மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.

MaranthenMannithen-still-23

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற தெலுங்குப் படம் மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியாகி நல்ல கலெக்ஷன் வர ஆரம்பித்ததும் அதை அப்படியே தமிழில் டப் செய்து, தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம் என்று பேருக்கு கொஞ்சம் சில விஷயங்கள் செய்துவிட்டு தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று

ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இது இருமொழியிலும் எடுக்கப்பட்ட படமேதான் என்று பல்வேறு உறுதிகளை லட்சுமியின் அப்பா மோகன்பாபுவும், இயக்குனரும் திரும்பத் திரும்ப தருகிறார்கள். ஆனால் பாக்க அப்படித் தெரியலீங்கோ.

இந்த டப்பிங் குளறுபடிகளை மறந்தேன் மன்னித்தேன் என்று சொல்லிவிடலாம் போல் படம் நம்மை கட்டிப் போடுகிறது. படத்தின் மிக வலுவான அம்சம் அதன் கதையும், திரைக்கதையும். 1986ல், ஆந்திராவில் ராஜமுந்திரி அருகேயுள்ள பங்கரப்பேட்டை என்கிற கிராமத்தில் வசிக்கும் தமிழ்பேசும் மல்லி(ஆதி)க்கும் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வசிக்கும் சித்ரா(லட்சுமி மஞ்சு)வுக்கும் தூரத்து சொந்தக்கார அம்மா ஒருவர் மூலம் மணம் முடிக்க ஏற்பாடாகிறது.

பங்கரப்பேட்டை கிராமத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் போதே மல்லியின் முன்னாள் காதலியான சரளா(டாப்சிப் பொண்ணு)வும் லட்சுமியின் முன்னாள் முதலாளி தொரைபாபு(ரவி பாபு)வும் விஷமமாக சிரித்தபடியே வந்து தங்க ஆபரணங்களைப் பரிசாகத் தந்து செல்கின்றனர். மல்லியும் சித்ராவும் வாழ்வை ஆரம்பிக்கும் போதே சந்தேக விதைகள் தூவப்படுகின்றன.

ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது. பெரும் மழையும் புயலும் வந்த அந்த வேளையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரியில் வெள்ளம் கரையை உடைக்க கிராமமே மூழ்கடிக்கப்படுகிறது. தப்பிப் பிழைக்கும் மல்லியும், சித்ராவும் ஒரு வைக்கோல் போரில் ஏறிக் கொள்ள அது வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படுகிறது. வெள்ளத்தில் மூழ்கி தாங்களிருவரும் இறந்து விடப்போகிறோம் என்று உணரும் இருவரும் அந்தத் தருணத்தில் தங்களது பழைய வாழ்க்கை பற்றி மனம்விட்டுப் பேசுகிறார்கள்.

முதலில் மல்லி-சரளாவின் காதல் கதையும் பின்னர் லட்சுமி மஞ்சு-சூரி(சந்தீப் கிஷன்)யின் காதல் கதையும் விவரிக்கப்படுகிறது. முடிவில் இருவருடைய மனமும் மாறி ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பும் பரிவும் ஏற்படுகிறது. இறுதியில் அவர்கள் தப்பி ஏறிய வைக்கோல் போரும் உருக்குலைந்து விட இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் தப்பினார்களா? ஒன்று சேர்ந்தார்களா? விடையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல் பாதியில் வருகிறது ஆதி டாப்சியின் இளமை துள்ளும் காதல் கதை. படகுமுதலாளி சாம்பசிவத்தின் பெண் சரளாவாக வந்து ஆதியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் வேலையை கவர்ச்சிகரமாகச் செய்கிறார் டாப்சிப் பொண்ணு. அந்தக் காதல் முடியும் விதம்தான் வினோதமானது. ஆதிக்கு வழக்கமான ஹீரோ வேலை.

இரண்டாவது பாதியில் வரும் சித்ரா(லட்சுமி மஞ்சு)வின் கதை இன்னும் ஆழமான, யதார்த்தமான கதை. நான்கு வயதில் அனாதையாக சூரியின் அம்மாவாலும் எடுத்து வளர்க்கப்படும் குழந்தை தான் சித்ரா(மஞ்சு). சூரியின் தந்தை ரிக்ஷா தொழிலாளி. வறுமையின் காரணமாக சூரியின் அம்மா அந்த ஊரில் உள்ள ஒரு டாக்டருடன் நெருக்கமாக இருக்கிறார். அதையறிந்து அம்மாவை வெறுக்கும் சூரி சித்ராவுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கோழிச் சண்டையில் பைத்தியமாக இருக்கும் சூரியின் மேல் உயிரையும் வைத்திருக்கும் சித்ரா அவன் கோழிச்சண்டையில் ஈடுபட தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கூட தருகிறாள். ஒரு கட்டத்தில் சித்ராவை தனது தாயுடன் சேர்ந்து டாக்டர் வீட்டில் பார்க்கும் சூரி அவள் மீது சந்தேகப்பட்டு வெறுப்படைகிறான். அதன் பின் நடக்கும் விஷயங்கள் அவள் வாழ்வை இருளில் தள்ளுகின்றன. லட்சுமி, சூரி மற்றும் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பு கதையை வலுப்படுத்துகிறது. ‘கோதாவரி காதலு’ என்கிற நாவலை தழுவி படத்தை எடுத்திருக்கும் இயக்குநர் குமார் நாகேந்திராவுடு உமக்கு ஒரு வெல்கம்டு.

ஒளிப்பதிவு எம்.ஆர்.பழனிக்குமார் கதைக்கேற்ற வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவுண்ட் கட்டி வருவார். இசை மாஸ்ட்ரோ இளையராஜா. ஒரு கிராமத்துக் காட்சி ஓவியத்தை அசால்ட்டாக வரையும் ஓவியர் போல் சரளமாக இசையமைத்திருக்கிறார். இரண்டு பாட்டுக்களை தமிழுக்கு(ஆசைய காத்துல தூதுவிட்டேன்) ஒன்று, தெலுங்குக்கு ஒன்றாக(மச்சானைப் பார்த்தீங்களா) ரீமிக்ஸ் செய்திருக்கிறார். மற்ற இரண்டு மூன்று பாடல்களும் ஹிட் ரகம் தான்.

மறந்தேன் மன்னித்தேன்…பார்த்தேன் ரசித்தேன்..