kadal-audio-review-2

ரஹ்மான் தவிர்த்து பழக்க தோஷத்தில் ஓரிரு பாடல்களைச் சிறப்பாக அமைத்துவிடும் இசையமைப்பாளர்கள் உண்டேதவிர பொருட்படுத்தத்தக்க இசையமைப்பாளர்கள் தமிழில் தற்போது இல்லை என்றே சொல்வேன். அந்தவகையில் தமிழ்த்திரையிசையின் வறன்ட காலம் என்றே இக்காலத்தை வர்ணிக்கத் தோன்றுகிறது. ஆனால் இந்த வறட்சிக்குள்தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இசை ஆளுமைகளுள் ஒருவரான ரஹ்மான் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பது ஒரு முரண்.

சரி விசயத்திற்கு வருவோம். நான் தமிழ்சினிமாப் பாடல் தொகுப்புகளை காசுகொடுத்து (விரும்பிக்) வாங்கிக்  கேட்பதை நிறுத்தி சிலபல வருடங்களாகிவிட்டன. நாங்களெல்லாம் 80களில் பதின் வயதினராய் இருந்தவர்கள். இளையராஜாவோடு இணைந்து வளர்ந்தவர்கள். இளையராஜா காலத்தில் வருடத்திற்கு 25 படங்கள். சாதாரணமாக 100 பாடல்கள். அதில் 25பாடல்களையாவது பிரமாதப்படுத்தியிருப்பார் ராஜா. ராஜா காலத்திற்குப்பின், ஒரு இசையமைப்பாளர் ராஜாவைவிட புகழ்பெறமுடியும் என்று நானெல்லாம் நினைத்திருக்கவில்லை. ஆனால் நடந்தது வேறு.

ரஹ்மானின் இசை உருவாக்கமுறை, இசை பற்றிய அவருடைய அணுகுமுறை மிகக் குறைவான படங்களுக்கே இசையமைப்பவராக மாற்றியிருக்கிறது. அதனால் தமிழ்க்காதுகளுக்கு நல்ல பாடல்கள் அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சினிமாப் பாடல்களைக் கேட்பதிலிருந்து ஒருவர் தப்பமுடியாது. அந்தந்தக் காலத்தின் ‘ஹிட்’ பாடல்கள் உங்கள் காதுகளைக் கிழிப்பதை சகித்துத்தான் ஆகவேண்டும். அதனால் நல்ல பாடல்களுக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை.

நீண்டநாட்களுக்குப்பிறகு M T V யில் ‘நெஜ்சுக்குள்ளே’ என்ற பாடலை ஒரு முறை கேட்டவுடனேயே அது மனசில் அப்படியே ஒட்டிக்கொண்டது. ரஹ்மான் பாடல்கள் பெரும்பாலும் கேட்டவுடன் ஒட்டிக்கொள்கிற ரகமல்ல என்பதால் அப்படத்தின் மற்ற பாடல்களையும் கேட்டுவிடும் பேராவல் என்னைத் தொற்றிக்கொண்டது. ரஹ்மானின் பாடல்களுக்காக குறுவட்டுகளை காசுகொடுத்து வாங்க நான் தயங்குவதில்லை. காரணம் தரவிறக்கம் செய்யப்படும் எம்பி3 பாடல்களைவிட ‘ஆடியோ’ பைல்கள் துல்லியமும் தரமும் கூடியவைகளாக இருக்கும் என்பதால்தான்.

