுமார் 20 பக்க நோட்டுக்குள் அடங்கிவிடக்கூடிய வசனங்கள். அதில் பத்தொன்பதரை பக்கங்கள் ஆங்கிலம்,ரஸ்யா, இந்தி போன்ற மொழிகளில் இடம் பெற்றிருப்பது.

அதிலும் அவ்வப்போது கீழே தமிழில் போடப்படும் சப்டைட்டில்களில், பில்லா என்பதைக்கூட அல்லா என்று எழுதிவிடுவார்களோ என்று நெஞ்சைப்பிடித்துக்கொள்ளுமளவுக்கு, எக்கச்சக்கமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.

பில்லா டேவிட் உட்பட படத்தில் இடம்பெறும் அத்தனை கேரக்டர்களுமே, ஏதோ வனாந்திரத்திலிருந்து பிடித்துவந்து விட்டது போல முன்கதை, பின்கதை எதுவுமில்லாமல் அந்தரத்தில் கிடக்கிறார்கள்.

கிளாமருக்காகவோ அல்லது டாண்கள் உலகத்தின் செட் புராபர்ட்டியாக இருக்கட்டும் என்று நினைத்தோ படத்தின் பல காட்சிகளில் ஜட்டியோடே அலையும் குட்டி புரூனா அப்துல்லாவும், பில்லாவின் அக்கா மகளான பார்வதி ஓமனக்குட்டனும் என்ன காரியமாக அங்கங்கே நடமாடி, அவ்வப்போது நடனமாடினார்கள் என்று கடைசிவரை விளங்கவேயில்லை.

கேரக்டருக்காவா அல்லது பொதுவாகவே சினிமாவின் மீது பணத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டதோ தெரியவில்லை. படம் முழுக்க டல்லா2 வாகவே காட்சியளிக்கிறார் அஜீத். பஞ்ச் டயலாக் என்ற நினைப்பில் அவர் பேசும் அத்தனை டயலாக்குகளும் ஏதோ பஞ்சத்துக்கு எழுதப்பட்டது போல் அத்தனை வறட்சி.

யுவனின் பின்னணி இசை தவிர்த்து,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, அத்தனையிலும் டெக்னிக்கலாக, இந்த 2012-லும் இவ்வளவு திராபையாக ஒரு படம் இயக்க முடியுமெனில் அது, 29 வருடங்களாக இன்னும் சற்றும் வளராத இந்த குட்டிப்பையன் சக்ரி, துக்கிரி, பக்கிரியால் மட்டுமே முடியும்.

அந்தவகையில்பில்லா2’ கதை, திரைக்கதையில் துவங்கி, ஒவ்வொரு விசயமும், ஒவ்வொரு சீனும், அவ்வளவு ஒவ்வொரு ஃப்ரேமும் சக்ரியே சொதப்புனதுடா.’