ஜெய் ‘பாய்’ன் திருமணம் என்கிற நிக்காஹ்

thirumanam-en-nikkah-news

வல்லினம், மரியான், பூலோகம் மற்றும் ஐ போன்ற படங்களைத் தொடர்ந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படம் திருமணம் என்கிற நிக்காஹ். மெல்லிய காமெடியுடன் சிந்திக்க வைக்கும் கதைப்பின்னலையும் கொண்டிருக்கும் இப்படத்தில் ஜெய் மற்றும் புதுமுகம் நஸ்ரியா நஸீம் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

ஏற்கனவே சென்னையிலும் அதைச் சுற்றியும் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் அடுத்த சுற்றுப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

 படத்தைப் பற்றி ஜெய் கூறுகையில் “எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பின் கதைகளை கேட்டு மனதுக்கு நல்ல கதை என்று பட்டதால் நடிக்க ஒத்துக் கொண்ட படம் இது.  கலகலப்பும் இளமைத் துள்ளலுமாகப் போகும் இப்படத்தில் எனக்குச் ஜோடியாக புதுமுகம் நஸ்ரியா நஸீம் என்கிற கேரளாவைச் சேர்ந்த அழகிய இளம்பெண் நடிக்கிறார். உண்மையிலேயே அவர் அழகுதான். இன்னொரு அழகான பெண்ணும் எனக்கு ஜோடியாக இப்படத்தில் வருகிறார். இது தவிர ஒரு பிரபல நட்சத்திரமும் படத்தில் சிறிய ஆனால் முக்கியமான வேடத்தில் வர இருக்கிறார். அது யார் என்று வாயைத் திறக்கக் கூடாது என்று டைரக்டர் மிரட்டியிருக்கிறார்.. அதனால் சொல்லமாட்டேன் பாஸூ” என்று ஜாலியாகச் சிரிக்கிறார் ஜெய்.

படத்தின் பாடல்களை மதன் கார்க்கி, பார்வதி, தேன்மொழி, காதல் மதி மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் எழுத பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான்.  ஒளிப்பதிவை மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல் வெற்றிப் படத்தை ஒளிப்பதிவு செய்த லோகநாதன் கவனித்துக் கொள்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிக் கொண்டிருப்பவர் அறிமுக இயக்குநர் ‘அனிஸ்’. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் கூத்துப்பட்டறையில் நடித்தும், தனியாகவும் நாடகங்கள் இயக்கியும், நடிப்புப் பயிற்சி வழங்கியும் இருக்கிறார். இவர் நடிகர் நாசரிடம் அவருடைய அவதாரத்திலிருந்து மாயன் வரை பல படங்களுக்கும் உதவியாளராக இருந்தவர்.

இப்படம் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.