ஆயாளும் ஞானும் தம்மில்’ (A yalum Njanum Thammil)

அய்யாளும் நானும்

‘மீச மாதவன்,சாந்துபொட்டு’, ‘அச்சனுறங்காத வீடு’, ‘அரபிக்கத ‘, ‘நீலத்தாமர’, ‘ஸ்பானிஷ் மசாலா’ ‘எலிசம்மா என்ற ஆண்குட்டி’  போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் லால்ஜோஸ் இயக்கத்தில் புதிதாய் வந்திருக்கும் மலையாள படம் ‘ ஆயாளும் ஞானும் தம்மில்’
 (A yalum Njanum Thammil)

நான் பார்த்த லால் ஜோசின் முந்தைய படங்களை விட  ஆழமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், கச்சிதமான காட்சியமைப்பு என்று
மலையாள சினிமாவை மீண்டும் ஒருபடி தூக்கி நிறுத்தி இருக்கிறது இந்த படம்.

படம் பார்க்க போன போது தெருக்களில் மழை கொட்டிக் கொண்டிருந்ததாலோ என்னவோ.
படம் ஆரம்பித்ததும்  திரைக்குள்ளும் ஒரே அடை மழை.

மழையில் நனைந்து கொண்டிருக்கும் அந்த பிரபல கார்பரேட் மருத்துவமனையின், வாசல் முன் வேகமாக ஒலி எழுப்பியபடியே வட்டமடித்து வந்து நிற்கிறது ஒரு ஆம்புலன்ஸ்.

அந்த ஆம்புலன்சிலிருந்து உயிருக்கு போராடும் ஒரு சிறுமியை ஸ்டெச்சரில் துக்கி கொண்டு வர அந்த ஆஸ்பத்திரியிலும் நம் மனங்களிலும் ஒரு வித விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது.

குழந்தை ஜீவ மரண போராட்டத்தில் இருக்க.
டூட்டி டாக்டராக இருக்கும் ரவிதரகன் (பிருதிவிராஜ்) குழந்தையை சோதித்துவிட்டு
உடனடியாக குழந்தைக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் (வட்ட செயலாளரான) குழந்தையின் அப்பா, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்   ‘என் குழந்தைக்கு இன்னும் ஒரு ஆபரேஷன் வேண்டாம்’ என்று சொல்ல திரைக்கதை விறுவிறுப்பாகிறது.

திடுக்குற்று போகும் டாக்டர் ரவி தரகன்
‘சார் நல்லா யோசிங்க உங்க குழந்தைக்கு தேவை இப்ப ஒரு சின்ன ஆப்பரேஷன்.. எனக்கு பீஸ் கூட வேண்டாம் .. ப்ளீஸ்.. ’என்று கடமை உணர்ச்சியுடன் கெஞ்ச ஆரம்பிக்கிறார்.

குழந்தையின் அப்பாவோ ‘ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலயும் இப்படி சொல்லித்தான் ஆபரேஷனா பண்ணிட்டாங்க .. எங்ககளுக்கு எல்லாமே வெறுத்துப் போச்சு.. இதுக்குமேல இன்னும் ஒரு ஆபரேஷன் வேண்டாம்.. தெய்வம் விட்ட வழி.. என் குழந்தை எவ்வளவுநேரம் உயிரோட இருக்குமோ இருக்கட்டும்… அதுவரைக்கும் இருக்கட்டும்… இதுக்குமேல குழந்தைய கஷ்டப்படுத்த வேண்டாம்..’ என்று விரக்தியிலும்  உறுதியாக சொல்லிவிட்டார்.

ஆனாலும் ரவிதரகன் விடுவதாக இல்லை.
 மீண்டும் மீண்டும் அந்த அப்பாவை ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறார்.

சரி டாக்டர் இப்ப இந்த ஆபரேஷனை பண்ணிட்டா எங்குழந்தைய காப்பாத்திடலாமா..?’ என்று கோபமாய் கேட்கிறார் அப்பா.

இந்த ஆபரேஷன செய்யலைணா கண்டிப்பா குழந்தை செத்துப்போகும்.. ஆனா ஒரு வேளை ஆபரேஷன் சக்சஸ் ஆயிடுச்சுண்ணா.. உங்க குழந்தை பொழைச்சிடும்..’ என்கிறார் டாக்டர்.

அதெல்லாம் வேண்டாம் ஆபரேஷன் பண்ணா எங்குழந்தை பொழச்சுக்கும்ணு உன்னால உத்தரவாதம் தர முடியுமா சொல்லு..?’ என்று கறாராகக் கேட்கிறார் அப்பா.

‘ஆபரேஷன் பண்ணினா ஒரு பத்து சதவீதம் குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கு.. ’என்று ரவிதரகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

‘நிறுத்து… ஆபரேஷன் சக்சஸ் ஆச்சுண்ணா பத்து சதவிகிதம்தான் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்குண்ணு நீயே சொல்ற.. அப்ப மீதி தொண்ணூறூ சதவிகிதம் .? அட போய்யா போய் வேற வேலைய பாரு..?’ என்று மீண்டும் உறுதியாக மறுத்து விடுகிறார் அந்த அப்பா.

