திடீரென ரத்தான ‘பில்லா2’ ட்ரெயிலர் வெளியீடு

’பில்லா2’ வுக்கு யாரோ தொடர்ந்து பில்லி சூன்யம் வைக்கிறார்களோ என்னவோ, அந்தப்படம் தொடர்பாக தொடர்ந்து பாதகமான செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன.

ரிலீஸ் தேதிகள் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க, வேறுவழியில்லை, தெலுங்கு இண்டஸ்ட்ரிக்காரர்கள் கோவித்தால் கோவிக்கட்டும் என்று ஜூலை 13-ம் தேதி படம் ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நேற்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பை ஒட்டி வந்த விளம்பரங்களில், இன்று சத்யம் சினிமாஸ் தியேட்டரில் சிறப்பு ட்ரெயிலர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிவிப்பில் விழாவை தயாரிப்பாளர்கள் நடத்துகிறார்களா அல்லது படத்தை வாங்கி வெளியிடும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனா, அதில் அஜீத் கலந்துகொள்ளப்போகிறாரா? விழாவில் கலந்துகொள்ளப்போகும் மற்ற வி.ஐ.பிகள் யார் என்ற எந்த விபரமும் இல்லாமல் மொட்டையாக இருந்தது.

இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் அஜீத் தரப்பிலிருந்து வந்த ஒரு வரிச்செய்தியில், ‘சத்யமில் நடப்பதாக இருந்த ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து’ என்ற புதிரான குறுஞ்செய்தி மட்டுமே வந்தது.

சாலையில் போக்குவரத்து அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வருவதால்.. ’மாலையில் சென்னையில் பலத்த மழை வரும் என்றுஅறிய வருவதால்..’ போன்று எதாவது ஒரு சப்பையான காரணத்தையாவது சொல்லி விழாவை ரத்து செய்திருக்கலாம்.