தனுஷின் குட்டித்தம்பி நடிக்கும் இந்திப்படம்

அனுஷ்காவை நாய் கடித்ததற்காக அனுதாபப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், அதையும் தாண்டி அனுதாபப்பட வேண்டிய செய்தி இது. தற்போது நடித்துவரும் ‘ரஞ்சானா’ இந்திப்படத்துக்காக மேலும் ஒரு ஏழு கிலோ எடை குறைந்திருக்கிறாராம் தனுஷ்.

ஏற்கனவே மெல்லிய காற்று சற்று பலமாக வீசும்போதே, ஓரஞ்சாரமாக ஒதுங்கி நின்று வந்த தனுஷ், இப்போதைய மெலிவில் அவரது கடைக்குட்டி தம்பி போல் காட்சி அளிக்கிறார்.

ஆனந்த் .எல்.ராய் இயக்கிவரும் ‘ரஞ்சானா’ படப்பிடிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கும் சில வாரங்களுக்கு முன்பு தனுஷைத்தொடர்பு கொண்ட இயக்குனர் ராய் ‘’ தற்போது நடித்து வரும் ‘மரியான்’ தமிழ்ப்படத்தை ஒரேயடியாக முடித்துக்கொண்டு வாருங்கள். அதற்குள் நான், நம் படத்தில் வரும் உங்கள் ஸ்கூல் போர்சனை, உங்களைப்போல தோற்றம் கொண்ட ஒரு பையனையும், சோனம் கபூரையும் வைத்து முடித்துவிடுகிறேன்’’ என்றாராம்.

ஏற்கனவே ‘மரியான்’ இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் கடும் கருத்து வேறுபாட்டில் இருந்த தனுஷுக்கோ ‘மரியானை’ அவ்வளவு சுலபத்தில் முடித்துக்கொடுக்க மனமில்லை. அதற்காக ஷூட்டிங் இல்லாமல் சும்மாவும் இருக்க முடியாது. உடனே ராயிடம் ஸ்கூல் போர்சனுக்கு வேறு பையனைத்தேட வேண்டாம். நீங்கள் விரும்புகிற தோற்றத்தில் இன்னும் மூன்றே வாரத்தில் நான் காசி வந்து சேருகிறேன். நீங்கள் படப்பிடிப்பை துவங்கும் வேலையைப்பாருங்கள் என்றாராம்.

அதன்படியே, தனுஷ்,கடந்த வாரம் காசியில் படப்பிடிப்புக்கு ஆஜரானபோது அசந்துபோன ஆனந்த ராய்,அவரது ஸ்கூல் பையன் தோற்றத்தைப்பார்த்து, காதல்கொண்டேன்’ க்ளைமேக்ஸ் தனுஷ் மாதிரியே உற்சாகமாகி ‘தனுஷ்யா, தனுஷ்யா’ என்றபடியே கட்டிப்பிடித்து மகிழ்ந்தாராம்.