ஆனால் ரவிதரகன் சக மருத்துவரக்ளின் ஆலோசனைகளையும் மீறி அந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய  குழந்தை இறந்துவிடுகிறது.

ரவிதரகன் மீது கொலைப்பழி?

ஒரு கும்பல் மருத்துவ மனையை சூறையாடுகிறது.
சக மருத்துவரகள் ரவிதரகனை பலவந்தமாக பின்வாசல் வழியே காரில் அனுப்பிவிட… கொலை வெறியோடு ஒரு கும்பல் அந்த காரை துறத்த.. கார் ஒரு வளைவில் திரும்பும்போது விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்கிறது.

இப்போது விபத்தில் சிக்கும் ரவி தரகன் காணாமல் போய் விடுகிறார்.

இப்போது நம் முன்னே மனிதாபிமானமும் கடமை உணர்ச்சியும் மிக்க மருத்துவராக காட்சியளித்த  ரவிதரகன் தன் கல்லூரி நாட்களில்  அற்பணிப்பு தன்மை உடையவராகவோ சிறந்த படிப்பாளியாகவோ இருந்ததில்லை என்பதிலிருந்து பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.

பல attempt க்கு பிறகு,  கடைசி தேர்வில் கூட பிட் அடித்து மாட்டிக்கொள்ளும் சாதாரண மக்கு மாணவர்தான் ரவி தரகன்

ஒரு வழியாய் போராடி தேர்வுகளில் வெற்றிபெற்று  டாக்டராகும் ரவி தரகன் மருத்துவக் கல்லூரியில் போட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு மலை கிராமத்து மருத்துவமனைக்கு வேண்டா வெறுப்பாக சேவையாற்ற வருகிறார்.

அங்கு அவருக்கு சீனியர் டாக்டராக இருப்பவர் சாமுவெல் (பிரதாப் போத்தன்)  ’மருத்துவம்  ஒரு தொழில் அல்ல ,   அது ஒரு சேவை’  என்று வாழும் பிரதாப் போத்தனுக்கும் வழி தவறி  டாக்டராகி  விட்ட தரகனுக்கும்  இடையில் இயல்பாகவே இருக்கும் முரண்பாடுகளில்
 கதை பயணிக்கிறது.

தொழில் ஆகிவிட்ட மருத்துவத்துறையையும் அதில் மலிந்து நிற்கும் ஊழலையும்,  முறை கேடுகளையும் அதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும்  போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதுமாதிரி  திரைக்கதையை  அமைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பொறுப்பில்லாத டாக்டராக இருக்கும் ரவிதரகன் தான் பின்னாளில் டாக்டர் சாமுவேலால் பட்டை திட்டப்பட்ட வைரமாக மிளிர்கிறார்.
 ஒரு நல்ல டாக்டர் என்பவர் வகுப்பில் முதல் மார்க் வாங்கி ஒரே அட்டம்டில் வெற்றி பெறுவ தாலேயே ஒருவர் சிறந்த டாக்டர் ஆகிவிட முடியாது என்பதை சொல்லால் சொல்வது மாதிரி பல காட்சிகள்..!
‘ஒரு நல்ல டாக்டருக்கு தேவை திடமான முடிவெடுக்கும் மனோபாவமே’ என்பதை கற்றுத்தருகிறார் டாக்டர் சாமுவேல்.

பணமும் அந்தஸ்த்தும் நிறைந்த பெரிய மருத்தவமனைகளை விட்டுவிட்டு ஏழைகளுக்கு உதவும் பொருட்டே இந்த மருத்துவமனையில் தலமை மருத்துவராக இருக்கும் டாக்டர் சாமுவேல்(பிரதாப்போத்தன்) ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பு.

ஒரு    மருத்துவமனையின்  துயரங்கள்,வேதனைகள்,  வலிகள்   இவற்றோடு நகைச்சுவையும்  கலந்துதிருப்பதால் படம் கலகலப்பாகவும் இயல்பாகவும் இருக்கிறது.

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் இந்த படம் பல நல்ல செய்திகளைச் சொல்லித்தரும்…!

7D Camera  மூலம் பதிவு  செய்யப்பட்ட இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்  ஜோமோன் ஜான் தன் பணியை அற்புதமாக செய்திருக்கிறார்.

‘இந்தியன் ருபீ’க்கு பிறகு பிருதிவிராஜின் சினிமா வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும் துவக்கி வைத்திருப்பதோடு,பிரதாப் போத்தனின் சினிமா வாழ்விலும் இந்தபடம் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

சில தடுமாற்றங்களுக்கு பிறகு மீண்டும் எழுந்து வரும் மலையாள சினிமா உலகின் சமிபத்தைய வெற்றிப்படங்களில் ஒன்றான ’ஆயாளும் ஞானும் தம்மில்’ இந்த ஆண்டின் பல விருதுகளையும் அள்ளிப்போகும் என்பதில் சந்தேகமில்லை.

—டி.அருள்செழியன்.