விமர்சனம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’- ’வாவ் வாட் எ லவ்லி டைரக்டர்’

விசா வாங்குவதற்காக அமெரிக்க தூதரகத்தின் கவுண்டரில் நிற்கும் ஸ்ரீதேவியிடம், அந்த தூதரக அதிகாரி கேட்கிறார், ‘’ இங்கிலீஸ்ல இவ்வளவு ததிங்கணத்தோம் போடுறியே, எங்க அமெரிக்காவுல போய் எப்பிடி சமாளிக்கப்போற?’

தற்செயலாக அந்த அறைக்குள் நுழையும் நம் ஊர் அதிகாரி, ‘’யோவ் தமிழே தெரியாம நீ எங்க ஊர்ல வண்டி ஓட்டல? அதுமாதிரிதான். குடுத்தனுப்புய்யா விசாவை’’

16 வருட இடைவெளிக்குப்பின், ஸ்ரீதேவியை கதை நாயகியாகக்கொண்டு இந்தியும், தமிழும் பேசி வந்திருக்கும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் ஒருபானை ஒரு சோற்றுக் காட்சிதான் மேற்படி.

‘பா’ லிவுட் இயக்குனர் நம்ம பாலகிருஷ்ணன் என்ற பால்கியின் துணைவியார் கவுரி ஷிண்டே இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘இ.வி’யை ஒரு செல்லுலாய்ட் சித்திரம் என்றுதான் சொல்லவேண்டும்.

மெத்தப்படித்த கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார். பிள்ளைகள் இங்கிலீஷில் பொழந்து கட்டும் பெரிய பள்ளிகளில் படிக்கிறார்கள். அவ்வளவாக ஆங்கிலப்பரிச்சயம் குடும்பத்தலைவி ஸ்ரீதேவியோ அவர்களுக்கு பணிவிடை செய்தது போக, தனது சொந்த ஆர்வத்தில், வீட்டிலேயே லட்டு தயாரித்து, அண்டை அயலார்களுக்கு விற்கிறார்.

ஆங்கிலம் தெரியாத அம்மாவை பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். கணவரும் கூட தன் மனைவி ‘லட்டு பிடிக்க’ பிறவியெடுத்த மாதிரியே நடத்துகிறார்.

இந்த சூழ்நிலையில் தன் அக்கா மகள்களின் கல்யாண உதவிக்காக, கணவர், பிள்ளைகள் செல்வதற்கு நான்கு வாரங்கள் முன்னதாகவே தனியாக அமெரிக்கா செல்லவேண்டிய நிர்பந்தம் தமிழ்தேவிக்கு ஏற்படுகிறது. இங்கிலீஷ் தெரியாததால் அங்கே இன்னும் கொஞ்சம் இம்சைகளை சந்திக்க நேரிட, சீறுதேவியாக மாறி, ‘நான்கே வாரங்களில் இங்கிலீஷ் பேசுவது எப்படி? கிளாஸில் சேருகிறார் ஸ்ரீதேவி.

அங்கே வகுப்பில் இவரைப்போலவே ஏழெட்டு நாட்டுக்காரர்கள், இதே பஞ்சாயத்தோடு படிக்க வந்திருக்க, கூத்தும் கும்மாளமும், ஐம்பதிலும் ஆசை வரும் ஒரு காதலும், கொஞ்சம் கண்ணீருமாய்ப் போகிறது கதை.

ஏகப்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் இருப்பினும், முதல் படத்தில் இப்படி ஒரு முத்திரையா?

தொழில் நுட்பத்திலும், படத்தின் அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாக நடிக்க வைத்ததிலாகட்டும் கவுரி யூ ஆர் ஸோ ப்ரைட் அண்ட் கிரேட்.

மெலிந்த தோற்றத்தின் மூலம் படத்தின் துவக்கத்தில் நம்மை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்ரீதேவி, கதை நகர நகர, சஷியாகவே மாறி, நடிப்பில் நான் எப்போதும் ராட்சஷி என்கிறார்.

படத்தின் க்ளைமேக்ஸுக்கு எப்போதுமே, நாடகத்தன்மையை கொஞ்சம் அதிகப்படுத்தவேண்டி இருக்கிறது. ஆனால் ‘இ.வி’யில், கடைசியில், ஸ்ரீதேவி இங்கிலீஷில் பொழந்து கட்டுவாரென்று பார்த்தால், நாலு வாரம் படித்த படிப்புக்கேற்ற மிக சுமாரான இங்கிலீஷ் பேசி, கண்ணில் நீர்முட்ட வைக்கிறார்.

விமானத்தில் ஸ்ரீதேவியின் பக்கத்து சீட் பயணியாக ஒரே காட்சியில் வரும் ’தல’ தோற்றத்திலும் நடிப்பிலும் மலைக்கவைத்துவிட்டுப்போகிறார்.

ரெகுலர் பேட்டர்ன்களை விட்டு,அங்கங்கே சின்னச்சின்ன தூறல்கள் போல் பாடல்கள் மற்றும் துள்ளலான பின்னணி இசையுடன் மனசை அள்ளுகிறார் அமித் த்ரிவேதி. [ஆனாலும் உங்க ஹஸ்பண்ட் மாதிரியே அடுத்த படத்துக்கு எங்க இசைஞானிகிட்ட வந்துருங்க மேடம்]

லட்சுமண் உதேத்கரின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பக்கபலம்.

நல்ல படங்கள் குறைந்து, திருட்டு டிவிடியில் திருடி படம் பண்ணுபவர்களே பெரிய இயக்குனர்களாக ஆகிக்கொண்டிருக்கும் பேராபத்து நிகழ்ந்துவரும் வேளையில், நம் பெற்றோருக்கும் நமக்கும் இடையில் நாளும் நிகழ்ந்து வரும் ஒரு உணர்ச்சிகரமான விஷயத்தை திரையில் எழுதிய கவுரி ஷிண்டேவை, ஒரு பூங்கொத்து கொடுத்து அல்ல, ஒரு பூந்தோட்டத்தையே,அவர் பெயருக்கு எழுதிவைத்து வரவேற்கிறோம்.

எப்ப ஃப்ரியா இருக்கீங்களோ அப்ப அந்த பூந்தோட்டத்துக்கு, ‘ரெஜிஸ்ட்ரேஷன்’ வச்சிக்கலாம் மேடம். ஆனா உங்கள எங்க ஃப்ரியா விடப்போறாங்க?