ஹீரோக்களின் பின்னால் ஓடும் இயக்குனர்கள் – திரையுலகம் கண்ட திருப்பங்கள்-8 -எஸ்.ஜே.இதயா

”ஓர் சி.பி.ஐ. ஆஃபீசர் சைக்கிளில் வந்து இறங்குவதா என்று நான் சற்று மலைக்க, பாக்கியராஜ் தனது ட்ரெண்டில் அந்த கேரக்டரை கொஞ்சம் ஹ்யூமர் கலந்து பண்ணலாம் என்று கூறி, சிற்சில மாற்றங்களை விளக்கினார். அவரின் அந்த ட்ரெண்ட் எனக்கும் பெரிய அளவில் பிடித்துப் போனதால், அவர் சைக்கிளில் வருகிற மாதிரியே ஷூட் பண்ணினோம். அது நன்கு எடுபட்டது தியேட்டரில் ஏக கைத்தட்டல்… கலகலப்பு!

“அந்தக் கதையின் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தவர் தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவ். ரஜினியிடம் அந்தக் கதையை சொல்லி ஓ,கே. வாங்கியதும், ‘டைரக்டராக யாரைப் போடலாம்?’ என்று கேட்டுள்ளார் ராவ். அப்போது ரஜினியே என் பெயரை முன்மொழிந்தது எனக்குப் பெருமை தந்த விஷயம்.

“இப்படி ரஜினியே என்னை பரிந்துரைக்கும் வகையில் நான் உருவெடுக்க, என் முந்தைய படங்களும் அதன் வெற்றிகளும் உதவின. ‘ சினிமா என்பது ஒரு பவர் ஃபில் மீடியம். அதைப் பயன்படுத்தி ஓரளவாவது செய்தி சொல்ல வேண்டும்’ என்ற எண்ணம் ஆரம்ப நாட்களிலேயே என் மனதில் பதிந்து விட்டது.

”என் முதல் படமான ‘சட்டம் ஒரு இருட்டறை’ பெரிய வெற்றி பெறக் காரணம், அதிலிருந்த சமூக அக்கறைதான். அந்த படத்திற்கான கதையை தயாரிப்பாளர் வடகூர் சிதம்பரத்திடம் சொல்லி ஓ.கே. ஆனதும், ஒரு பெரிய ஹீரோவைப் போட்டு விடலாம் என்றுதான் அவர் கருதினார். ஆனால் நான் தான் ‘ஒரு புது ஹீரோவை வச்சுப் பண்ணினால், படம் இன்னும் நல்லா வரும்’ என்று கூறி, அவரின் சம்மதம் பெற்றேன்.

‘அப்போதுதான் வாஹினி ஸ்டுடியோ வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த கறுப்பு இளைஞரைச் சந்தித்தேன். முரட்டுத்தனமான, திடகாத்திரமான உருவம்; பவர்ஃபுல் கண்களைக் கொண்ட அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி ‘நடிக்கிறீங்களா?’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வரும் இளைஞர் என்பது தெரிய வந்தது. உடனே அவரையே ஹீரோவாக ‘புக்’ செய்தேன். அவர்தான் விஜயகாந்த்.

”அந்தப் படத்தில் ஹீரோ, கேமிராமேன், எடிட்டர் எல்லோருமே புதியவர்கள். பெரிய இசையமைப்பாளரும் இல்லை. ஆனால் அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. பெரிய தலைகள் யாரையும் எதிர்பார்க்காமல் அந்தப் படத்தை எடுத்ததால்தான், அந்தப் படம் எஸ்.ஏ.சந்திரசேகரின் படமாக அமைந்தது.

“அப்போது முதலே பெரிய நடிகர்கள், பெரிய கேமராமேன் என்று யாரையும் தேடுவதில்லை. ஒரு படைப்பாளி என்பவன் வெறும் கதைகளையும், காட்சிகளையும் மட்டும் படைப்பவனாக இருக்கக்கூடாது. பல நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களையும் படைப்பவனாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

“சிறப்பாக ஓடுகிற குதிரையின் ஜாக்கியாக இருந்து வெற்றி பெறுவதில் எனக்கு ஆர்வமில்லை. சாதாரண குதிரையை ஓடும் குதிரையாக்கி வெற்றி பெறுவதுதான் ஜாக்கிக்குப் பெருமை. ஆரம்பத்தில் என் மகன் விஜயை வைத்துச் சில படங்கள் எடுத்தேன். எப்போது, அவர் ஓடும் குதிரையாகி விட்டாரோ, அப்போது, அவரை வைத்துப் படமெடுப்பதை நிறுத்தி விட்டேன்.

“இன்று பல திறமையான இளம் டைரக்டர்கள் கூட, பெரிய பெரிய ஹீரோக்களின் பின்னால் ஓடுவது வேதனையாக உள்ளது. தன்னையும்,தன் கதையையும் நம்பிக் களமிறங்கி, தன்னை யார் என்று காட்டும் போராட்ட குணம் இன்றைய இயக்குநர்களிடம் மிகக் குறைந்து வருவது வருத்தத்திற்குரிய விஷயம், முதல் கதையைச் சிந்திக்கும்போதே பெரிய ஹீரோவை வைத்துச் சிந்திக்கிறார்கள்.

