‘விஸ்வரூப’ லேட், ’உண்மையை போட்டு உடைப்பாரா கமல்?’

‘’விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்,”

மன உளைச்சலின், மலை உச்சத்தில் இருந்துகொண்டு கமல் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை இது.

பொதுவாகவே நமது கோடம்பாக்கத்து ஆசாமிகள் 14 ரீலில் படம் எடுத்துவிட்டு, அதைப்பற்றி மேலும் பல ரீல்களில் நூல்விட்டு தான் வண்டியை ஓட்டிவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

‘விஸ்வரூபத்தை பொறுத்தமட்டில் கமல், ஏற்கனவே படத்தையே 28 ரீல் நீளத்துக்கு எடுத்து விழி பிதுங்கி நிற்கும் நிலையில், இப்போது ரிலீஸ் தாமதத்திற்காக மேலும் பல ரீல்களை விடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் ‘ஆரோ-டி’ என்று சொல்லப்படும் ’யாரோ எவரோடி?’ என்று கேட்க வைக்கும் தொழில் நுட்பம். ‘விஸ்வரூபத்தில் இந்த தொழில் நுட்பத்தை புகுத்த இருப்பதால் படம் 2013-ல் தான் ரிலீஸ் ஆகுமாம். அதுவரை படத்தைப் பற்றி வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாமாம்.

புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதற்காக, கமல் விட்டிருக்கிற இந்த நாலு மாத கேப்பில், ஒரு புதிய படத்துக்கு பூஜைபோட்டு, உலகில் உள்ள அத்தனை தொழில் நுட்பங்களையும் வைத்து ஒரு புதிய படத்தையே எடுத்து ரிலீஸ் பண்ணமுடியும் என்பதை கமல் அறியாதவர் அல்ல.

‘’ என் படம் நினைத்த பட்ஜெட்டை தாண்டிவிட்டது. சொல்கிற விலைக்கு கொள்கிற ஆள் இல்லை. நடுவில் ஏகப்பட்ட இளைஞ, கலைஞர்கள் போட்டிபோட்டு நிற்கிறார்கள். எனவே என் படத்தை 2013 பொங்கலுக்கு பொங்க வைக்க முடிவு செய்திருக்கிறேன்’’

என்று உண்மை பேசினால், அடுத்த நாலு மாதங்களுக்கு ‘விஸ்வரூபம்’ பற்றி, ராஜ்கமல் அலுவலகம் தவிர வேறு எங்கிருந்தும் நியூஸ் வராதபடி சினிமா நிருபர்கள் அனைவரும் லாங் லீவில் கூட போகத்தயார்.

’உண்மையை போட்டு உடைப்பாரா கமல்?’

பி.கு: முகப்பில் உள்ள பிரம்மானந்தத்தின் விஸ்வருப’ கெட் அப்புக்கும், ஹல்லோதமிழ்சினிமா.காம் க்கும் எந்த தொடர்பும் இல்லை. இணைய குசும்பர்களின் இணையற்ற குசும்பு அது.