கடல் படத்தின் தோல்விக்கு மணிரத்தினமே காரணம் – ஜெயமோகன் அறிக்கை!

jeyamohan-1

ஒரு படம் தோல்வியடைந்த உடன் அந்த படத்தோடு தொடர்புடையவர்கள் தன்னைத் தவிர மற்றவர்கள்தான் அந்தத் தோல்விக்குக் காரணம் என்று தன்னை நம்பும் நண்பர்களிடம் இழிவாக புறம் பேசிக் கொள்வது வழக்கம்!

ஆனால் ஜெயமோகன் ஒரு படி கீழே இறங்கி படத்தின் தோல்விக்கு மணிரத்தினமே காரணம் என்று அறிக்கையே வெளியிட்டு விட்டார்.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு..

நான கடல் படத்தின் திரைக்கதையை சரியான விகிதத்தில் சரியான வேகத்திலேயே அமைத்திருந்தேன், அதை படமாக்குவதில் நான் சம்பந்தப்படவில்லை. படமாக்குவதில் சம்பந்தப் பட்ட மணிரத்தினமும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தும் என் திரைக்கதையின் அழகை குலைத்து விட்டனர்.

அதையும் தாண்டி அந்தத் திரைப்படம் இடைவேளை வரை நன்றாகவே சென்றது. இடைவேளையின் போது படத்திற்குக் கிடைத்த கைத் தட்டல் என் திரைக்கதைக்கு கிடைத்த கைத்தட்டலே! இடைவேளைக்கு மேல் கதையின் ஓட்டத்தை மணிரத்தினம் கெடுத்து விட்டார்.

இயக்குனர் மணிரத்தினம் கதையின் தேவையற்ற அம்சங்களில் அதிகமாக ஈடுபட்டு, படத்தின் ஆன்மாவான அம்சத்தை விட்டு விலகியதே படத்தில் தோல்விக்கு காரணம் .

முழுக்க முழுக்க நுட்பமான காட்சிப்படிமங்களின் ஓட்டமாக நான் திரைக்கதையை அமைத்திருந்தேன். முழுக்க முழுக்க சினிமா மொழியில் அமைத்திருந்தேன். இவையெல்லாம் மணிரத்தினத்திற்குப் புரியவில்லை.

நான் படத்தின் உருவாக்கத்தோடு சம்பந்தப்படாததால் படத்தின் இறுதியில் தான் எனக்குப் போட்டுக் காட்டீனார்கள்! அப்பொழுதே கதை உடைபட்டு உடைபட்டு இருக்கிறது, இந்தப் படம் ஓடாது என்று சொன்னேன்! ஆனால் மணிரத்தினம் அதையெல்லாம் பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்.

ஆனால் கடைசியில் நான் அஞ்சியதே நிகழ்ந்தது!

காட்சி ரீதியான சினிமா என்பது ஒரு தனிக்கலை. அதில் மணிரத்தினத்திற்கு, ராஜீவ் மேனனிற்கு, ஸ்ரீகர் பிரசாத்திற்கு பயிற்சியே இல்லை!

இந்தப படத்திற்கு விமர்சனம் எழுதியவர்கள் முன் வைத்த கருத்துக்கள் விசிலடிச்சான் ரசிகர்களின் போகிற போக்கிலான கருத்தை விட தரம் தாழ்ந்தவை.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையும் கூட இந்தப் படத்தின் தோல்விக்குக் காரணம் என்பேன். ஏ. ஆர். ரஹ்மானும் மணிரத்தினமும் வெறும் வர்த்தக கேளிக்கை நிறைந்த படங்களே இதற்கு முன்பு வழங்கி வந்தவர்கள். நான் ஆன்மீக சிக்கலையும மீட்பையும் சொல்லும் செவ்வியல் ஆக்கமாக இதை உருவாக்கியிருந்தேன். மணிரத்தினம் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் முந்தைய கூட்டணியில் உருவான பழைய குப்பை மசாலா படத்தையே எதிர்பார்த்து வந்த ரசிகனை என் திரைக்கதை ஏமாற்றி விட்டது.

காட்சிப்படிமங்கள் ஓர் உணர்ச்சிகரமான ஆன்மீகமான அனுபவமாக மாறுவதை மிகச்சில திரைக்கதைகளில் தான் காணமுடியும். கடல் அதில் ஒன்றுஎன்று நேற்று மலையாளசினிமாவின் முதன்மையான இயக்குநர் ஒருவர் சொன்னார்.

மணிரத்தினத்திற்கு அந்த அறிவு இன்னும் கொஞ்சம் காலம் கழித்து உருவாகலாம்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

ஒழுங்காகப் படம் எடுத்துக் கொண்டிருந்த மணிரத்தினத்தை ஆன்மீக சிக்கல், மீட்பு என்றெல்லாம் பேசி குழப்பி, நடுக்கடலில் தத்தளிக்க விட்டு விட்டு இப்படி தான்தோன்றித்தனமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயமோகனைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது தமிழ் திரையுலகம்!