விமர்சனம் ,’துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க

vijay-thuppaakki01

 நம் நாட்டிலுள்ள தீவிரவாதிகளுக்கு இருக்கக்கூடிய ஆகப்பெரும் அச்சுறுத்தல், சினிமாவில், அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாவில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பரத் போன்ற சுள்ளான்களாலும் அவர்கள் பந்தாடப்படும் விதம்தான். லேட்டஸ்டாக தீவிரவாத வேட்டையில் தீவிரமாக இறங்கியிருப்பவர் நம்ம எளைய தளபதி விஜய்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் சிரமேற்கொண்டு செய்து வந்த தீவிரவாத ஒழிப்புவேலைகளை, கொஞ்சம் இடம் பொருள் ஏவல், வாஸ்து மாற்றி இளையதளபதியின் தோளுக்கு தோதாக ஷிஃப்ட் செய்திருக்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்.

விட்டால் நாலே வரியில் எழுதி விடலாம், விரும்பினால் நாலுமணி நேரம் வரை சொல்லிக்கொண்டே போகலாம் என்கிற ரெண்டுங்கெட்டான் தனமான கதை ‘துப்பாக்கி’யினுடையது. ஒரு பக்கம் தீவிரவாதிகள் மறுபக்கம் திணவெடுத்த தோள்கள் கொண்ட நம்ம ஹீரோ. அவர்கள் பாம் வைக்க முயற்சிக்க அவர்கள் முயற்ச்சியை, அயர்ச்சியின்றி முறியடிக்கிற த ஸேம் ஓல்டு ஸ்டோரிதான் ‘துப்பாக்கி’யும்.

 மிலிட்டரியிலிருந்து 40 நாள் விடுமுறையில் வரும், வம்பை விலைக்கு வாங்கத்துடிக்கும் மும்பைத் தமிழர் நம்ம விஜய். ஒரு பஸ் பயணத்தின் போது, பிக்பாக்கெட் ஒருவனை அவர் பிடிக்க எத்தனிக்கும்போது, தற்செயலாக தீவிரவாதியின் கையாள் ஒருவன் மாட்டுகிறான். அவனை யாருக்கும் தெரியாமல் வீட்டு மாடியில் வைத்து விசாரிக்கும்போது, மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு, அவர்களது கைப்பாவைகள் மும்பையை வட்டமிட்டிருப்பது தெரிகிறது.

நம்ம இளையதளபதியா கொக்கா? இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்து காஜல் அகர்வாலைக் கரம் பிடிக்கிறார்.

‘தம்பி இவ்வளவு நேரமா இல்லாம திடீர்னு, இந்த காஜல் அகர்வால் எங்கருந்து, எப்ப வந்தார்னு சொல்லவேயில்லையே என்று உங்கள் புஜம் துடிப்பது புரிகிறது.

‘குணா’ படத்தில் ‘கண்மணி அன்போடு’ பாடலில் அங்கங்கே ‘மானே தேனே’ போட்டுக்கிற மாதிரி படத்தின் துவக்க காட்சியிலிருந்து ஒவ்வொரு மூனு சீன்களுக்கும் ஒருமுறை காஜல் வருகிறார். காதல், ஊடல்,வாடல் என்று தமிழ்சினிமா காதல் காட்சிகளில் ஏற்கனவே பார்த்துச் சலித்த அத்தனை கன்றாவிகளையும் செய்கிறார்கள்.அப்படியே ஒரு சின்ன முன்னேற்றமாக இருக்கட்டுமே என்று ஒரு முத்தம் கொடுக்கும் முயற்சியில், அயற்சி வருமளவுக்கு மூன்று ரீலை ஓட்டுகிறார்கள்.

தீவிரவாதிகள் என்றாலே அது இஸ்லாமியர்களாகத்தான் இருக்கவேண்டுமா? என்பதற்கும் கதாநாயகி என்றால் அவள் ஒரு அரை லூஸாகத்தான் இருக்க வேண்டுமா? என்பதற்கும் மேற்படி இரு பிரிவினருக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை இயக்குனர் முருகதாஸுக்கு காத்திருக்கிறது.

மற்றபடி விஜய்க்கு சமீபத்தில் வந்துபோன ‘நண்பன்’ தவிர்த்த அவரது தொத்தல் படங்களுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதல் பரிசுதான் என்பதில் சந்தேகமில்லை. காஜல் அகர்வால் வெறுமனே காதல் அகர்வால். விஜயை அவ்வப்போது சந்தித்து காதல் பகர்வாள்,அடுத்து ஒரு பாட்டு சீனுக்கு நகர்வாள்.

‘வேர் இஸ் த மியூசிக் என்று கேட்க வைக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். அம்மி கொத்த சிற்பிக்கு ஆர்டர் அனுப்பியதுபோல் இருக்கிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.

படத்தின் டைட்டிலை மறந்துவிடுவார்கள் என்று நினைத்தோ என்னவோ படம் முழுக்க யாரோ யாரையோ சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். கதையில் விஜய் மிலிட்டரியில் இருந்து 40 நாள் விடுமுறையில் வந்தது போலவே  லூஸ் போலீஸ் சத்யனைத்தவிர, மும்பை போலீஸார் அத்தனை பேரும் விடுமுறையில் சென்றுவிட்டார்கள் போல.

அவ்வளவு நேரமும் விஜய் வீட்டில் ஒரு செட் புராபர்ட்டி போலவே, சாதுவாகப் படுத்துக்கிடந்த அந்த பரிதாப நாயை திடீரென்று விஜய் கையில் பிடித்தபடி அதிரடி ஆக்‌ஷனுக்குள் இறங்கும்போது, காமெடியும் எனக்கு வரும் பாஸ் என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

’ஏழாம் அறிவில் தமிழனின் குரோமோசொம்களை குத்தகைக்கு எடுத்து தமிழ் வியாபாரம் செய்த முருகதாஸ் இந்த முறை ராணுவ வீரர்களின் தியாகத்தைப்போற்றிப் புகழ்ந்து தனது எட்டாவது அறிவால் யாரும் எட்டமுடியாத இடத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறார்.