ஜீ.வி.பிரகாஷின் அன்னக்கொடியும் ‘கடி’வீரனும்

annakkodiyum-kodiveeranum-audio-review

இசை – ஜீ.வீ. பிரகாஷ்.
அவரது பதினாறு வயதினிலே தொட்டு படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி பாரதிராஜா பேசும் பேச்சோடு ஆல்பம் தொடங்குகிறது. கிராமங்களே காணாமல் போன இந்தக் காலத்திலும் “என் கிராமங்கள் கதை சொல்கின்றன” என்று தான் தன்னுடைய இளவயதில் பார்த்த

கிராமத்தையே இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ பாரதிராஜா என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

ஜீ.வி. பிரகாஷின் இசையில் தனித்துவம் என்று இதுவரை ஒரு ஸ்பெஷலான தன்மையையும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இது ஒரு நல்ல இசையமைப்பாளரின் அடையாளமல்ல. யுவனிடம் இசை அடையாளம் இருக்கிறது. ஏன் ஹாரிஸ்ஸிடம் கூட ஏதோ இருக்கிறது. இந்தப் படத்தில் கிழக்குச் சீமையிலேயில் ரஹ்மானிடமிருந்து இசையை கடன் வாங்கி வந்து போட்டாற் போல பாடல்களைப் போட்டிருக்கிறார்.

1.    ஆவாரங்காட்டுக்குள்ளே. சத்ய ப்ரகாஷ், சின்மயி – வைரமுத்து.
இது கி.சீமை. ரஹ்மானின் ஸ்டைலில் ஆத்தங்கரை மரமே டைப் பாடல். சத்ய ப்ரகாஷூம், சின்மயி சிரிபடாவும் பாடியிருக்கிறார்கள். குரல்களும், இசையும் மனதை இழுக்க மறுக்கின்றன.
2.    பொத்திவச்ச ஆசதான். ஜூ.வி.பிரகாஷ், ப்ரசாந்தினி. பாடல் – அறிவுமதி.
அறிவுமதியின் வரிகளில் கிராமத்து வாசகங்கள் வந்து போகின்றன. புல்லாங்குழலில் இழையோடும் ஒரு மெலடிப் பாடல். கேட்கலாம்.
3.    போராளே. எஸ்பிபி சரண், மானசி – கங்கை அமரன்
இதுவும் வழக்கமான ஒரு சோக ட்யூனில் ஒரு கிராமத்து சோகப் பாடல். எஸ்பிபி சரணின் குரல் பாடலை அழுத்தமாக்குகிறது. கங்கை அமரனின் வரிகள் மிகச் சாதாரணமாய் இருந்தாலும் நன்றாய் இருக்கின்றன.  ஓ.கே. ரகம்.
4.    நரிகள் உறங்க. சந்தோஷ் ஹரிஹரன், பூஜா, ஹரிணி சுதாகர். – வைரமுத்து.
ஒரு டூயட். செய்து வைத்த வரிகள். செய்து வைத்த இசை.
5.    அன்னமே என் அன்னமே. ஜீ.வி.பிரகாஷ், பூஜா. – ஏகாதசி.
காதலர்கள் பாடும் சோகப்பாடல். இசையையே காணவில்லை. ஜீ.வி.பிரகாஷ் கிராமத்துப் பாடலை பாடாமல் இருப்பது அவர் உடல் நலத்துக்கு நல்லது. அவர் பாடாமலே இருப்பது தமிழ் சினிமா இசைக்கே நல்லது.
6.    கொலைவாளை எடுங்கடா. ஸ்ரீராம், ரேஹானா, மாயா. – ஏகாதசி.
கொடிவீரன் கோபத்தில் வாளை எடுத்துக் கிளம்பும் காட்சியை நினைவுறுத்தும் ஒரு கோயில் கொட்டு, குலவை டைப் பாடல். பக்திப் பாடலில்லை.

இரு பாடல்களை வைரமுத்துவும், இரண்டை ஏகாதசியும் , ஒன்றை அறிவுமதியும் எழுதியிருக்கிறார்கள். யார் பேரும் வெளியில் தெரிந்து விடாதபடி கவனமாக அமுக்கி வாசித்து விட்டார் ஜீ.வி. பிரகாஷ்.
ஒட்டு மொத்ததமாகப் பார்த்தால் பாரதிராஜாவின் கிராமத்து அன்னக்கொடிக்கு ஜீ.வீ.பிரகாஷ் ரஹ்மானின் ஜீன்ஸ் துணியில் தைத்துக் கொடுத்த மாடர்ன் தாவணி தான் இந்தப் பாடல்கள். கேளுங்கள். கேட்டுவிட்டு என்ன சேதி என்று எனக்குச் சொல்லுங்கள்.

— மருதுபாண்டி.