திரையுலகின் எல்லாதிசைகளிலும் ‘தில்லு முல்லு’- திகைக்கும் பாலசந்தர்

ஒரு அமைதியான ரிடையர்மெண்ட் வாழ்க்கையை வாழவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று மிகவும் நொந்துபோயிருக்கிறார் மனதில் உறுதி இழந்த பாலச்சந்தர்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை டிஜிட்டலைஸ் பண்ணி மறு ரிலீஸ் பண்ணப்போவதாக ராஜ் டி.வி. நிறுவனத்தினர் டார்ச்சர் செய்து வந்தது சற்றே இடைவேளை விடப்பட்டிருக்கும் நிலையில், பாலச்சந்தரின் சூப்பர் டூப்பர் ஹிட்டர்களில் ஒன்றான ‘தில்லுமுல்லு’வை ரீ-மேக் பண்ணும் வேலைகளில் ஒரு குரூப் இறங்கவே, பி.பி. எகிறி, ஏறத்தாழ ஒரு பின்லேடனாகவே மாறிவிட்டார் கோபச்சந்தர்.

‘’ ரஜினி நடிச்ச கேரக்டர்ல, ஏதோ மிர்ச்சி சிவான்னு, சதா ரேடியோ ஸ்டேஷன் வாசல்ல நின்னுட்டு மிக்‌ஷர் சாப்பிடுற ஒரு பையன் நடிக்கிறானாமே. அய்யோ ஆண்டவா இது என்ன சோதனை. அதுபோகட்டும், தேங்காய் சீனிவாசன், சவுகார் ஜானகி நடிச்ச ரோல்கள்ல நடிக்க இன்னைக்கு யாரு இருக்கா?

படத்தை டைரக்ட் பண்ணப்போறது யாரோ பத்திரியாமே? அவரைப் பத்தி நான் இதுவரைக்கும் எதுவுமே கேள்விப்பட்டது கூட இல்லை. இதையெல்லாம் கொஞ்சம் மனசாட்சியோட யோசிச்சா, தில்லுமுல்லு’வை திரும்ப எடுக்கனுமுன்னு நினைக்கிறதே ஒரு பெரிய தில்லுமுல்லுன்னு தெரியும்’’ என்று தான் சந்தித்த அத்தனை பேரிடமும் புலம்பிய பாலசந்தர், அத்தோடு நின்றிவிடாமல், தான் தில்லுமுல்லுவை தயாரித்த அதே கலாகேந்திரா நிறுவனத்தின் மூலம் கோர்ட்டில் ஸ்டே வாங்கவும் ஏற்பாடு செய்துவிட்டார்.

‘தி.மு’ வை இயக்கி ஹீரோவாக நின்ற பாலச்சந்தரே படத்தின் ரீ-மேக்குக்கு எதிராக வில்லன் அவதாரம் எடுப்பார் என்பதை சற்றும் எதிர்பாராத மிர்ச்சி மற்றும் பத்ரி கோஷ்டி, பேசாமல் ‘கோல்மால்’ இந்திப்படத்தின் ரைட்ஸை வாங்கிப்பண்ணினால் பாலச்சந்தரால் என்ன பண்ண முடியும் என்று காதைச்சுத்தி மூக்கைத்தொட உத்தேசித்திருப்பதாகத்தெரிகிறது.