கதை,வசன கர்த்தாவின் வயிற்றிலடிக்கும் சந்தனக்கடத்தல் இயக்குனர்

எழுத்தாளர்களைக் காயடிப்பதில், காலந்தோறும் ஒருவித நயவஞ்சகத்தோடே நடந்துகொள்பவர்கள் சினிமாக்காரர்கள். மற்ற எல்லாவற்றிற்கும் தடபுடலாக செலவு செய்பவர்கள், எழுத்தாளர்கள் விசயத்தில், பணம் தருவதிலாகட்டும், அவர்கள் பெயரில் டைட்டில் கார்டு போடுவதிலாகட்டும், கஞ்சக்கருமிகளாக மாறிவிடுவார்கள்.

சமீபகாலமாக, எஸ்.ராமகிருஷ்ணன், செயமோஹன் போன்றவர்களின் வரிசையில், பாலாவில் தொடங்கி இயக்குனர் எல்.விஜய் வரை, சில முக்கிய இயக்குனர்களின் கதை விவாதத்தில் கலந்துகொண்டு அவர்களின் கதையில் பெரும் பங்களிப்பு செய்து, அவர்களையும் வளர்த்து, தானும் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டு வருபவர் எழுத்தாளர் அஜயன் பாலா.

இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளரும் ஆனதால், சந்தனக்கடத்தல் வீரப்பன் குறித்து நிறைய தகவல்களை அளிப்பார் என்ற நப்பாசையுடன், வீரப்பனின் கதையை படமாக எடுக்க இவரை, தனது ‘வனயுத்தம்’ பட்த்துக்காக, கதை மற்றும் வசனம் எழுதித்தரும்படி அணுகியிருக்கிறார் ஏ.ஆர்.எம். ரமேஷ். இந்தப் பங்களிப்பிற்காக இவருக்கு ரூ 2.லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம்.

ஒரு படம் பெரிய ஹிட்டானால், கதை உரிமை பெரிய விலக்கு போகும் என்பதால் ’கதை’ கிரடிட் எப்போதும் எழுத்தாளர்களுக்கு தரப்படுவதில்லை என்கிற அடிப்படையில், அது முதலிலேயே பறிக்கப்பட்டுவிட, இப்போது வசனத்துக்கும் ஆபத்துவந்து, கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் எல்லாமே ரமேஷ் பெயரில் இடம் பெற , போனால் போகிறதென்று வசன உதவி என்று, பரிதாபமாய் ஒரு பட்டம் கொடுத்து அஜ்யன் பாலாவை பதற அடிக்கிறாராம் ரமேஷ்.

இவ்வளவுக்கும் காரணம், அஜயன் பாலா தனது சம்பள பாக்கியை கேட்க ஆரம்பித்தது தானாம்.

சந்தனக்கடத்தல் மன்னனின் கதையை எடுக்க ஆரம்பித்த தோஷத்தில், கதை கடத்தல், வசனம் திருடுதல், சம்பளத்தை பதுக்குதல் எல்லாம் அத்துபடியாகிவிட்டதுபோலும் இயக்குனர் ரமேஷுக்கு.