பவர் ஸ்டாரை நெவர் ஸ்டாராக்க களமிறங்கும் பூவர் ஸ்டார்

அஜீத்துன்னு இருந்தா போட்டிக்கு ஒரு விஜய் இருக்கனும், சிம்புன்னு இருந்தா போட்டிக்கு ஒரு தனுஷ் இருக்கணும், இப்பிடி எல்லாருக்குமே போட்டியா ஓட ஒரு குதிரை இருக்கப்ப, தனி டிராக்ல, தனி ஒரு ஆளா, மோத எதிரி இல்லாம, முட்டிப்பாக்க ஒரு உதிரி கூட இல்லாம இவ்வளவு நாளா ஓடிக்கிட்டிருந்தவர் நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன்.

ஆனால், ’வந்துச்சிடி வெள்ளையம்மா குதிரைக்கு ஆபத்து’ என்பது போல பவர்ஸ்டாருடன் மோத அவரையும் விட பவரான ஸ்டார் விரைவில் களம் காணப்போகிறார். அவுக வேறு யாருமல்ல நம்ம திருமதி தேவயாணியோட வூட்டுக்காரய்யா ராசகொமாரருதான்.

முன்ன ஒரு காலத்துல, அதாவது நாம எல்லாருமே சின்னப்புள்ளங்களா, விவரம் தெரியாதவங்களா இருந்தபோது, நடிகை தேவயாணி தன்னோட கணவர் ராஜகுமாரனை டைரக்டர் மற்றும் ஹீரோவா வச்சி ,’திருமதி தமிழ்’ன்னு ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பிச்சாங்க. யாரு கண்னு பட்டதோ, படம் ஆரம்பிச்ச உடனே புட்டுக்கிச்சி.

இப்ப பவர்ஸ்டாரெல்லாம் கூட பாப்புலர் ஸ்டாரா தெனாவட்டா திரியிறப்ப, ஆறுவேளை தின்னுக்கிட்டு, கன்னுக்குட்டி மாதிரி இருக்க நம்ம கணவரை சும்மா வூட்டுல இருக்க விடலாமா என்று யோசித்து, என்ன ஆனாலும், எப்படிப்பட்ட பின் விளைவுகள் நேர்ந்தாலும், உயிர் மண்ணுக்கு, தனது கணவரின் உடல் தமிழ் சினிமாவுக்கு’ என்று கோதாவில் குதித்து விட்டார் தேவயாணி
.
இதெல்லாம் நம்ம காலத்துலயா நடக்கனும் என்று ஏற்கனவே நொந்துபோயிருக்கும் உங்களுக்கு, கீழே படிக்கப்படிக்க இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பதால், சில்லென்று ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடித்துவிட்டு தொடருங்கள்.

படத்தின் கதை, திரைக்கதை,வசன, இயக்க நடிப்போடு, பட்த்தின் அத்தனை பாடல்களையும் ராசகுமாரனே எழுதுகிறார். சொந்தக்குரலில் ஒரே ஒரு பாட்டாவது பாடிவிடலாமா என்ற நப்பாசையும் இருக்கிறதாம்.

படத்தில் ராசகுமாரனுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஏற்கனவே கமிட் பண்ணப்பட்ட கீர்த்தி சாவ்லா. மற்றொருவர் அட்லீஸ்ட் காஜல் அகர்வால் ரேஞ்சிலாவது இருக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

கதைப்படி அவர் ஆக்ஷன் ஹீரோவாக வருவதால், ஒரு சிக்ஸ் பேக்குக்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ அட்லீஸ்ட் த்ரீ அல்லது ஃபோர் பேக் வரை கொண்டுவரும் முயற்சியில் தினமும் ஜிம்முக்கு போகிறாராம்.

இரண்டு ஹீரோயின்களுமே ராஜகுமாரனை போட்டிபோட்டுக்கொண்டு காதலிக்கிறார்கள். ஆனால் இருவரிடமும் கனவில் மட்டும் டூயட் பாடிவிட்டு கதைப்படி அவர் திருமணம் செய்வது மூன்றாவது ஒருவரை. அவர் யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.