’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’

கடந்த செவ்வாயன்றே பத்திரிகையாளர் காட்சியும், சினிமா பிரபலங்களுக்காக பல பிரத்தியேக காட்சிகளையும் போட்டு நாளை ரிலீஸாவதாக இருந்த ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் திடீரென காலவரையறை இன்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ’18 வயசு’ காயத்ரி ஜோடி சேர்ந்திருந்த ‘ந.கொ.ப.க’ ஒரு முழு நீள காமெடிப் படமாகும். ’முழுநீள’ என்பதை சற்று தவறாக புரிதுகொண்ட இயக்குனர் படத்தை 2மணி நேரம் 57 நிமிடங்கள் அளவுக்கு வைத்திருந்தார்.

படம் பார்த்த பிரபலங்கள் பலரும் காமெடி நன்றாக இருக்கிறது எனினும் நடுவுல கொஞ்சம் வெட்டி எறிஞ்சா இன்னும் நல்லா இருக்கும் என்று தயாரிப்பாளர் தயாரிப்பில் சொன்னதாக தெரிகிறது.

அதுவுமின்றி, இந்த வெள்ளியன்று ரிலீஸாகும் ’சாருலதா’ சாட்டை’ ஆகிய படங்கள் ஏற்கனவே பெரும்பாலான தியேட்டர்களை வேட்டையாடி முடித்துவிட்டதால் சின்னப்படமான ‘ந.கொ.ப. காணோமுக்கு அவ்வளவாக தியேட்டர்கள் கிட்டவில்லை.

நிறைய பிரிவியூக்கள் போட்டதால், பரவிய மவுத் டாக்கை வைத்து, இந்தப்படத்தை ஒரு பெரிய நிறுவனம் மொத்தமாக விலைக்கு வாங்கி,படத்தில் ஒரு முக்கால் மணிநேர நீளத்தை குறைத்து, பெரிய அளவில் வெளியிட இருக்கிறது என்கிற ஒரு செய்தியும் கோடம்பாக்க வீதிகளில் குய்யோ முறையோ என்று நடமாடுகிறது.

நடுவுல கொஞ்சம் சீனைக் காணோம்.