பாக்கியராஜ் தந்த அதிர்ச்சி திரையுலகம் கண்ட திருப்பங்கள் -7 எஸ்.ஜே.இதயா

”ஏ.வி.எம் தயாரித்த ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடிப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்த ரஜினி, திடீரென ‘ஆனால், இரண்டு கண்டிஷன்ஸ்’ – என்று சொன்னதும், சின்னதாக திடுக்கிட்டு, அவரை நிமிர்ந்து பார்த்தோம்.

“ஆனால் ரஜினி போட்ட கண்டிஷன்ஸ் வித்தியாசமானவை. ‘ஜெய்சங்கர் நடிப்பதால், அந்த வில்லன் ரோலுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, மெருகேற்ற வேண்டும்.அடுத்து,போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் எனக்கு இணையாக அவருக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்’என்பவைதான் அவர் போட்ட கண்டிஷன்ஸ். அந்தளவு பெருந்தன்மையானவர் ரஜினி.

“அவர் நடித்த வித்தியாசமான படங்கள், என் இயக்கத்தில் வெளிவந்தவை என்பதில் எனக்கு மனநிறைவு உண்டு. ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘நெற்றிக்கண்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ஸ்ரீ ராகவேந்திரா’ – உள்ளிட்ட பல படங்கள், ரஜினியின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியவை. அவரும் நானும் இணைந்ததில், ‘கழுகு’ என்ற படம்தான் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறவில்லை.

“ஒரு பஸ்ஸுக்குள் படுக்கையறை, சமயலறை, குளியலறை எல்லாம் செட் பண்ணி, கழுகு படத்தை எடுத்தோம். மக்களுக்கு அது அந்நியமாக தோன்றி விட்டதுபோலும். இப்போது அந்த பஸ் போல கேரவன் வேன்கள் வந்து விட்டன. ஒரு வேளை இப்போது அந்தப் படத்தை எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ?” என்று கூறி சிரித்தார் எஸ்.பி.எம்.

அவரே தொடர்ந்து, “ரஜினி, கமல் இருவரையும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் எனக்கு அடிக்கடி அமைந்தன. பத்து நாள் கமல் ஷூட்டிங், பத்து நாள் ரஜினி ஷூட்டிங் என்று மாறி மாறி ஷூட்டிங் நடந்துள்ளன. பத்துநாள் ரஜினி ஷூட்டிங்கை முடித்து விட்டு, 11- ஆவது நாள் கமல் ஷூட்டிங்கிற்குப் போவேன். அங்கு கமலிடம் ‘ரஜினி… ஷாட் ரெடி’ என்பேன் மறதியாக.

“உடனே கமல், ‘ உங்களுக்கு எப்பவும் ரஜினி நினைப்புதான்’ என்று செல்லமாய் கோபிப்பார். கமலுடன் 10 நாள் ஷூட்டிங் முடிந்ததும், மறுநாள் ரஜினி ஷூட்டிங் இருக்கும். அங்கே போய் ‘கமல் … ரெடியா …?’ என்பேன். உடனே, ரஜினி ‘கமல்தான் உங்கள் பிள்ளை. அதுதான் என் பெயர் மறந்து போகுது’ என்று செல்லமாய் கோபிப்பார்.

இருவரும் என் மீது அளவற்ற பாசமும், மரியாதையும் கொண்டவர்கள். இருவரிடமும் மட்டுமில்லை. திரையுலகில் யாரிடமுமே எனக்கு மோதல்கள் வந்தது இல்லை. காரணம் எந்த ஒரு முடிவாக இருந்தாலும்,அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால், நான் கன்வின்ஸ் ஆகிவிடுவேன். என் பக்கம் நியாயம் இருந்தால், அவர்களை கன்வின்ஸ் செய்து விடுவேன். எனவே கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்பே அமையாது.

“ஆரம்பத்தில் ‘ ஆற்றிலிருந்து அறுபது வரை’, ‘போக்கிரி ராஜா’ ஆகிய படங்களின் கதைகள் மீது ரஜினிக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. நான் அவரை கன்வின்ஸ் பண்ணித்தான் நடிக்க வைத்தேன். அது போல, ‘ நல்லவனுக்கு நல்லவன்’ படத்தின் க்ளைமாக்ஸ் ரஜினிக்கும், ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் திருப்தியாய் இல்லை. நான் கன்வின்ஸ் ஆகிக் கொண்டேன்.

“அந்த படத்தில் ராதிகா இறந்த பிறகு, அவரது படத்தை எடுத்துக் கொண்டு, கலங்கிய கண்களுடன் இலக்குத் தெரியாமல் ரஜினி கிளம்புவது போல்தான் க்ளைமாக்ஸ் எடுத்திருந்தேன்.’க்ளைமாக்ஸ் கவிதை மாதிரி இருக்கு. ஆனால் ரஜினி படம் அதிரடியாக முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று அவர்கள் கூறியது, எனக்கும் ஏற்புடையதாக இருந்தது. எனவே க்ளைமாக்ஸை மாற்றி ஒரு அதிரடி சண்டையை இணைத்தோம்.

