முகமதுவாக தோன்றும் நடிகர்

கடந்த ஜூலை மாதம் இணையத்தில் யூ ட்யூபில் தி இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’(The Innocence of Muslims) ‘சாம் பெஸில்ஸ் தி முகமத் மூவி’ (Sam Bacile’s The Muhammed Movie) என்கிற பெயர்களில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் தான் புதிதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ள சினிமா.
14 நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் (ஒரிஜினல் படத்திலிருந்து கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் வெர்ஷன் இது என்கிறார்கள்) முன்னெப்போதும் இல்லாததை விட மிக வெளிப்படையாக படத்தின் ஹீரோவாக முகமது என்கிற பெயரிலேயே பாத்திரம் இருப்பதுடன், குரானை இழிவுபடுத்தியும் வசனங்கள் பேசப்படுகின்றன.

முகமது நபியை கள்ள உறவினால் பிறந்தவராகவும், பெண் பித்தராகவும், குழந்தைகளுடன் உறவு கொள்பவராகவும், ஓரினச் சேர்க்கையாளராகவும், செல்வத்துக்காக கொலைகள் செய்யும் கொள்ளைக்காரராகவும் இன்னும் என்ன என்ன விதமாக கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாகச் சித்தரித்திரிக்கும் படம் இது.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு போலீஸ்காரன் சொல்வது போல ஆரம்ப வரிகளில் ‘முகம்மது நபி 61 மனைவிகள் வைத்திருந்தார். நானும் என் ஆஸ்பத்திரியில் இருக்கும் என் மனைவி இறந்துவிட்டால் உடனே இன்னொரு இளம் பெண்ணை நாளையே கல்யாணம் செய்து கொள்வேன்’ என்கிறான்.

குரானை பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து முகமதின் மனைவி பகுதிகளை எடுத்து தொகுத்தார் என்று ஒரு காட்சியில் வருகிறது. முதல் முஸ்லீம் ஒரு கழுதை என்று காட்டுகிறார்கள். அந்தக் கழுதையுடன் முகமது பேசுகிறார். இதையெல்லாம் விடக் கேவலமாக படுக்கையறைக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் என் எதிரிகள் என்று எல்லோரையும் முகமது நபி கொன்றொழிக்கிறார். இஸ்லாமியர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கைகளையும், அவர்களது சகோதரத்துவத்தையும், முகமது நபியையும் மிகவும் இழிவுபடுத்துகிறது இந்தப் படம். அத்தோடில்லாமல் ‘மேன் + எக்ஸ் = இஸ்லாமிக் டெர்ரரிஸம்’ என்று அமெரிக்கா உலகெங்கும் கூறும் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற வாதத்தையும் அப்படியே இம்மி கூட மாற்றாமல் கூறுகிறது.

இப் படம் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன் மிக வேகமாகப் பரவி இஸ்லாமிய நாடுகளை மிகக் கொதிப்புக்குள்ளாக்கியது.

மருத்துவமனையை எரிக்கப் போகும் எகிப்தியர்கள்
மருத்துவமனையை எரிக்கப் போகும் எகிப்தியர்கள்
செப்டம்பர் 8ம் தேதி இதன் சில துணுக்குகள் 2 நிமிடநேரத்திற்கு எகிப்து நாட்டில் ஒரு இஸ்லாமிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. எகிப்து நாடு முழுதும் இந்த சினிமா மற்றும் அதை வெளியிட்ட அமெரிக்கா மீது கடும் கோபம் எழுந்தது. .

எகிப்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். செப்டம்பர் 11 அன்று எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஒரு தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

எகிப்து, சூடான், துனீசியா, பாகிஸ்தான், யேமன், நைஜீரியா, லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தியாவில் காஷ்மீரிலும், வட இந்திய மாநிலங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே இஸ்லாமிய மற்றும் மனித நல்லிணக்க இயக்கங்கள் சேர்ந்து அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
இப்படத்தை இணையத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தடைசெய்திருக்கிறது கூகுள் நிறுவனம். ஆனால் இந்தியாவில் இன்னும் இப்படத்தைப் பார்க்கலாம்.

இது பற்றி அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் ஹில்லாரி கிளின்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறுவறுக்கத்தக்க வீடியோவினால் அமெரிக்க வெளியுறவுத் தூதகரங்கள் தாக்கப்படுகின்றன” என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்.

எகிப்தில் இறந்து போன தூதர் மற்றும் மூன்று அமெரிக்கர்களுக்கான நினைவுக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க தூதரகங்களின் மீதான தாக்குதல்களை அமெரிக்கா உறுதியுடன் எதிர்க்கும் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருமே பட்டும் படாமலும் பதில் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

படத்தை தயாரித்தது யார்?

