viswaroopam-tamil-film-review

தினத்தந்தியில் மூன்று முறை பேனர் செய்தியாக, மற்ற பத்திரிகைகளில் மற்றும் இணையதளங்களில் அடைமழைபோல் கொட்டிக்கொண்டே இருந்த செய்திகள் என்று கடந்த இரு மாதங்களாக மாபெரும் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்து திரைக்கு வந்திருக்கும் கமலின் ‘விஸ்வரூபம்’ பார்க்க நேர்ந்தபோது,

அது சந்தித்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தகுதி உடைய படமாகவே இருந்தது.
நம்ம ஊர் சுப்பிரமணி[ரத்னம்] முதல் கமால்பாய் வரை ‘ஹாலிவுட் தரத்தில்’ என்று சொல்லிக் கொள்வதையே உயர்ந்த தரமான விஷயம் என்ற மூடநம்பிக்கை போதை ஊட்டி வளர்க்கப்பட்டதால், கமல் அதே குழந்தை உள்ளத்தோடு, ஹாலிவுட் தரம் என்று எல்லோரும் சொல்லவேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அமெரிக்க- அல்கொய்தா அரசியலைப் படமாக எடுத்தார் என்று அப்பாவியாய் நம்பி ஏமாற மனம் ஒப்பவில்லை.
தமிழ்சினிமாவின் வரலாறை, நாளை எழுத விருப்பவர்கள் தன்னை வெறும் கோடம்பாக்க கூத்தாடி என்று குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்து, குண்டு சட்டி ஓட்டிவிடக்கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் கமல் இப்படி ஒரு அமெரிக்க விசுவாச அவதாரம் எடுத்தார் என்று அல்பத்தனமாக மனது சமாதானம் அடையவில்லை. ஏதாவது ஒரு பல்கலைக்கழக மாணவர்  டாக்டர்பட்ட மேற்படிப்புக்காக ஆராய்ச்சிப்பொருளாக எடுத்துக்கொள்ளவேண்டிய,  பல்நோக்கம் கொண்ட அவரது உள்நோக்கம் படு ஆபத்தானது.
கமலின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் கொஞ்சம் கூடுதலான அறிவும், உலக ஞானமும், ஆஸ்கார் வாங்கத் துடிக்கும் அரிப்பும் கொண்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய கதை.
விஸ்வநாத் என்ற பெயரில், அஜால்குஜால் நாட்டிய ஆசிரியராக நடித்துக்கொண்டிருக்கும் வாசிம் அஹமத் காஷ்மிரி ஆகிய கமல்ஹாசன், தனது தற்காலிக மனைவி நிருபமாவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆண்ட்ரியா உட்பட சில ஆண்ட்டிகளுக்கு கமல் நடனம் கற்றுத்தந்து கொண்டிருக்க, தனது நிறுவன முதலாளியுடன் கள்ளக்காதலில் ஈடுபட விழையும் நிருபமா, தனது கணவர் கமலுக்கும் அதே போல் ஒரு ’க.கா’ இருக்குமானால் குற்ற உணர்வின்றி இருக்கமுடியுமே என்பதற்காக அவரை உளவு பார்க்க ஆள் நியமிக்கிறார். கமலை விரட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் விஸ்வநாத் இல்லை, இஸ்லாமியர், அதுவும் அல்கொய்தாவில் பயிற்சி பெற்றவர், அவரை தற்போது அல்கொய்தாவின் முக்கிய தலைவர்கள், அவரது தலைக்கு விலை வைத்து, அமெரிக்கா வரை வந்து தேடிவந்திருக்கிறார்கள் என்ற விபரீதரூபம் தெரிய வருகிறது.
 கமலைத் தேடிவிட்டு மட்டும் சும்மா போவானேன் என்று நினைத்து, அந்த அல்கொய்தாவாளர்கள் அமெரிக்காவுக்கு குண்டு வைக்க முயல, அவர்களது முயற்சியை உண்டு இல்லை என்று பண்ணி, ’பார்ட்2’வுக்காக வில்லனைக் கொல்லாம விடுறேன்.  அமெரிக்காவ ஆபத்துல இருந்து காப்பாத்தியாச்சி. சீக்கிரமே இந்தியாவுல சந்தி[சிரி]ப்போம்’ என்று வெக்கமில்லாமல் சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.
கமல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, தன்னைத்தவிர அனைவரையுமே எந்த அளவுக்கு முட்டாள்கள் என்று நினைத்திருந்தால், ‘படத்தைப் பார்த்தபிறகு எல்லாருக்கும் பிரியாணி கிண்டிப்போடுவீங்க’ என்று கிண்டலடித்திருப்பார்? அது சிக்கனா மட்டனா என்று சொல்லாததால், மனிதபிரியாணியாக இருக்கக்கூடுமோ? ஜிகாதியாகனும்னு முடிவு பண்ணீட்டிங்களா கமல் சார்?
 ஆப்கானிஸ்தானில், மிக பயங்கரமாக, சித்தரிக்கப்பட்டுள்ள சில காட்சிகள், கதைக்கு தேவைப்பட்டு எடுக்கப்பட்டிருப்பதாக இருந்தாலும் கூட, இஸ்லாமியர்களின் முரட்டுத்தனமான பழமைவாதத்தை பகீரென்று பகிர்கின்றன.  அமெரிக்காவுக்கும், அல்கொய்தாவுக்கும் இடையே நடக்கும் போரில் நம்ம ஊர் அம்பி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியமென்ன? என்னதான் ’உலகநாயகன்’ என்ற பட்டம் கொண்டிருந்தாலும், சொந்தமண் இந்தியாவிலேயே எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்கும்போது, அமெரிக்காவைக் காப்பாற்றவேண்டிய அவசியமென்ன? மற்ற பிரச்சினைகளை விடுங்கள். தமிழ்நாட்டில் ஒரு முன்னணி நடிகரின் படம் சென்சார் வாங்கியபிறகு ரிலீஸ் பண்ணவிடாமல் சின்னாபின்னப் படுத்தினார்கள். அமெரிக்காவைக் காப்பாற்றிய நேரத்தில் அட்லீஸ்ட் அந்த நடிகரையாவது காப்பாற்றியிருக்கலாம்.
மற்றபடி ஒரு நடிகராக, தொழில்நுட்பங்களில் புலிப்பாய்ச்சல் காட்டும் கலைஞனாக, கமல் இதற்கு முந்தைய தனது அத்தனை படங்களையும் தூக்கிச்சாப்பிட்டிருக்கிறார். இது அவருக்கும் தெரிந்திருப்பதாலோ என்னவோ, ‘இந்தக்கதையில நல்லவன், கெட்டவன் ரெண்டுமே நானே’ என்ற வசனத்தை மய்யப்படுத்தி இருக்கிறார். ‘சார் காஷ்மீரிங்குற நம்பிக்கை துரோகியை படம் முழுக்கவே பாத்தோம். யாரோ நல்லவர்ங்குறீங்களே, அவரை ஒரு நாலு ஃப்ரேமாவது காட்டியிருக்கக் கூடாதா?
மற்ற விஷயங்களில் எப்படியோ, பழமொழிகளைப் படைத்ததில் தமிழனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. விஸ்வரூபம் பார்த்து முடித்ததும் ‘யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை’ தான் ஞாபகத்துக்கு வந்தது.
கமல் வர்றார் பாய்.. பிரியாணியை எடுத்து ஒளிச்சி வைங்க,..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.