viswaroopam-dth-kamal-statement

கண்டிப்பாக கமல் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதுமைகளைச் செய்தவர் தான்.  ஆனால் கமல் அளவுக்குக் கூட யாரும் செய்யவில்லை என்பதாலேயே அவர் முக்கியமானவராகிறார்.

அவர் செய்த புதுமையிலும் அவரது இந்துத்துவா முகமும் இன்னும் பல முகங்களும் ஒளிந்திருந்தே வெளிப்பட்டுள்ளன.

அவர் ஈழத் தமிழர் பிரச்சனையில் பிக்கியின் பதவியை விட்டு இறங்க மறுத்தது தமிழர்களை

அவர் எவ்வளவு(?) நேசித்தார் என்பதற்கு ஒரு முக்கிய உதாரணம்.

இன்னும் பல நுணுக்கமான அரசியல்கள் கமல் சாரிடம் இருக்கின்றன.

தற்போது தயாரிப்பாளர்கள் யாரும் விலை கொடுத்து வாங்க வராத சூழலில் டி.டி.எச்க்கு ஒரு காட்சியை மட்டும் விற்கிறேன் என்று கமல் இறங்கியிருக்கிறார்.

படம் தியேட்டரில் வரும் முன்பே திருட்டு டி.வி.டி இன்டெர்நெட்டில் வந்து விடும் இந்தக் காலச் சூழலில் இவர் படத்தை டி.வியில் நேரடியாக ரிலீஸ் செய்வது ஒரு காட்சியானாலும் வீடியோ திருட்டை நீங்களே பண்ணுங்கள் என்று எல்லோருக்கும் கையில் லட்டு போல கொடுப்பது தானே ! அது எப்படி புதுமை என்று கேட்கின்றனர் விவரம் தெரிஞ்ச சிலர்.

தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கமல் தனது படத்தின் டி.டி.எச் விற்பனையை நியாயப்படுத்தி கீழ்க் காணும் அறிக்கையை தன் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். படியுங்கள் கீழே..

” புதிய முயற்சிகளை கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும், ஏளனம் செய்வதும் ஏன்.. அவைகளை கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவை எரித்துக் கொல்லவேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தில் டி.டி.எச் முயிற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்று பதற்றக் குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிமாண வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்.. உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. டி.டி.எச்சிற்கு வெகுவான வரவேற்பு உளள்து. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக் கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

இந்த டி.டி.எச் என்பது என்ன?

எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச். இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன.
இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழிசெய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டை குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் வி்ஸவரூபத்தின் தமிழ் இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைத் தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைத் தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம்.
இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என்று நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா ?

டிடிஎச்ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் டிடிஎச் கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாகச் செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டிடிஎச்ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

டிடிஎச் வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1.5 விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்டமுடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்குப் பயப்படுவது ஆச்சரியம்.

71/2 கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டிவிடி வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டிவிடிக் காரர்களுடன் கூட்டு சேரந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத் தக்கது.

திருடனுக்கு 50 சதவீதம் கொடுத்தாலும் கொடுப்பேன். உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது, தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடு்ம் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டத்தட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும். வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்கக் கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் எனஅறு நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்னா?

முடிவாக இது முஸ்லீம்கலை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லீம் அமைப்புகள். இந்த முஸ்லீம்கள் படத்தைப் பார்த்து மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

படத்தோட ஸ்கிரிப்ட் எப்படியோ இந்த ஸ்கிரிப்ட் பிரமாதமா இருக்கு கமல் சார்..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.