இப்படத்தின் தயாரிப்பு மற்றும் தயாரிப்பாளர் சம்பந்தமான செய்திகள் இப்படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் பற்றி மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

தலைமறைவாகிவிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்-மற்றும் இயக்குநரான நக்கௌலா பாசில்லி நக்கௌலா(Nakoula Basseley Nakoula) என்பவரை அமெரிக்காவின் எப்.பி.ஐ(FBI) இனம் கண்டிருக்கிறது. 55 வயதாகும் நக்கௌலா எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்கக் குடியரசு உரிமை பெற்றுள்ளார். அவரைப் பேட்டி கண்ட எப்.பி.ஐயிடம் அவர் சொன்ன தத்துவ முத்து “இஸ்லாம் உலகைப் பற்றிக் கொண்ட கேன்சர்”. (கவனியுங்கள் இவ்வளவு கலவரங்களுக்கும், மரணங்களுக்கும் காரணமான அவரை எப்.பி.ஐ கைது செய்யவில்லை. மாறாக பேட்டி காண்கிறது.)

கலிபோர்னியாவில் பெட்ரோல் பங்க் நடத்திக்கொண்டிருந்த நக்கௌலா வரி ஏய்ப்பினால் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒரு முறை போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் அவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் இருந்த அவர் மஞ்சள் கடுதாசி கொடுத்ததால் கடந்த ஜூன் 2011 ல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் இவர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியதாகவும், இப்படத்தைத் தயாரிக்க இவருக்கு யாரோ பெயர் தெரியாத ஒரு இஸ்ரேலிய பணக்காரர் 5 மில்லியன் டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் கூறுகிறார். 5 வருடங்களுக்கு இன்டெர்நெட் மற்றும்

ரத்தச் சகதியில் இஸ்லாமியரின் ஹீரோ
ரத்தச் சகதியில் இஸ்லாமியரின் ஹீரோ
கம்ப்யூட்டர்கள் உபயோகிக்கக் கூடாது என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்த இவர் வெளிவந்த உடனே இப்படத்தை எடுத்திருக்கிறார். கலிபோர்னியாவிலிருந்த தனது வீட்டிலேயே செட் போட்டு கம்ப்யூட்டர் முறையில் பேக்ரவுண்டு வைத்து (நம் டி.விக்களில் காம்பியரிங் பண்ணுபவர்கள் பின்னால் கிராபிக்ஸாக தூண்கள், சிற்பங்கள், படங்கள், கடல் வானம் என்று தெரியுமே!!.. அதே டெக்னிக் தான்).

இப்படத்தில் நடித்த 80 நடிகர் நடிகையர்களிடம் தொடர்பு கொண்டு இப்படத்தில் எவ்வாறு இப்படி நடித்தீர்கள் என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் தாங்கள் நடித்த திரைக்கதை இது அல்ல என்று உறுதியாக மறுக்கின்றனர். தங்களுக்கு சொல்லப்பட்ட கதையில் இஸ்லாமியப் பெயர் எதுவுமே இல்லை என்கின்றனர். படம் எடுக்கும் போது கதாநாயகனின் பெயர் ‘மாஸ்டர் ஜார்ஜ்’ என்று கூறப்பட்டு டப்பிங்கில் ‘முகமது’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது போல மற்ற எல்லாமே மாற்றப்பட்டுள்ளன.

முகமதுவின் மனைவியாகப் போகும் பெண்ணின் தாயாக நடித்த கார்ஸியா (Garcia) என்பவர் கூறுகையில் ‘இப்படத்தைப் பற்றி இயக்குனராக ஷூட்டிங் ஸ்பாட்டில் அறியப்பட்ட பெஸில் எங்களிடம் இது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட எகிப்து பற்றிய படம் என்று கூறினார்’ என்கிறார்.

இப்படம் ஒரே ஒரு முறை கடந்த ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தியேட்டரில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சுமார் பத்து பேரே அந்தக் காட்சியில் அப்படத்தை பார்த்திருக்கின்றனர். அப்போது இத்திரைப்படத்தின் டைட்டில் தி இன்னொஸன்ஸ் ஆப் ஒசாமா பின்லேடன் ‘The Innocence of Osama Bin Laden’ என்று இருந்திருக்கிறது. அந்தத் திரைப்படத்தை பார்த்த ஒருவர் கூறுகையில் “படம் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிப்பு மற்றும் எல்லா அம்சங்களிலும் மிக மோசமான படமாக இருந்தது. ஆனால் முகமது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. படம் மிக மோசமாக இருந்ததால் நான் பாதியில் எழுந்து வந்து விட்டேன்”.

