விமர்சனம் ‘சாருலதா’ ‘நீ சரியான போரு லதா

இப்போதெல்லாம் டைட்டில் கார்டுகளில் இடம்பெறும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது.

சன் டிவியின் சரத் சக்ஸேனா வாங்கிய முதல் தமிழ்ப்படம் என்று சொல்லப்பட்ட ‘சாருலதா’வில், அவருடன் சிறைசென்ற ஐயப்பன்,

ராதாகிருஷ்ணன் தொடங்கி சாக்ஸ் வரை படத்தை வழங்கியர், வழங்கியதால், நன்றியுடன் கண் கலங்கியவர் என்று தயாரிப்பாளர்கள் கார்டு பார்த்து முடிவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

‘அலோன்’ என்ற தாய்லாந்து நாட்டு படத்தின் சற்றே நட்டு கழண்ட KNOT’ தான் ’சாருலதா’

சாரு, லதா ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள். ஒரு வயலின் கிளாஸுக்குப் போகும்போது, நாயகன் ஸ்கந்தாவை இருவருமே காதலிக்கத் துவங்கிவிடுகிறார்கள். நாயகனோ லதாவை மட்டும் லவ் பண்ண, டென்சனாகும் சாரு, வேறு ஒரு முடிவெடுத்து அந்த காதலுக்கு ஒத்துழைக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை மூண்டு அதில் ஒருவர் ரிடர்ன் டிக்கட் விடுகிறார்.

இறந்தவர், உயிரோடு இருப்பவர்களின் காதலை, ஆவியாக வந்து, ஏற்கனவே பல படங்களில் பார்த்த, கொட்டாவி விடவைக்கும் டெக்னிக்குகளோடு டார்ச்சர் பண்ணுகிறார்.

கடைசியில் செத்தது சாரு இல்லை. ஆனால் அது வேறு யாரு? என்று ஒரு ட்விஸ்ட் வைத்து போரான கிளைமாக்ஸுடன் படத்தை முடிக்கிறார்கள்.

ஒட்டிப்பிறந்தவர்கள் என்பதற்கு ரொம்பவும் மெனக்கெடாமல், இருவரையும் கட்டிப்பிடித்த படியே நடக்கவிட்டு சமாளித்திருக்கிறார்கள். முதல் பாதியில் கண்ணாடி போட்டிருப்பவர் பிரியா. போடாதவர் மணி. இரண்டாவது பாதியில் கண்ணாடி போட்டிருப்பவர் சாரு. போடாதவர் லதா. குழப்பமாக இருக்கிறதா, படம் பார்த்தால் இன்னும் அதிகமாக குழம்புவீர்கள்.

கதாநாயகன் ஸ்கந்தா. முன்னப்பின்ன பார்த்திராத முகம். இனியும் அவர் அப்படியே இருந்துகொள்வதாக உத்தரவாதம் அளிக்க முன்வருவாரேயானால் அவர் நடிப்பைப்பற்றி விமரிசிக்காமல் விட்டுவிடலாம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் சீத்தா. ஆண்ட்டி என்ற சொல்லுக்கு அத்தனை அர்த்த புஷ்டியுடன் திகழுகிறார். பார்த்திபன் பார்த்தால், மீண்டும் காதல் வசப்படும் ஒரு வாய்ப்பு கூட இருக்கிறது.

ஒளிப்பதிவு எம்.வி. பன்னீர்ச்செல்வம். ‘சத்திரியன்’ படத்தில் திலகன் பேசிய வசனத்தைக் கேட்டுவிட்டு இப்படத்தின் படப்பிடிப்புக்கு போயிருப்பார் போல. ‘மறுபடியும் ஆ பழைய பன்னீர்ச்செல்வமாகவே வந்திருக்கிறார். வெல்டன் பன்னீர்.

இசை ரொம்ப நாள் கேப்புக்குப் பிறகு, சுந்தர்.சி.பாபு.

’தாய்லாந்து படத்துல ரீ.ரெகார்டிங்கை சுட்டதுல தப்பில்ல. ஆனா பாட்டு டியூனையும் விட்டு வைக்கலையே பாபு. கேக்குற பாவி மக்க நெஞ்சு துடிக்குது’.உன்னையும் உன் மியூசிக்கையும் பத்தி ஊருசனம் கும்மி அடிக்குது.

இயக்குனர் பெயர் பொன்குமரனாம். இப்போது திரையுலகிலிருக்கிற, பல திருட்டு டி.வி.டி. தீவட்டி தடியன்களுக்கு மத்தியில், தாய்லாந்து மொழி ‘அலோன்’ படத்தின் கதையை தழுவிதான் ‘சாருலதா’க்களை எடுத்தேன்’ என்று நேர்மையாக ஒப்புக்கொண்டதற்காக அவரைப் பாராட்டலாம்.

பட்,பாராட்டை மட்டும் வச்சி எப்பிடி கஞ்சி குடிக்கமுடியாதோ, அதே மாதிரி, நேர்மையை மட்டும் வச்சி படத்தை ஓட்டமுடியாதே பாஸ்.