“கதையை ஹீரோவிடம் சொல்லும்போது கூட ‘ஹீரோ வர்றார். முறைக்கிறார், அடிக்கிறார்’ என்று சொல்லாமல், ‘நீங்க என்டரி ஆகுறீங்க, இப்படி முறைக்கிறீங்க’ என்று தனது கதையின் ஹீரோவை அந்த நடிகனாக மனதில் பதித்து கதை சொல்கிறார்கள். ஒரு தன்னம்பிக்கை மிக்க இயக்குநருக்கு இது அழகில்லை. தனது ஹீரோவாக எந்த நடிகர் நடித்தாலும், அந்தப் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை அந்த இயக்குநருக்கு இருக்க வேண்டும்.

எனது காலகட்டத்தில், நான் உருவாக்கிய ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை பல தயாரிப்பாளர்கள் ஏற்கத் தயங்கினார்கள். ஆனால், எனது சப்ஜெக்ட், மற்றும் எனது திறமை மீது நம்பிக்கையிருந்ததால், துணிச்சலாக நானே அவற்றைத் தயாரித்தேன். ‘வீட்டுக்கொரு கண்ணகி’ ‘நீதிக்குத் தண்டனை’ – ஆகிய ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றன.

“சமூகப் புரட்சி, அரசியல் புரட்சி, சட்டப் புரட்சி ஆகியவை மீது எனக்கு அளவில்லாத ஈடுபாடு இருந்தது. எனது படங்களில் எல்லாம் அது பெரிய அளவில் வெளிப்படும். அதனாலேயே எனது படங்கள் பெரும்பாலும் சென்ஸாரில் சிக்கலைச் சந்திக்கும். எனது பல படங்கள் ‘ ரிவைசிங் கமிட்டி’ க்குப் போய் ஆங்காங்கே சில வெட்டுக்களுடன்தான் வெளியாகின.

“எனது ‘சுதந்திர நாட்டின் அடிமைகள்’ என்ற படம், இந்தியாவுக்கே துரோகம் செய்யும் ஒரு மத்திய அமைச்சரைப் பற்றியது. சாதாரண கொலைக்கும் தூக்கு தண்டனை; நூறு கோடி மக்களையே காட்டிக் கொடுத்து அழிக்க நினைத்த அமைச்சருக்கும் தூக்குத் தண்டனையா – என்று சர்ச்சைகள் கிளம்பி, இறுதியில் அமைச்சரை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பாகி, அவரை டெல்லி ‘இந்தியா கேட்’ எதிரே தூக்கிலிடுவதாகப் படம் முடியும்.

”இந்தப் படத்திற்கு வசனம் எழுதிய வலம்புரி ஜான் அப்போது எம்.பி.யாக இருந்ததால், அவர் மூலம் அனுமதிகள் பெற்று ‘இந்தியா கேட்’ எதிரே அமைச்சரை தூக்கிலிடுவதும், பொதுமக்கள் அவரைக் காரி உமிழ்வதுமான காட்சிகளைப் படமாக்கி விட்டோம். ஆனால், சென்ஸாரில் கடைசி வரை போராடியும் கடைசி இரண்டு ரீலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ‘ இந்திய அரசியல் சாசனப்படி யாரையும் பொது இடத்தில் தூக்கிலிட முடியாது. எனவே இந்தக் காட்சியை அனுமதிக்க இயலாது’ – என்று கூறிவிட்டார்கள்.

”இத்தனைக்கும் நான் அந்தப் படத்தில், அந்த அமைச்சருக்காகவே ஸ்பெஷலாக அரசியல் சட்டத்தில் திருத்தம் எல்லாம் கொண்டு வந்து, இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதாகவே காட்சி அமைத்திருந்தேன். கடைசியில் அதைச் சாதாரண தூக்குத் தண்டனையாக மாற்றினோம். படத்தின் நோக்கமே அடிபட்டு, படம் தோல்வி அடைந்து விட்டது” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

கலைஞர் வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இயக்கிய சில படங்களும் இது போன்ற சர்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.

“சிறு வயது முதலே கலைஞரின் தமிழும், அவரது வசனங்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இதனால் அவர் மீது எனக்கு மட்டற்ற பிடிப்பு இருந்தது. இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மனதிற்குள் ஒருவித கோபம் எழுந்தது. எனது அடுத்த படத்திற்கு கலைஞர்தான் வசனம் எழுத வேண்டுமென்று அப்போது முடிவெடுத்தேன்.

“உடனே குங்குமம் அழுவலகம் சென்று முரசொலி செல்வத்தைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவர் தயங்கினார். உடனே நான் ‘படத்தின் தலைப்பையும் கதையையும் தலைவரிடம் சொல்வோம். அவருக்குப் பிடுச்சிருந்தா எழுதட்டும்’ என்று கூறி, படத்தின் தலைப்பை அவருக்குச் சொன்னேன். வேகமாக என்னை நிமிர்ந்து பார்த்தவர், உடனே என்னை ஜெயிலுக்கு அழைத்துப் போனார்

“ஜெயிலில் கலைஞரைச் சந்தித்தேன். ‘இந்தப் படத்தின் தலைப்பையே உங்கள் மனதில் நிறுத்தித்தான் வைத்துள்ளேன். எனவே நீங்கள் தான் இதற்கு வசனம் எழுதித் தரவேண்டும்’ என்றேன். ‘என்ன தலைப்பு ?’என்று கேட்டார். நான் தலைப்பைச் சொன்னேன். நிமிர்ந்து பார்த்துப் புன்முறுவல் பூத்தார். உடனே வசனம் எழுதவும் சம்மதித்தார்”. [ திருப்பங்கள் தொடரும் ]