‘நெஜ்சுக்குள்ள..’ தான் முதல்பாடலாக இருக்கும் என்று நினைத்தேன். கடல் படத்தின் ஆகச்சிறந்த பாடல் அதுதான் என்றும் நினைத்திருந்தேன். மேலும் பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு ஆல்பத்தின் முதல்பாடலாக ஆகச்சிறந்த பாடலாகத் தாங்கள் கருதுவதைத்தான் வைப்பார்கள். ‘சித்திரையே’ வை மூன்று நான்காவது தடவைகள் கேட்டபோது அது ஒரு அற்புதமான பாடலாக கைகூடியிருப்பதை உணரமுடிந்தது. விஜய்யேசுதாஸ் முதன்முதலாக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அவரின் சுயத்தன்மையும் ஆழமான உணர்வுகளும் வெளிப்படும் விதமாய். அவரின் அப்பாவைப் போலிசெய்யமுயலும் பாணியை இனி அவர் விட்டொழித்து தனிப்பாதையில் ராஜநடைபோடலாம்.

நெ௺சுக்குள்ளேயும், மூங்கில் தோட்டம் ஆகிய இரண்டு பாடல்களும் இயல்பான மெலடிகள். சக்தி சிறீ கோபாலன் குரல் சுகம். அருமையான புதுவரவு. அக்கொஸ்டிக் கிதாரின் தொடக்க இசையுடன் ஆரம்பிக்கும் இரண்டுபாடல்களிலும் ரஹ்மானின் வழக்கமான தாளக் கோர்வைகளின் ஆதிக்கம் இல்லை. வேண்டிமென்றே இடையிசையின் பாணிகளை மாற்றியிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா? படத்திலேயே தொடங்கிய சில அழகான விலகல்களை இப்படத்திலும் தொடர்கிறார். குரல் ஹார்மனிகளில் ரஹ்மானின் கற்பனை மேலும் மேலும் அற்புதங்களைத் தொடுகிறது. இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடத்திலும் காணமுடியாத அம்சம்.

ஹரிச்சரனின் குரலில் ‘நீ இல்லையேல்’ அருமையான கூட்டுக்குரல் பாடல். கிறித்தவ காஸ்பல் பாணியை வேண்டுமென்றே பயன்படுத்தியிருக்கிறார். சென்னையின் கிறித்தவ இசை வட்டாரத்தில் புகழ்பெற்ற பாடல்குழு நடத்துநர் (choir conducter) நடத்தியிருக்கிறார்.

சிட் சிறீராம் பாடிய ‘அடியே’ தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவும் புதுசுதான். ஜாஸ், கன்ட்ரி பாணிகளை அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அந்தந்த வகையான (genres)  இசைகளை அதன் அடிப்படை சாரத்தைக் கெடுக்காமல் பயன்படுத்துவதற்கு மிகுந்த புலமைவேண்டும். இந்தப்பாடலை தமிழ் ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.
 
ரஹ்மான் பாடிய ‘ஏலேய்’ எலெக்ரிக் கிதார் ஜாலங்களும் எதிர்பாராமல் நுழைந்து விலகும் தாளக்கோர்வைகளும் நிறைந்த தாளம் போட வைக்கின்ற பாடல்.
      
‘ப்ளூஸ், ஜாஸ், காஸ்பல்’ பாணிகளைப்  இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன் என்று ரஹ்மானே ஒரு நேர்காணலில் சொன்னதைப் படித்ததாய் நினைவு. மகுடி எனும் ராப் பாடல் இத்தொகுப்பில் ஒரு திருஷ்ட்டி. இத்தொகுப்போடு ஒட்டவில்லை. தனிப்பட்டமுறையில் விஜய் ஏசுதாஸின் ‘சித்திரையே நிலா’வும் சிறிராமின் ‘அடியே’வும் எனக்கு பிரத்யேகமானவை.

மொத்தத்தில் ரஹ்மானின் முக்கியமான தொகுப்புகளில் ஒன்று கடல். (ஆனால் கடலும் கடல்சார்ந்ததுமான நிலப்பரப்பை இப்பாடல்கள் எவ்விதத்திலும் சார்ந்திருப்பதாகத் தெரியவில்லை. திட்டமிட்டே தவிர்த்திருக்கவும் கூடும்.)

–இரா.பிரபாகர். (http://prabahar1964.blogspot.in/)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.