சிறுவயதில் கண்ணாடி அறுத்தோம் – வடிவேலுவின் நினைவுகள்

vadivelu-interview-13dec12

சென்ற தேர்தலில் தன்னுடன் பர்சனலாக மோதிய விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்காக திமுக மேடைக்குச் சென்ற வடிவேலு அந்தத் தேர்தல் சூடு முடிந்ததும் தான் பேசிய கட்சிகளே தன்னை மறந்து விட்டதைக் கண்டு மிகவும் நொந்து போய் இனிமேல் ஜென்மத்துக்கும் எந்தக்

கட்சி சாயலும் தன் மேல் படிந்துவிடக்கூடாது என்று விரும்புகிறார்.

அதற்கான வாய்ப்பு அம்மா பக்கமிருந்து கிடைக்குமானால் அதைச் சரிசெய்து விடவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“காலேஜூக்கெல்லாம் போகணும் பெரிய படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அப்பாவால எங்களைப் படிக்க வைக்க முடியலை. காரணம் வறுமை. நிறைய பேர் இருக்கிற குடும்பம். அதுல அப்பாவோட சம்பளம் மட்டும் பத்தலை.

அதனால நானும் என் மூன்று தம்பிகளும் சின்ன வயசிலயே கண்ணாடிக் கடைக்கு வேலைக்குப் போனோம். கண்ணாடிகளை ஒரு குறிப்பிட்ட சைஸில் அறுக்கின்ற வேலை.

எங்கப்பாவும் கூட கண்ணாடி கடைல தான் வேலை பார்த்தாரு. ஆனா அவர் கண் முன்னாடி நாங்க கஷ்டப்படுறதை பார்க்க வேணாம்னுட்டு எங்களை வேற கண்ணாடிக் கடைல சேர்த்து விட்டாரு.

கண்ணாடி அறுக்குறது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. கத்தியை வெச்சு வெட்டும் போது லேசாப் பிசகினாலும் கையில் ரணம் தான். எங்கள் கைகளிலும் உடம்பிலும் கண்ணாடிச் சில்லுகள் குத்திய, வெட்டிய வடுக்கள் நிறைய இருக்குது.

சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 2 குரோஸ் அதாவது 240 துண்டு கண்ணாடி அறுத்தால் 40 ரூபாய் கூலி. காலைல ஏழுமணிக்கே நாங்க நாலு பேரும் வேலைக்குப் போயிடுவோம். எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் பூரா அறுத்தாத் தான் 2 குரோஸ் கண்ணாடி அறுக்க முடியும்.

இதில் நாங்கள் காலைலயே 10 அல்லது 20 ரூபாய் அட்வான்ஸ் மாதிரி வாங்கி வீட்டில குடுத்துடுவோம். அதை வெச்சி அரிசி வாங்கித் தான் அன்றைய சாப்பாடு ரெடியாகும்.

சில சமயம் கார்ட்போர்ட் அறுத்து கண்ணாடிய பிட் பண்ற வேலையும் தருவாங்க. கார்ட் போடு அறுத்து அந்தத் தூள் மூக்கு வழியா சுவாசிச்சு சுவாசிச்சு என் தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளியாயிட்டான்.

உடம்புல நோவுன்னாக்கூட லீவு எடுக்க முடியாது. மாத்திரையப் முழுங்கிட்டு வந்து மாங்கு மாங்குன்னு கண்ணாடி அறுப்போம். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பதிமூன்று வருஷம் கண்ணாடிக் கடையில வேலை பார்த்தோம்.

அந்தக் கஷ்டமான காலங்களை இப்பவும் மறக்க முடியாது என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்து கூறுகிறார் வடிவேலு.

நம்மை நன்றாக சிரிக்க வைத்த வடிவேலுவின் பழைய நிஜ வாழ்க்கை அவ்வளவு கடினமானது.