ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்கும் திறமை எனக்கில்லை – சசி

555-director-sasi-interview

‘சொல்லாமலே’ சசி கடைசியாக கொடுத்த பூ படம் திருமணத்திற்குப் பின்னும் காதலன் மேல் அன்பாகவும் கணவன் மேல் பாசமாகவும் இருந்த மாரி என்கிற ஒரு பெண்ணின் யதார்த்த வாழ்க்கையாக இருந்தாலும் மக்களிடம் வரவேற்பைப் பெறாததால் சற்று விரக்தியடைந்து போன சசி யாரிடமும் ‘சொல்லாமலேயே’ 5 வருடங்களாய் எடுத்த படம் 555.

ஏன் இந்த டிலே என்று கேட்ட போது “நீங்கள் என் இயலாமை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஆண்டுக்கு ஒரு படம் தரும் திறமை இல்லை. 15 வருடங்களில் 5 படம் தான் இயக்கியிருக்கிறேன். ஒரு கதை என்னைப் புரட்டிப் போடவேண்டும். தூக்கம் கலைக்க வேண்டும். அப்போது தான் அதனுள் இறங்குவேன்.” என்கிறார்.

அப்படி டிலே ஆகுமளவுக்கு தனது சினிமாவில் அவர் வைத்திருக்கும் இலக்குத் தான் என்ன ? என்ற போது “நான் தனியன். எனக்கென்று இலக்குகள் ஏதும் இல்லை. எந்த ஹீரோவிடமும் கதை இப்படி இருக்கு வர்றீங்களா என்று கேட்பதில்லை. அதற்காக யாரையும் உதாசீனம் செய்கிறேன் என்பது அர்த்தமில்லை. என் படம் 10 வருடம் கழித்துப் பார்த்தாலும் தரமாய் இருக்க வேண்டும். என் பேரனுடன் கூட அமர்ந்து பார்க்கும்படி இருக்க வேண்டும். அப்படித் தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன்”

திடீரென்று 555 என்று கமர்ஷியல் சப்ஜெக்டில் இறங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே?
வெளிநாடு சென்று வேலை பார்த்து செட்டில் ஆகவேண்டும் என்று பெரும்பாலான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கனவு காண்பார்கள். அது போல கனவு காணும் ஒரு இளைஞனுக்கு நேர்ந்த ஒரு விபத்தால் அவன் எதிர்காலம் சிதைந்து போகிறது. அதை அவன் எப்படி மீட்டெடுத்தான். தன் கனவை அடைந்தானா என்பது தான் இந்தப் படம்.
இப்படத்தில் பரத் நிச்சயம் புது பரிமாணம் காட்டியிருக்கிறார். சந்தானத்தை வழக்கமான காமெடி சந்தானமாகக் கடந்து செல்லமுடியாது. இருவரும் அப்படி நடித்திருக்கிறார்கள். இது தவிர கமர்ஷியல் நோக்கத்திற்காக எரிக்கா, பெர்ணான்டஸ் என்கிற இரு இளம்பெண்கள் கவர்ச்சியாக நடனமாடியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் வழக்கமான படங்கள் போலத்தானே இதுவும். இதிலென்ன விசேஷம் ?
“டார்லிங் டார்லிங் படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா பாக்யராஜை எங்கிருந்துய்யா இந்தக் கதையப் புடிச்சே என்று வெகுவாகப் பாராட்டினாராம். அதற்கு பாக்யராஜ் சார் இது உங்க 16 வயதினிலே படம் தான். சின்ன உல்டாக்கள் செஞ்சேன்னாராம். இரண்டுமே தகுதி இல்லாத ஒருவன் தகுதிக்கு மீறிய பெண்ணை விரும்புவது பற்றிய கதைகள் தான். டைட்டானிக் கூட வில்லன் இருக்கிற ஒரு அழகான காதல் கதை தான்.

நான் இதுவரை கமர்ஷியல் சினிமா என்பதாக மெனக்கெட்டுச் செய்ததில்லை. ஹீரோ, ஹீரோயிஸம், ஹீரோவுக்கு ஓப்பனிங் சாங் போன்ற விஷயங்களை புதிதாகச் சேர்க்க முயன்றபோது உண்மையில் சிரமப்பட்டேன். இது கமர்ஷியல் கதையாக இருந்தாலும் மனதைத் தொடும் கதையாகவும் இருக்கிறது.

பூவின் தோல்வியில் நான் கற்றுக் கொண்டது மிக யதார்த்தமான நிகழ்வுகள் சினிமா கதையாவதில்லை. அப்படியே ஆனாலும் அவை வெற்றி பெறுவது மிக அரிது. சினிமா என்பது வியாபாரம் சார்ந்த ஒரு கலை. இது மிகத் தாமதமாகத் தான் எனக்குப் புரிந்தது.”

மலையாளத்தில் இன்றளவும் நல்ல கதைகளுள்ள படங்கள் வந்து வெற்றி பெறுகின்றன. தமிழ் சினிமா என்றாலே கமர்ஷியல் தானா கதி ?
“பூ படம் இப்போது வெளியிடப்பட்டாலும் ஓடுமா என்பது சந்தேகம். இன்னும் 25 வருடங்களுக்குப் பின் ஓடுமா. அதுவும் சந்தேகமே. சமுதாயம் மாதிரி, அரசியல் மாதிரி மக்களுக்கு எது பிடிக்குமோ அதைக் கொடுப்பதாக மட்டுமே தமிழ்ச் சினிமா மாறிப்போனது. இன்று போடப்படும் திட்டத்தால் 50 ஆண்டுக்குப் பின் என்ன பலன் கிடைக்கும் என்று எந்த விளைவும் ஆராயாமல் இருக்கும் மக்களே அதிகம். அது போல் தான் நம் சினிமாவும் இருக்கிறது.

ஈரான் படமான தி செப்பரேஷனைப் பார்க்கும் போது நம் ஊர் இயக்குனர்கள் மேல் கோபம் வரும். அவ்வளவு யதார்த்தமாக படங்களை எடுக்க முடிகிறது அவர்களால் என்பது ஆச்சரியமான விஷயம். ஆனால் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்டுகிற படங்கள் தோற்காது என்னும் நிலை இங்கு வரும் போது தான் தமிழ் சினிமாவின் இந்த கமர்ஷியல் நிலை மாறும்.”