யு.டி.வி. தனஞ்செயனை ஆடியோ விழாவில் வறுத்தெடுத்த கரு[த்து] பழனியப்பன்

இப்போதெல்லாம் ஆடியோ விழா மேடைகளுக்கு மைக் செட் ஆர்டர் பண்ணுவதற்கு முன்பே யு.டி.வி. மோஷன் பிக்சர்சின் தென்னக முதலாளி தன்ஞெயனை புக் பண்ணிவிடுகிறார்கள்.

பெரிய பெரிய படங்களா வாங்கி ‘குனியிறாங்களே’ எதிர்காலத்துல சின்னப்படங்களும் வாங்க ஆரம்பிச்சா ஒருவேளை நம்ம படத்தையும் வாங்கமாட்டாங்களா? என்ற நப்பாசையுடன் கூடிய அழைப்பு அது. அப்படி படங்களை வாங்கும் எண்ணம் இருக்கிறதோ இல்லையோ ஃபங்சன்களில் தவறாமல் கலந்துகொண்டுவிட்டு, அங்கே தரப்படும் போண்டா, வடைகளை வீட்டுக்கு பார்சல் வாங்கிக்கொண்டு செல்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார் அவர்
.
ஆனால் வேண்டாம் அந்த போண்டா,வடை என்று முடிவெடுக்கும் வகையில் விபரீதம் ஒன்று நேற்று நடந்துவிட்டது.

இதே தனஞ்செயன் மோசர்பிர் நிறுவனத்தில் பொறுப்பில் இருந்தபோது, இசைஞானியின் இசையில் ஒளிப்பதிவாளர் ஜீவன் ‘மயிலு’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த நிறுவனத்துக்கு திண்டுக்கல் வரை சென்று தன்ஞ்செயன் பூட்டு ஒன்றை வாங்கி தொங்கவிட்டுவிட்டு, யூ.டி.வி.க்கு ஷிப்ட் ஆகவே இதுவரை அந்தப்படம் திரைக்கு வருகிற வழியைக்காணோம்.

’மயிலுவை மறந்துவிட்டு, புதுமுகங்களை வைத்து ‘அமரா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஜீவன். இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்க வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில்தான் இயக்குனர் கரு[த்து] பழனியப்பன் ரூபத்தில் தனஞ்செயனுக்கு அந்த விபரீதம் நிகழ்ந்தது.

பொதுவாகவே கார்ப்பரேட் கம்பெனிகளை ஒரு பிடி பிடித்த பழனியப்பன் தனஞ்செயனை தனிப்பட்ட முறையில் வறுத்தெடுத்தார்.

‘எவ்வளவு கஷ்டப்பட்டு புரடியூசர் கவுன்சில்ல இனிமே முழுப்பக்க விளம்பரம் யாரும் கொடுக்கக்கூடாதுன்னு நடைமுறைக்கு கொண்டுவர்றாங்க. உங்ககிட்ட பணம் நிறைய இருக்குங்கிறதுனால ‘முகமூடி’ படத்துக்கு முழுப்பக்க விளம்பரம் குடுப்பீங்களா?’’ என்று துவங்கி தனஜெயனை தமிழ்சினிமாவை அழிக்க வந்திருக்கும் ஒரு துஷ்ட சக்தியாக தனது 5 நிமிட பேச்சின் மூலம் சித்தரித்தார்.

இப்ப சொல்லுங்க இனி போண்டா, வடை பார்சலுக்காக இவர் ஃபங்சன்கள் பக்கம் இனியும் வருவாரா?