மீரா நாயரின் உன்னத தருணம்

மீரா நாயர்

‘சலாம் பாம்பே’ படப் புகழ் இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள புதிய படமான ‘தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்’(The Reluctant Fundamentalist) என்கிற படம் முதல் முறையாக இந்த வாரம் நடந்த வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.

மூன்று தடவை திரையிடப்பட்ட இப்படத்தை சுமார் மூவாயிரம் பேர் பார்த்தனர். ஒவ்வொரு தடவை காட்சி முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று சுமார் 12 நிமிடங்கள் தொடர்ந்து கரகோஷம் செய்துள்ளனர். பார்வையாளர்களை ஈர்த்த படமாக இது இருந்தது.

தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட், அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டின் கார்ப்பரேட் உலகில் காலூன்றி வெற்றி பெற விரும்பும் ஒரு பாகிஸ்தானி இளைஞனின் வாழ்வு அவனது அமெரிக்கக் கனவிற்கும், தாய் நாட்டு நினைவிற்கும், ஒரு கடத்தல் நிகழ்விற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நிலையைப் பற்றிய படம்.

நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் மீரா நாயரின் இன்னொரு சிறந்த படமாக இருக்கும். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது
“இந்தப் பட விழாவில் படத்தின் மீதான வரவேற்பு பற்றி மிகவும் படபடப்பாக இருந்த என்னை என் மகன் சோஹ்ரன்(Sohran) தான் தேற்றினான். கவலைப்படாதே அம்மா. உனது படம் கண்டிப்பாக கவனம் பெறும். அவன் சொன்னதுபோலவே நடந்தது.

இறுதி நாள் விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் நான் அமர்ந்திருந்த போது என்னை நோக்கி ஒரு வயதான பெண்மணி நடந்து

தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்

தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்

வந்தார். என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்தான் தெரஸா ரிக்கி(Teresa Ricci) – புகழ் பெற்ற பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்(Battle of Algiers) படத்தின் இயக்குனர் ஜில்லோ பான்டகார்வோவின்(Gillo Pontecorvo) மனைவி.

அவருடைய கணவரின் அந்தப் படம் தான் என்னுடைய ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்டின் முக்கியமான கருத்தாக்கத்துக்கு அடிப்படை என்று நான் சொல்வதற்குள் அவர் சொன்னார்.. ‘என்னுடைய கணவரின் ஆன்மா இந்தப் படத்தில் வாழ்கிறது’ என்று.

இதைவிடப் பெரிய பாராட்டுதல் எனக்கு ஒருபோதும் கிடைத்துவிடப் போவதில்லை. என் வாழ்வின் உன்னத தருணம் இது” நிறைவோடு கூறுகிறார் 55 வயதாகும் மீரா நாயர்.