’விமர்சனம்’ பிட்சா- ‘கட்சா’ ஒரு நல்ல த்ரில்லர் எடுத்திருக்காங்க பாஸ்

apit

 இந்தப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெயிலரும், போஸ்டர் டிசைன்களும், இது என்னவிதமான படம் என்று எந்தவிதமான யூகங்களுக்கும் இடம் அளித்திருக்கவில்லை.

தியேட்டருக்குள் நுழையப்போகுமுன் தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட ஒரு துண்டு

அறிக்கைதான்பிட்சாஒரு த்ரில்லர் படம் என்பதாகவும், மற்றவர்களும் சுவாரசியமாக பார்க்கவேண்டுமென்பதால், தயவு செய்து கதையில் நடக்கும் திருப்பங்களை வெளியில் சொல்லவோ, எழுதவோ வேண்டாம் என்ற கோரிக்கையுடன் இருந்தது.

இங்கே சிறுநீர் கழிக்காதேன்னு எழுதிவச்சா, அதே இடத்துல அஞ்சி நிமிஷத்துக்கு அசராம பெரும்நீர் கழிக்கிற தமிழ் சமூகமாச்சே, கதையை வெளியே சொல்லாதீங்கன்னு நீங்க கோரிக்கை வச்சா நாங்க கேட்டுருவமா?

இன்னொருபக்கம் விமர்சனம்ங்கிற பேர்ல நாங்க முக்கால்வாசி பக்கத்துல கதையை எழுதிதான காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். அதுலயே கைவச்சீங்கன்னா?

கல்யாணம் தான் கட்டிக்காம லிவிங் டுகெதராக வாழும் விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீஷனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் பேத்தியான ரம்யாபிட்சாஎன்ற பெயரில் ஒரு மொக்கை திகில் கதை எழுதி வருகிறார். இன்னொரு குட்டித்திகிலாக, காண்டம் கம்பெனியின் உற்பத்திக்குறைபாட்டால், ரம்யாவின் வயிற்றில் ஒரு குழந்தையும் கருவாகி உருவாகிறது.

பிட்சா டெலிவரிபாயாக, போதாத சம்பளத்தில், வேலை பார்க்கும் விஜய் சேதுபதியின் கையில், ஒரு நாள் அவரது முதலாளி சாக்லேட் டப்பாவைக் கொடுத்து, அதை தனது வீட்டில் தந்துவிடச் சொல்ல, சின்ன விபத்தில் சிக்கும் சேதுபதி சட்டையை மாற்றிக்கொள்ள தன் வீடு செல்ல… அங்கே விஜய் சேதுபதியும்,ரம்யா நம்பீஷனும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும் சேர்ந்து நடத்தும், நாடகத்துள் நாடகம் தான் த்ரில்லிங்கான பிட்சா. நல்லா பாத்துக்கங்க நான் கதையை சொல்லலை..

1967-ல் வந்தஅதே கண்கள்’-க்கு அப்புறமாய், படத்தின் பல காட்சிகளில் ஜிவ்வென்று மண்டை சூடாகிற அளவுக்கு, இப்படி ஒரு த்ரில்லர் படம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்றே பயந்தபடி சொல்லலாம்.

விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீஷனும் அப்படியே அச்சு அசல் காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவேளை அப்படியே வாழ்ந்து வந்ததால், படத்திலும் அது வந்ததோ? [ஏதோ நம்மளால முடிஞ்ச திகிலு, அவங்களுக்கு மட்டும் ]

ஏற்கனவே சில ஓடாத படங்களில் நடித்ததால் தமிழ்சினிமாவால் கைவிடப்பட்ட ரம்யாவை, இனி ஒரு எழுத்து சேர்த்துப்போட்டு ரம்மிய நம்பீட்சா என்றே கூட அழைக்கலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்கவே மனசை அள்ளுகிறார்.

சேதுபதியை ஒரு பேய் பங்களாவில் அடைத்துப்போட்டுவிட்டு,நாமளே போய் ரம்யா கூட ரம்மி ஆடிவிடலாமா என்கிற சபலமும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாட்டு மாதிரியே இல்லாத பாட்டுக்கள் போட்டிருக்கும், சந்தோஷ் நாராயணனின் இசையும், மழைக்காட்சிகளில் நம் மீது சாறலை உணரவைக்கும் அமர்நாத்தின் ஒளிப்பதிவும் அபாரம். வெல்கம் பாய்ஸ்.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜைப் பத்தி, ஒரு பத்துவரி பாராட்டி எழுதுன, கடைசி பாராவை மட்டும் மறுபடியும் மறுபடியும், ஏதோ உருவம், இந்த விமர்சனதுக்குள்ள புகுந்து டெலீட் பண்ணிக்கிட்டிருக்கே.. அய்யோ யாராவது வந்து காப்பாத்துங்க.

apit1