பின்னர் இதே படம் தலைப்பு மாற்றப்பட்டு, டப்பிங் செய்யப்பட்டு உரையாடல்கள் இஸ்லாமை இழிவு படுத்தும் வாசகங்களாக மாற்றப்பட்டு அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சில இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் இப்படத்தை வரவேற்றுள்ளன. ப்ளோரிடாவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ்(Terry Jones) என்கிற கிறித்தவப் பாதிரியார் இப்படத்தை தனது சர்ச்சில் திரையிடப்போவதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2010ல் இருநூறு குர்ரான் புத்தகங்களை தனது சர்ச் வளாகத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி உலகெங்கும் பிரச்சனையைக் கிளப்பியவர்.

காரணம் என்ன?
இவ்வாறு அடிக்கடி மதத் துவேஷ பிரச்சனைகளை கையில் எடுப்பதில் ஆளும் வர்க்கங்கள் சளைப்பதேயில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் பிரான்சில் ஒரு பத்திரிக்கையாளர் முகமதுவைக் கார்ட்டூனாக வரைந்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய போது பிரான்சில் இன்னொரு பத்திரிக்கை அதே படங்களை வேண்டுமென்றே மீண்டும் வெளியிட்டது. பத்திரிக்கைச் சுதந்திரத்தை யாருக்காகவும் நாங்கள் விட்டுவிடமாட்டோம் என்று மார்தட்டியது அந்தப் பத்திரிக்கை. (ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் ஈராக்கியர்களைப் பற்றி வாயே திறக்காதிருந்த அந்தப் பத்திரிக்கையின் சுதந்திரத்தை என்னவென்பது? ஈராக்கிற்கு அனுப்பும் நேட்டோ படைகளில் பிரான்சின் படைவீரர்களும் உண்டு).

மற்ற மதங்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது இஸ்லாமிய மதம் உருவ வழிபாட்டை கண்டிப்பாக மறுக்கிறது. கடவுளின் ஒரே தூதர் எனப்படும் முகம்மது நபிக்குக் கூட உருவ வழிபாடு கிடையாது என்பது அம்மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாடாகும். கிறித்துவ மதத்தின் இயேசுவோ அல்லது மற்ற எந்தக் கடவுளோ இவ்வளவு அழுத்தமாக உருவ வழிபாட்டுக்கு எதிராகச் சொல்லாததால் இயேசுவை கதாபாத்திரமாகக் கொண்ட கிறித்துவ ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துப் படங்கள் நிறைய வந்துள்ளன. இயேசு குழந்தை ஏசுவிலிருந்து சிலுவையில் சுமந்து சாவது வரை பல வடிவங்களில் வரையப்பட்டுள்ளார், செதுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இங்கு நபிக்கு உருவம் கொடுப்பதே மதத்திற்கு அதன் அடிப்படைக்கு மாற்றானது என்னும் போது இதில் தலையிட எந்த பத்திரிக்கை அல்லது ஊடகமானாலும் அதற்கு உரிமையில்லை.

அதற்காக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியருக்கு எதிரான எவையுமே அனுமதிக்கப்படவில்லையா என்ன? முகமது மற்றும் குரானைப் பற்றி அவதூறாகப் பேசாத எல்லா வகையான விடுதலைக் கருத்துக்கள் மற்றும் இஸ்லாமின் மீதான எதிர் விமர்சனங்களை, தாக்குதல்களை சரியோ தவறோ இஸ்லாம் மக்கள் எதிர்கொள்கின்றனர். பதில் தருகின்றனர்.

உருவம் இல்லாத பொருளை மனிதனால் புரிந்து கொள்வதோ அதன் மீது கருத்துக்கள் ஏற்றுவதோ கடினமான காரியமாகும். கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் என்றாலும் அதற்கும் ஒரு குறியீடு வைத்துத் தான் அதை நாம் விளங்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் தான் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத இறைவன் மற்றும் அவரது தூதர் நபிகளை உருவம் கொடுத்து தங்கள் சுதந்திர ‘தாகத்தை’ தீர்த்துக் கொள்கின்றனர் இந்த விடுதலை டவுசர்கள்.

