விமர்சனம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ‘ஈயைக் காயடிக்கும் கொல்லன் பட்டறை’

sattam-oru-iruttarai-film-review

பழைய்ய ஜபர்தஸ்தான பார்ட்டிகளின் வீட்டு வராந்தாவில் அல்லது ஹாலில் ஒரு புலித்தோலும், துருப்பிடித்துப்போன துப்பாக்கியும் கண்டிப்பாக தொங்கும்.

அப்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேட்டையாடி தொங்கவிட்ட புலித்தோலை அணிந்துகொண்டு, அவரது

துருப்பிடித்த துப்பாக்கியை கொல்லன் பட்டறையில் தூர் எடுத்து, புதிய தொழில்நுட்பத்துடன் புறப்பட்டு வந்திருக்கிறார் இளம் சிறுமி இயக்குனர் சிநேகா பிரிட்டோ.[ குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டம் இங்கே செல்லுபடியாகாதோ?]

பழைய ‘சட்டம் ஒரு இருட்டறை’ காலத்து பார்ட்டிங்களெல்லாம், பாட்டன், பாட்டிகளாகிவிட்டிருப்பீர்கள்  என்பதால் கதையை மறுபடியும் அவுத்துவிடவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

ஹாங்காக்கில் ஏதோ ஒரு சம்மர் கோர்ஸ் படிக்கப்போயிருக்கும் நாயகன் விஜய், தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சந்திப்புகளால் உந்தப்பட்டு, குட்டி பியா எனப்படும் பியாக்குட்டியை லவ் பண்ண ஆரம்பிக்கிறார்.[காஸ்ட்யூமருக்கும் இவருக்குமிடையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, படம் முழுக்கவே இவரை ஜட்டி பியாவாகவே அலையவிட்டிருக்கிறார்கள்]

கண்ணில் கண்டதையெல்லாம் தனது கேமராவில் சுட்டுத்தள்ளும் வழக்கம் கொண்ட சுட்டி பியா ஒருமுறை படத்தின் மூன்று முரட்டு வில்லன்கள் ஒரு கொலை செய்வதை சுட்டுவிடுவதோடு நில்லாமல், அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லவும் கோர்ட்டுக்கு கிளம்ப, வில்லன் கோஷ்டிகள் பியா மீது, ஒரு காரை ஏற்றி அவரை ’மர்கயா’ ஆக்குகிறார்கள்.

மனிதனுக்குத்தேவை மனசாட்சி. ஆனால் கோர்ட்டுக்குத் தேவையோ மனித சாட்சி. அப்படிப்பட்ட சாட்சிகள் இல்லாததால், வில்லன் பட்சிகள் தப்பிவிட, அவர்களை சாட்சிகள் இன்றி விஜய் எப்படிப் போட்டுத்தள்ளுகிறார் என்பதுதான் ‘சட்டம் ஒரு குருட்டறை’.

கதையில் இன்னும் விறுவிறுப்பும் மொறுமொறுப்பும் இருந்தால் என்ன கெட்டுப்போச்சி என்று நினைத்து, தம்பி விஜயின் அக்காவாக போலிஸ் யூனிஃபார்மில் ரீமாசென்னை, ’வாமா சென்னைக்கு’ என்று அழைத்திருக்கிறார்கள்.

’தாத்தா எஸ்.ஏ.சி. 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்‌ஷன் படமாக பண்ணியதை நான் இந்த ஜெனரேஷனின் ரசனை கருதி லவ்- ஆக்‌ஷனாக மாற்றியிருக்கிறேன்’ என்று குழந்தை இயக்குனர் சிநேகா பிரிட்டோ பல பேட்டிகளில் டேப்பை ஓட்டியாதாக ஞாபகம்.

டி.வி கேம் ஷோக்களின் ஆக்‌ஷன்களை குழந்தைகள் பலரும் காமெடியாக கருதி ரசிப்பதாலேயே நாமும் சிநேகா சொன்ன ’ஆக்‌ஷனை’ காமெடி என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் படம் முழுக்க ஆக்‌ஷன் என்ற பெயரில் ரசிப்பதற்கு ஏகப்பட்ட காமெடிகள் இருக்கின்றன.

இதுபோதாதென்று க்ளைமேக்ஸை ஒட்டி, ஒரு மகா நேர்மையான கேரக்டரில் பழைய்ய இயக்குனர் எஸ்.ஏ.சி.யும் இருட்டறையின் கூட்ஸ் வண்டியில் ஏறிக்கொள்ள அதன்பிறகு எண்ட் வரை காமெடி கதகளி நடக்கிறது.

சினிமாவிலிருந்து ரிடையராகி, குழந்தை பெற்றுக்கொண்டு, மும்பையில் செட்டில் ஆனதற்கான எல்லா தர்மங்களும், நியாயங்களும் ரீமா சென்னிடம் பரந்துவிரிந்து கிடக்கின்றன.

பிந்துமாதவியும், பியாவும் படத்தை ஆளுக்கொரு பாதியாய் பிரித்துக்கொண்டு நமது ஆவியை மேய்கின்றனர். பிரம்மனின் வார்ப்பில் என்ன பிரச்சினையோ இருவரிடமும் எந்தவித ஈர்ப்பும் இல்லை. அதிலும் செத்தபிறகும் செகண்ட் ஆஃபில் வந்து ஒரு குத்துப்பாட்டில் ஆடிவிட்டுப்போகிறாரே பியா அட போய்யா,..

’21-ம் தேதி உலகம் அழியப்போகிறது’ என்பதை சீரியஸாக நம்பியவர்களில் நீங்களும் ஒருவர் எனில், மீதி வாழ்க்கையெல்லாம் போனஸ்தானே ‘போனால் போகட்டும் போடா’ பாடி, மீதி பொழுதுகளைக் கழிக்கவிருபுகிறவர் எனில்,’இதுக்கும் மேல நம்மள யாரு என்னங்க பண்ணிரமுடியும்’ என்று மீதிவாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டே அலைய, நீங்கள் ஒருமுறை கண்டிப்பாக’சட்டம் ஒரு இருட்டறை’ பார்க்கலாம். உங்களுக்கான விபரீத ராஜயோகம் படம் முழுக்க விரவிக்கிறது.