மூன்று பேர் மூன்று காதல். மூன்று ஓகே.

3per3kadhal-audio-review

இசை-யுவன் சங்கர் ராஜா. பாடல்கள்- நா.முத்துக்குமார்.

வசந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று திணைகளை சம்பந்தப்படுத்தி கதை வருவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் ஆல்பப் பாடல்களில் அந்த மாதிரி எதுவும் திணைகள் தெரியவில்லை. எல்லாம் வெஸ்டர்ன் திண்ணைகள்

தான் தெரிகின்றன. பாடல்களில் பியானோ, கிடார் கருவிகள் அதிகமாக உபயோகம் தெரிகிறது.

1.ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி– நந்தினி ஸ்ரீகர்
கர்நாடிக் ட்யூன் போல வரும் பாடலை வெஸ்டர்ன் கலந்து இசையமைத்திருக்கிறார். நந்தினி ஸ்ரீகரின் குரல் புதுமை. கேட்டவுடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் ட்யூன். நடுவில் வயலின், புல்லாங்குழல் என்று புகுந்து விளையாடும் பாடல். இந்தப் படத்தின் எல்லா பாடல்களிலும் பெஸ்ட் இந்தப் பாட்டு என்று சொல்வேன்.

2. காதல் எந்தன் காதல் – நேகா பாசின்
நேகா பாசினின் கொஞ்சம் ஆண்தனமான குரலிலும் பாடல் நன்றாக இருக்கிறது. நாக்கில் வைத்து வாசிக்கும் பழைய காலத்து இசைக்கருவி ‘மோசியை இந்தப் பாடலில் உபயோகப்படுத்தியிருக்கிறார். பழைய ஒரு இசைக்கருவியை மிகப் புதுமையாகக் கேட்கும் படி செய்ததற்காக யுவனுக்கு ஒரு சபாஷ். பாடல் ஹிட்டாக நிறைய வாய்ப்புள்ளது.
 
3. மழை மழை – கார்த்திக், ஸ்வேதா
பாடல் ஆரம்பிக்கும் முன் வரும் மெல்லிசை பாடலைப் பற்றி ஏதோ நினைக்க வைக்க.. பாடல் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஈடுசெய்யாமல் போகிறது. ஆனாலும் பாடல் சோடை போகவில்லை. நா.முத்துக்குமார் இப்பாடலின் வரிகளில் வெளியில் தெரிகிறார்.

4. படபடக்குது மனமே – க்ரிஷ், ப்ளேஸ்
க்ரிஷ் சிரத்தை எடுத்துப் பாடியுள்ள இந்தப் பாடல் பெரிய அளவு மனதை ஈர்க்கவில்லை. ப்ளேஸ் நடுவில் வரும் வெஸ்டர்ன் பாட்டு பிட்டைப் பாடியிருக்கிறார். அந்த இடத்தில் மட்டும் ஏதோ வெஸ்டர்ன் பாட்டுப் போல இருக்கிறது. கேட்கலாம்.

5. உனக்காகவே உயிர் வாழ்கிறேன் – யுவன்
வழக்கமாக யுவன் பாடும் பாடல் மனதை விட்டு அகலாத ட்யூனாக இருக்கும். இப்பாடலில் அது மிஸ்ஸிங். சுமாரான சோகப் பாடல். வெஸ்டர்ன் கலந்து எப்படியோ இருக்கிறது. யாருக்காவது பிடித்தாலும் பிடிக்கும்.

மூன்று பேர் மூன்று காதல் பாடல்களில் காதலுக்கு ஒன்றாக மூன்று பாடல்கள் ஓ.கே. படத்தின் எல்லா பாடல்களையும் எழுதியுள்ள முத்துக்குமாரும் அந்த மூன்று பாடல்களை மட்டுமே ஓகேவாக செய்திருக்கிறார்.