’’என்னையே அடிச்சிக் காலிபண்ணிட்டியே கண்ணா’’- ரஜினி மிரட்சி

இன்றைக்கு ‘ஆன் த டாப் ஆஃப் த வேர்ல்டு’ வாசகங்களின் ஒரே சொந்தக்காரர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையில்லை. வசூலில் அசுர சாதனை புரிவதன்றி, இந்தியாவின் மொத்த சினிமா பிரபலங்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர், ஃபேஸ்புக் இணையதளங்களில் ‘ஈ’ டு இணையற்ற ஒரே பிரபலம் ராஜமவுலிதான். பலரும் பலவிதங்களில் இவரை வியந்துகொண்டிருக்க, படம் துவங்கிய காலத்திலிருந்தே இதன் பி.ஆர். ஓ. போலவே பின் தொடர்ந்துகொண்டிருந்த இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ,’’ ராஜமவுலிகாரு உங்க பாதத்தை எடுத்து ட்விட்டர்ல வைங்க. பலபேரு தொட்டுக்கும்பிட சவுகர்யமாயிருக்கும்’ என்கிறார்.

நேற்று நுங்கம்பாக்கம் 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில் தனது குடும்பத்தாருடன் படம் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் ராஜமவுலியை வரவழைத்து, எதுவும் பேசவராமல் ராஜமவுலியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு பரவசமாக அவரைப்பார்த்தபடியே இருந்தாராம்.

‘’சினிமாவை இப்பிடியெல்லாம் யோசிக்கமுடியுமா? யூ ஆர் வேர்ல்டு கிளாஸ் கிரேட்’’ என்று அவரை வாழ்த்திவிட்டு, படத்தின் வில்லன் சுதீப் செல்போன் நம்பரை வாங்கி,’’ இன்னைக்கி வரைக்கும், இந்தப்படத்தை பாக்குறதுக்கு முந்திவரைக்கும் நான் தான் பெஸ்ட் வில்லன்னு [எந்திரன்] நினைச்சுக்கிட்டிருந்தேன். அடிச்சிக் காலி பண்ணிட்டியே கண்ணா’ என்று மனதார வாழ்த்தினாராம்.

இதே போல், பிரத்யேக காட்சிகளை மறுத்துவிட்டு, நேற்று தேவி தியேட்டரில் தனது உதவியாளர்களுடன் படம் பார்த்த இயக்குனர் ஷங்கர், தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த குறிப்பு நோட்டை கேட்டு வாங்கி,’படம் சூப்பர்’ என்று தன் கைப்பட எழுதி கையெழுத்துப்போட்டுவிட்டு வந்தார்.

சேடிலைட் உரிமைகள் தெலுங்கு 5.5 கோடி, த்மிழ் 3.5 கோடி உட்பட, இப்போதைய வசூல் நிலவரப்படி, சுமார் 34 கோடி செலவில் தயாரான ‘நான் ஈ’ தெலுங்கில் 100கோடியும், தமிழில் சுமார் 60 கோடி வரையும் வசூலிக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணிக்கிறார்கள்.

மிக விரைவிலேயே கரப்பான் பூச்சி, எறும்பு, கொசு போன்ற யாராவது ஒருவர் தமிழில் படமாக்கப்படலாம் என்று தீர்க்கமாக நம்பலாம்.