“சினிமாவில் இருக்கும் 20- க்கும் மேற்பட்ட துறைகளை அரவணைத்துப் போக வேண்டியது, ஓர் இயக்குநரின் கடமை என்று நான் கருதுகிறேன்.ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் எல்லோருக்கும் பங்கு உள்ளது.ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வெண்டும் என்பது எனது அபிப்ராயம். ஏனென்றால், வேலை வாங்கும் பொறுப்பு இயக்குநரைச் சார்ந்தது.

“திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் படமெடுப்பது, குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடிப்பது ஆகிய திறமைகளும், ஓர் இயக்குநருக்கு மிக அவசியம். எனது படப்பிடிப்புகளில், கேமிரா ஒரு கோணத்தில் பொருத்தப்பட்டால், அந்த கோணத்தில் எடுக்கப்பட வேண்டிய வெவ்வேறு ஷாட்களை வரிசையாக எடுத்து விடுவோம். அந்த அளவுக்கு ஷாட்களை பிரித்து தயாராக வைத்திருப்போம்.

”அதே போல் டைம் மேனேஜ்மெண்டிலும் மிகுந்த சிரத்தை எடுப்பேன். முதல் நாளே எத்தனை மணிக்கு என்ன ஷாட், யார், யார் ஆர்ட்டிஸ்ட் என்று பிரித்து விடுவோம். அதற்க்கேற்பதான் நடிகர், நடிகையரை வரச் சொல்வோம். ‘துக்ளக்’ பத்திரிக்கையை துவக்கிய பிறகு, பல படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளாத ‘சோ’, எனது படங்களில் அதிகமாக நடித்ததற்கு இது ஒரு முக்கிய காரணம்.

”பல வேலைகளுக்கு இடையே அவர் நடிக்க வருவார். அவரை சும்மா காத்திருக்க வைக்காமல், சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் நடத்தி, அவரை அனுப்பி வைத்து விடுவோம். ரஜினியும் பல நேரங்களில் அதற்கேற்றபடி ஒத்துழைப்பு தந்துள்ளார். இப்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி படத்தை பல செலவுகளைக் குறைக்கும்” என்றார் எஸ்.பி.முத்துராமன்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் குறிப்பிடுவது போல், பட்ஜெட்டிற்குற்குள் படத்தை முடிப்பது மற்றும் குறிப்பிட்ட நாட்களில் ஷூட்டிங்கை முடிப்பது என்ற விஷயங்கள், இன்றைய சினிமா உலகில் சற்று குறைந்தே வருவதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், இன்றைக்கும் கூட, ‘காதல்’ போன்ற படங்கள் பட்ஜெட்டிற்குள் எடுக்கப்பட்டு பெரு வெற்றியை பெற்றுதான் வருகின்றன.

அதே போல் இயக்குநர் என்பவர் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்று கூறப்பட்டாலும், நல்ல கருத்துகள் பிறரிடமிருந்து வரும் போது, அதற்கு கன்வின்ஸ் ஆகும் குணம் இன்றைக்கும் சிலரிடம் உள்ளது. ‘தனது நிலைப்பாடுதான் சரி’ என்று வாதிடுபவர்கள், இப்போது அதிகமாகி விட்டனர் என்று சிலர் கருதலாம். ஆனால் அன்றைக்கே ‘களத்தூர் கண்ணம்மா’விலிருந்து இயக்குநர் பிரகாஷ்ராவ் விலகிக் கொண்டது பற்றி ஏ.வி.எம் சரவணனும், ‘சாயா தேவி’ படத்திலிருந்து இயக்குநர் ஹஷ்வந் நந்தலால் விலகிக்கொண்டது பற்றி ஆர்.எம்.வீரப்பனும் இதே தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, இயக்குநர்களின் நிலைப்பாடுகளில் எது நியாயம் என்பதை யாரும் வரையறுத்து விட முடியாது. அவரவர் பார்வையில், அந்தந்த சூழலில் சில நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

”பல சந்தர்ப்பங்களில் நான் பிடிவாதமாக இருந்ததும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் கன்வின்ஸ் ஆனதும் உண்டு” என்று குறிப்பிடும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜுகாக கன்வின்ஸ் ஆன சம்பவத்தை விவரித்தார்.

“ரஜினி நடித்து நான் இயக்கிய ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில், சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்க பாக்கியராஜ் ஒப்பந்தமாகி இருந்தார். ‘சரேல்’ என்று வந்து நிற்கும் போலீஸ் ஜீப்பிலிருந்து, மிடுக்கோடு பாக்கியராஜ் இறங்கி, பரபரப்பாக பணிகளை துவங்குவது போல் சீன் வைத்திருந்தோம். படப்பிடிப்பிற்கு வந்த பாக்கியராஜ் திடீரென்று ‘நான் ஜீப்பில் வராமல்,ஒரு ஓட்டை சைக்கிளில் வந்து இறங்குவது போல் காட்சி அமைத்தால் எப்படி இருக்கும்?’ என்றார். நான் அதிர்ந்து போனேன்.” [திருப்பங்கள் தொடரும்]