’என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ மீண்டும் ‘வசந்தமாளிகை’

vasanathamaligai1

கதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [சந்தமாமா] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க. அதனால பாவம் ஜனங்க, எப்பவாவது ஒரு வாட்டி, கதையோட உள்ள படம் பாக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில், நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘வசந்த மாளிகை’ படம் போட்டார்கள்.

நாளை மறுநாள், வெள்ளியன்று, 100 தியேட்டர்களை களம் காண இருக்கும்’வசந்த மாளிகை’யானது ‘கர்ணன்’ கண்ட கரைபுரண்ட வசூல் சபலத்தின் வழிமொழிதலாகும் என்பதை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

டிஜிடலைஸுடு என்று விளம்பரப்படுத்தப்படுகிற இந்த ‘வசந்த மாளிகை’யைப் பார்த்தபோது, ஒரு பழைய பிரிண்டை எடுத்து வந்து, அதை ஈரத்துணியால் துடைத்து ரிலீஸ் பண்ணியதைத்தாண்டி, வேறு மெனக்கெடல்கள் எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை.

இனி ஒரு பழைய படத்தை டிஜிடலைஸுடு ரீ-ஸ்டோரேஷன் பண்ணி வெளியிடும்போது, அதைப்பற்றி பத்து வரிகளுக்கு மிகாமல் எதாவது எழுதி வெளியிட்டு, அப்புறமாய் படத்தை வெளியிடும்படி, அப்பன் கணேசனின் அடிபோற்றி வேண்டிக்கொள்கிறேன்,

ரிலீஸான ’72 சமயத்தில் இந்தப்படத்தில் சிவாஜியின் நடிப்பும் பெரிதும் சிலாகிக்கப்பட்டதென்றாலும், ’புதிய பறவை’ தில்லானா மோகனாம்பாள்’ ‘உயர்ந்த மனிதன்’ போன்ற படங்களோடு ஒப்பிடுகையில், இதில் அவர் நடிப்பு சுமாருக்கும் கீழ்தான்.

வாணிஸ்ரீயின் மேக்கப்புக்கே தனி வண்டி கட்டி ஷூட்டிங் போயிருப்பார்கள் போல. ப்ப்ப்ப்ப்ப்பா யார்றா அந்த பொண்ணு, மேக்-அப்ல பயங்கரமா இருக்கு’ என்று தியேட்டர்களில் நடுவுல கொஞ்சம் கமெண்ட் வரப்போவது நிச்சயம்.

நாகேஷ், வி.கே.ராமசாமி,ரமா வகையறாக்களின் காமெடியை கொஞ்சம் எடி’த்திருக்கலாம். அந்த கெட்ட ஆவிகள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து கொட்டாவி வருகிறது.

மற்றபடி ‘பழசை மறக்கலியே பாவிமக நெஞ்சு துடிக்குது’ பார்ட்டிகள் பார்த்து மருக, படம் முழுக்க பல சமாச்சாரங்கள் உள்ளன. குறிப்பாக ‘ஓ மானிட ஜாதிகளே’ கலைமகள் கைப்பொருளே’வில் துவங்கி ‘யாருக்காக’ வரை அத்தனை பாடல்களுமே பாட சுவாரசியமானவை. படம் பார்த்த அன்று இரவு கவிதை மனசு கொண்டவர்கள் அத்தனைபேரின் கனவிலும் ’கவிதைப்பேய்’ கண்ணதாசன் சில நிமிடங்கள் வந்து ‘ஹாய்’ சொல்லுவார்.

சின்ன வயசில் பார்த்த ஞாபகத்தின் படி, க்ளைமேக்ஸில் சிவாஜி ரத்தவாந்தி எடுத்து இறந்துவிட, வசந்தா வாணிஸ்ரீ, அவரது மடியிலேயே உயிர்துறப்பதாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்றோ, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று குணப்படுத்தி காதலர்களைச் சேர்த்துவைக்கிறார்கள்.

இது தெரியாமல் ‘என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ நல்லவேளை ‘டிஜிடலைஸ்ல க்ளைமேக்ஸையாவது சுபமா மாத்தி, நம்மளை சுகமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாங்களே’ என்றேன் சத்தமாக.

‘யோவ் முட்டாள் முத்துராமலிங்கம், முதல்ல இருந்தே இதுதான்யா க்ளைமேக்ஸ்.வாணிஸ்ரீ சொன்னாளேங்குறதுக்காக சரக்கை பாதியில நிறுத்திட்டு நான் பட்ட பாடு போதாதா? எதையும் பாதியில பட்டுன்னு நிறுத்தாதீங்கன்னு சொன்னா கேக்குறாய்ங்களா’…

என்று இருட்டிலிருந்து ஒரு குரல்.

அது சிம்மக்குரலோன் சிவாஜியின் குரல் போலவே இருந்தது.

’சார் பின் வரிசையில வெள்ளைச்சட்டை போட்டுக்கிட்டு படம் பாத்தது நீங்கதானா?’ சொல்லவே இல்லை’.

பி;கு: கடைசி வரியை படித்து திகிலடைந்த பிஞ்சு மனசுக்காரரா நீங்க? அப்ப இந்த பின்குறிப்பு உங்களுக்காக மட்டுமே.

‘வசந்தமாளிகை’ ரிலீஸான ஆண்டு 1972. ஆனால் இந்தப்படத்தின் பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர் 1973-ஆம் ஆண்டு பிறந்த நிகில்முருகன். பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பே அவர் ‘வ.ம’வில் பி.ஆர்.ஓ.வாக ஒப்பந்தமானது எப்படி? டென்சனாகாம, ஒரு மூலையில உக்காந்து யோசிங்க. நீங்களும் ‘பிட்சா’ மாதிரி ஒரு கதை எழுதலாம்.