’அம்மா என் ஜட்டிய எங்க காணோம்?’ என்று வீடுமுழுக்க தேடி, அதை விறகு அடுப்பின் கரித்துணியாக கண்டெடுக்கும் கதாநாயகன் ஓப்பனிங்.

இதுவரை அதிகம் தமிழ்சினிமா கதைசொல்லத் தேர்ந்தெடுக்காத சென்னைப் புறநகரின் ஒரு குக்கிராமம். சற்றே விநோதமான அவர்களது பாஷை. 80 களில் நடக்கிற ஒரு கதை என்று ‘ஓப்பனிங்கே நல்லாத்தான் இருக்கு’ என்ற நம்பிக்கையுடன் தான் ஆரம்பிக்கிறார்கள் ‘அட்டகத்தியை’.

+2வில் ஃபெயிலாகி,

டுட்டோரியல் காலேஜுக்கு காவடி எடுக்கும் ’அட்டகத்தி’ பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடிப்பதில் மன்னன். நாயகி பூரணியைப் பார்த்த்தும் லவ் ஆகி அவரை விடாமல் விரட்டிப்போக’ அவ்வப்போது சிரித்து கம்பெனி கொடுத்துவிட்டு கடைசியில், ‘அண்ணா இப்பிடி பின்னால எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்கண்ணா’ என்றவுடன் நொந்து நூடுல்ஸ் ஆகி, காதல் தோல்வியாளராக நடிக்க முயன்று அது முடியாமல் போய் அடுத்தடுத்த காதல்களுக்கு தயாராகிறார்.

ஒரு கட்டத்தில் விபத்துபோல் +2 வில் பாஸாகி, அரசுக்கல்லூரியில் ஹிஸ்டரி எடுத்துப்படித்து, பஸ் மாணவர்களின் ‘ரூட்டுதல’யாக மாறி கெத்தாக திரிந்துகொண்டிருக்கும் வேளையில், அதே கல்லூரியில் மறுபடியும் அதே பூரணியை சந்தித்து காதலில் வுழுந்து கடைசியில் என்னவாகிறார் என்பதுதான் கதை.

இந்த அட்டகத்தியின் கதையோடு, அவரது அண்ணனின் குட்டி லவ்மேட்டர், இவரது நண்பர்களாக வரும் சில சொட்டகத்திகள், இரவில் குடித்தவுடன் வீரம் கொப்பளிக்கும் இவரது அப்பா என்று சில சைடு கேரக்டர்களும் கதைக்கு சுவாரசியம் சேர்க்கிறார்கள்.

சுருக்கமாகச்சொல்வதானால், ‘ஆட்டோகிராப்’ படத்தில் சேரன் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளை சீரியஸாக எடுக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உட்கார்ந்து யோசித்த கதை.

முதல் பாதியில் கலகலப்பாக நகரும் கதை, இரண்டாவது பாதியில்’ ரூட்டுதல என்றால் என்னவென்று விளக்குவது, வெத்துவேட்டாய் இருந்துகொண்டு கெத்து காட்டுவதை விட்டு நகரமாட்டேன் என்று சண்டிமாடுமாதிரி அடம்பிடிக்கிறது. அதுவும் க்ளைமாக்ஸை ஒட்டி திணிக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் படத்துடன் சுத்தமாக ஒட்டவில்லை.

மொக்க பையனுக்கு இதுபோதும் என்று இயக்குனர் நினைத்தாரோ அல்லது அவரது டேஸ்டே அவ்வளவுதானா என்று தெரியவில்லை படத்தில் நம்ம அட்டகத்தி விரட்டும் அவ்வளவு ஃபிகர்களுமே சொல்லிவைத்தாற்போல் சப்ப ஃபிகர்களாகவே இருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் புரமோத் வர்மாவை உடனே நம்ம ஹீரோ படித்த டுட்டோரியல் கல்லூரியில் சேர்க்கவும்.

‘ஆசை ஒரு புல்வெளி. அதில் ஆண் பெண் இரு பனித்துளி’ மற்றும்

நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா?’ கெழவியால கொட்டப் பாக்கை மெல்ல முடியுமா?’[ இரண்டாவது லைன் நம்ம லிரிக்]

போன்ற பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஆனால் வித்தியாசமான காமெடிபின்னணி இசைக்கிறேன் என்ற பெயரில் திரும்பத்திரும்பதிரும்பத்திரும்ப ரம்பம் போட்டிருக்கிறார் இ[ம்]சையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குப்போயிருந்தால், ‘அட பரவாயில்லையே’ என்று சொல்லவைத்திருக்கவேண்டிய படம், இப்போது ஞானவேல் ராஜா போன்ற பெரிய தயாரிப்பாளரின் கைக்குப்போய், தடபுடல் விளம்பரங்களுடன், ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதாலும், மிக சொதப்பலான படத்தின் இரண்டாவது பாதியாலும்‘அட்டகத்தி’ முனை மழுங்கிய மொட்டகத்தி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.