நோக்கம் என்ன?
சரி அமெரிக்காவும் இப்படி மதத்துவேஷத்தைக் (குறிப்பாக இஸ்லாமிய மதத்துவேஷத்தை)கிளறி விட்டு குளிர் காய்வதன் நோக்கம் என்ன?
உலகப் பொருளாதார நெருக்கடி.
அமெரிக்கப் பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியால் மேலும் சிதைவுண்டு போயிருக்கிறது. அமெரிக்காவில் உலகின் பெரும் பணக்காரர்களில் முன்னிலை ஆட்கள் பலர் இருந்தாலும் அவர்கள் தங்களது பணத்தால் அதன் பொருளாதாரத்தை காப்பாற்றும் மூடில் இல்லை. அங்கு சாதாரண மக்கள் மேலும் நசுக்கப்பட்டு பிழியப்பட்டு பணமின்றி வாழ வாழ்வின் எல்லைகளை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். அந்த நெருக்கடிக்குக் காரணம் இந்த அரசும் அதை பின்னிருந்து ஆட்டுவிக்கும் இந்த மெகா கார்ப்பரேட்டுகளும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்தால் என்ன ஆகும் ? ஒபாமா நாட்டை விட்டே ஒட வேண்டிய நிலை வரும். எனவே நான் திருடன் என்பதை மறைக்க வேறொரு ஆளை கைகாட்ட வேண்டும்.

பாங்க் வாசலில் பத்து ரூபாய்த் தாளை கீழே போட்டுவிட்டு ‘சார் பத்து ரூபாயை கீழே விட்டுட்டீங்க சார்’ என்றதும், அவர் குனிந்து அதை எடுக்கையில் அவர் கைப்பையில் வைத்திருந்த லட்ச ரூபாய் திருடப்படும்.

அதே டெக்னிக்தான் இது. மக்களை தம் சொந்தப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப.. திருடனை தப்ப விட.. அப்பப்போ இப்படி படங்களும், திமிர்ப் பேச்சுக்களும் வருகின்றன. வரும். அதைத் தொடர்ந்து கலவரங்கள் வரும். தலைகள் உருளும். உயிர்கள் பலியாகும். முடிவில் “இஸ்லாம் மதமே தீவிரவாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்” என்ற கருத்தாக்கத்தில் முடியும். அதுவே அவர்கள் விரும்புவது. அதுவே நடக்கிறது.

மேலும் அமெரிக்கா இனி போர் தொடுத்து ஆக்கிரமிக்கப் போகும் எண்ணெய் வளம்மிக்க அடுத்த இஸ்லாமிய இலக்கு(target) நாடு எதுவோ அதன் மீது போர்த் தொடுக்கும் முன் அந்நாடும் அதன் மக்களும் கொஞ்சம் கூட சகிப்புணர்வு இல்லாத காட்டுமிராண்டிகள்,

அமெரிக்கக் கொடியை எரித்துப் போராட்டம்
அமெரிக்கக் கொடியை எரித்துப் போராட்டம்
(இஸ்லாமியத்) தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று உலக மக்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தும் வேலையை இது போன்ற பிரச்சனைகள் செய்யும்.
ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் போன்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் போரும், அதன் வெற்றியும் அவற்றின் எண்ணைக் கிணறுகள் அமெரிக்காவின் வாய்க்குள் போனதும் ஆகிய எல்லாமும் நியாயப்படுத்தப்படும்.

இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். அதில் ஒபாமா செய்த தவறுகள். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள். மக்களிடமிருந்து பறித்த உரிமைகள் எல்லாம் மறக்கப்படும். இஸ்லாமிய நாடுகளின், இஸ்லாமிய தீவிரவாதத்தின் ‘அச்சுறுத்தலும்’ முன்னிறுத்தப்படும். எகிப்து அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதை வேண்டுமென்றே செப்டம்பர் 11 ஆம் தேதி நடக்கவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் இறந்து போன அமெரிக்கத் தூதரும் மற்ற அமெரிக்கர்களும் ஒசாமா பின்லேடனின் செப்டம்பர் 11 கதையை தொடர்ந்து நீட்டிக்க அமெரிக்கா உருவாக்கிக் கொண்ட ஒரு நல்ல வாய்ப்பு.

ஆனால் மறைமுகமாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் கை இருப்பதாக சந்தேகிக்கக் கூடிய இந்தச் சினிமாவின் வெளியீடும் அதையொட்டி நடக்கும் விஷயங்களும் இஸ்லாமிய நாடுகளனைத்தையும் இன்றில்லாவிடில் மற்றொருநாள் சகோதரர்களாக ஒன்றிணைத்துவிடும் என்பதும் அன்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற கார்ப்பரேட் வல்லரசுகளின் கூட்டுக்கு வலுவான ஒரு எதிரணியாக உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டு அமைந்துவிடும் என்பதும் ஒரு சாத்தியமே.

இவ்வளவு சமூக விரோதமான இந்தப் படத்தை இங்கு காணும்படி இணைக்க நான் விரும்பவில்லை. எனவே இந்த இணைப்பில் (link) யூட்யூப்பில் சென்று இந்தத் திரைப்படத்தை காணவிரும்பினால் காணுங்கள்.

—அம்பேதன் (ambedhan.blogspot.in)

தூதரகத்தின் முன் தர்ணா போராட்டம்
தூதரகத்தின் முன் தர்ணா போராட்டம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.