’’பேட்மேன்’ படத்தை எடுத்த கிறிஸ்டபர் நோலன் ங்குற புலியைப் பாத்து நான் சூடு போட்டுக்க விரும்பலை. இது எந்தப்படத்தோட காப்பியும் கிடையாது. ஒரு சின்ன பட்ஜெட்ல தயாரிக்கப்பட்ட சின்ன சூப்பர்மேனோட படம். அதனால எங்கிட்ட ரொம்ப எதிர்பார்த்து ‘முகமூடி’ படத்துக்கு வந்து ஏமாந்துடாதீங்க’’

காலையில் சத்யம் தியேட்டரில் ஆடியோ ரிலீஸ் செய்துவிட்டு, சுடச்சுட மதியமே பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘முகமூடி’ மிஷ்கினின் மேடை வாக்குமூலம்தான் இது.

இந்தப்பணிவான வாக்குமூலத்துக்கு பின்னணியாக சற்றுமுன்னர்தான் ஒரு சம்பவம் நடந்தது.

தற்செயலாகவோ அல்லது பிசினஸ் பேசியபோது ஒத்துவராத ‘முகமூடி’ கோஷ்டிகளை நோகடிப்பதற்காகவோ , ‘முகமூடி’ பிரஸ்மீட் நடக்குமுன், அதே லேப் தியேட்டரில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் வெளியிடும் ‘;பேட்மேன்3’ [ த டார்க் நைட் ரைசஸ்] படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டார்கள்.

’ஆங்கில முகமூடி’ படத்தையே பாத்தபிறகு, அதை உல்டா பண்ணின தமிழ் ‘முகமூடி’க்கு ஆடியோ ரிலீஸா?’ ரொம்ப காமெடியா இருக்குல்ல?’’ என்று மிஷ்கின் மற்றும் யூ.டி.வி.யின் தென்னக முதலாளி தன்ஞ்செயனின் காதுபட பல நிருபர்கள் கமெண்ட் அடிக்கவே, வேறு வழியின்றி மிஷ்கின் ஒரு பணிவான வேடத்தை நேற்று மேடையில் கையாள வேண்டி வந்தது.

படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, கபடிப்போட்டிக்கு கலந்துகொள்ள போகும் வழியில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் போல் சிக்கென்று ஒரு ஷார்ட்ஸ் மட்டும் போட்டிருந்தார்.

ஏ.வி.எம்.மில் 25 லட்ச ரூபாய்க்கு செட் போட்டு எடுக்கப்பட்ட, மிஷ்கினே பாடல் எழுதி பாடிய சாராயக்கடை பாடலைப்பற்றி சரக்கடிக்காமலே சிலாகித்தார் தனஞ்செயன்.

‘’தனஞ்செயனுக்கு சினிமா பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு. ஆனா அவரு தப்பித்தவறி டைரக்‌ஷன் பண்ணமட்டும் ஆசைப்பட்டுரக்கூடாது’’ என்ற காரணகாரியமற்ற எச்சரிக்கையுடன் பேச ஆரம்பித்த மிஷ்கின், ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த ‘மரியாதை’ போதும் என்று நினைத்தோ என்னவோ, மேடையில் வீற்றிருந்த தனஞ்செயன் தவிர்த்து, ஜீவா, இசையமைப்பாளர் கே. ,நரேன் உட்பட அனைவரையுமே ‘டா’ போட்டே பேசினார்.

அந்தவகையான , ’மரியாதை’ கொடுப்பதில் பூஜா ஹெக்டேவையும் அவர் விட்டுவைக்கவில்லை.’’ அவ ரொம்ப நல்ல பொண்ணு. வந்து நில்லுடீன்னா நிப்பா’’ என்று மிஷ்கின் பேசிய போது, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய படுகிளாமரான கமெண்ட், பாவம் மிஷ்கின் காதுக்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை.

‘கதவைத் திறந்து வை காற்று வரட்டும் மாதிரி, 24 மணிநேரமும் அணியிற கண்ணாடியை கழட்டி வை காது கேட்கட்டும்னு யாராவது மிஷ்கினுக்கு சொன்னீங்கன்னா நல்லது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.