’தேவயானி கையால பிரியாணி சாப்பிடலாம் வாரீங்களா?’

devayani

நாளையதினம், உலகம் அழியப்போவதாக, டென்சனில் நகம் கடித்துக்கொண்டிருக்கும் கண்ணியவான்களே, புண்ணியவான்களே, இப்படி ஒரு செய்தியைக் கேட்பதற்குப் பதிலாக,  உலகம் அழிந்து, அதில் முதல் ஆளாக ’என்னை எடுத்துக்கொள்ளமாட்டாயா?’ என்று எமதர்மராஜனிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்கவேண்டிய அளவுக்கு ஒரு கர்ணகொடூரமான செய்தியை,தேவயானியின் தெய்வீக கணவர் ராசகுமாரர் சகல உலகுக்கும் அறிவித்திருக்கிறார்.

அதாகப்பட்டது தற்போது ‘திருமதி தமிழ்’ என்ற பெயரில் தேவயானியை வைத்து 5 வது படத்தை இயக்கி ’முடித்து’, அதன் ஆடியோவையும் கோவையில் வெளியிட்டு

‘முடித்திருக்கும்’ ராசகுமாரர், அடுத்து மேலும் 75 படங்களை இதே தேவயானையை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறாராம். அதில் சில படங்களில் மட்டுமே ராசகுமாரர் ஹீரோவாக நடித்துவிட்டு, மற்ற படங்களில் சிலபல முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடவிட முடிவு செய்திருக்கிறாராம்.

இவர்கள் முன்னிலையில் என்ன பேசினாலும், விபரீதமாக எதுவும் செய்துவிடமாட்டார்கள், மந்தென்று அமர்ந்து மறுபேச்சின்றி கேட்பார்கள் என்ற நம்பிக்கையில், ‘திருமதி தமிழ்’ ஆடியோவை வெளியிட்டுவிட்டு, பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ராசகொமாரர் பேசியதாவது;

‘’தமிழ் சமூகத்தை தட்டியெழுப்பும் விதமாக, என் இல்லத்தரிசி தேவயானையை[’கும்கி’ யானையை விரட்ட பேசாம இந்த யானையையே யூஸ் பண்ணிருக்கலாமோ?’] வைத்து நான் துவங்கிய ‘திருமதி தமிழ்’ எந்த காரணமும் இல்லாமல் அநியாயத்துக்கு காலதாமதமாகிவிட்டது. இனியும் தாமதிக்கும் எண்ணம் இல்லை.

 நான் வாழ்ந்த காலத்தில் என் தமிழ் இனத்துக்கு என்ன செய்தேன் என்று கண்ணாடி முன் நின்று கன்னாபின்னாவென்று யோசித்து நேற்றுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த முடிவின் படி என் இல்லத்து அரிசி தேவயானையை அடுத்து 75 படங்களுக்கு தொடர்ந்து ஹீரோயினாகப் போட்டு, தமிழ் சமூகத்துக்கு என்னால் ஆன தண்ணீரை ஊற்றப்போகிறேன்.

தற்போதைய ‘திருமதி தமிழ்’-ல் சென்னை நகரை மய்யமாகவும், அதன் புறநகர்ப் பகுதிகளை கதையின் அகத்திலும் புறத்திலும் பயன்படுத்தி, சட்டத்தின் கொட்டத்தை அடக்க சகல வித்தைகளையும் கையாண்டிருக்கிறேன்.

‘திருமதி தமிழ்’க்கு அர்த்தம் கேட்டு பலரும் தவிக்கிறார்கள் என்பது எனக்குத்தெரியும்.  மனைவியை சீரியல் ஷூட்டிங் அனுப்பி விட்டு, சமையலறையில் சமைத்து, அவருக்கு கேரியலில் சாப்பாடு கொண்டு போகும் அனுபவம் இருந்தால் இப்படி ஒரு சந்தேகம் வராது. இதை மய்யமாக வைத்துதான் எனது அடுத்த படமான ‘அடுப்பறையில் ஒரு அளப்பரை’ படத்தை இயக்க இருக்கிறேன்.

வாழ்நாள் முழுக்க கிச்சன் பக்கமே போகாத ஒரு மனைவி, ஊரிலிருந்த வந்த தனது அச்சனுக்கு வெந்நீர் போடுவதற்காக ஒரே ஒருமுறை கிச்சன் போனபோது என்ன நடந்தது என்பதை ஐந்துமொழிகளில் அலச இருக்கிறேன். இதே போல்தான் எனது மற்ற 73 கதைகளுமே சமுதாயப் புரட்சி சார்ந்தவை’’.

இவ்வாறு ராசகொமாரர் பேசிமுடிக்க, குழுமியிருந்த பத்திரிகையாளர்கள், ‘நூறு வயசு வாழ வேணும் எம்மவராசா’ என்று பாடி வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

’மாயன்’ காலண்டர் பிரகாரம் உலகம் அழிவதாக இருந்தாலும் அதில் ஆதாம்ராசகொமாரரும், ஏவாள் தேவயானியும் மட்டுமாவது தப்பிப்பிழைக்க, ‘குமுதம்’ பிரார்த்தனை கிளப் சார்பாக, புரசைவாக்கம் அபுபக்கர் பாய் தெருவில், இன்று காலை முதல் கூட்டுப்பொறியல் பிரார்த்தனையை துவங்கியிருக்கிறோம். தமிழ் இனத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கலந்துகொள்ளலாம். பிரார்த்தனையின் முடிவில்,75 பட நாயகி தேவயாணி கையால், சிக்கன் பிரியாணியும், தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் தொக்கும் வழங்கப்படும்.