gowravam

மை டியர் ராதாமோகன் ,

நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் உங்கள் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் தந்த மசால் வடையும், இடியாப்பமும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு ‘கவுரவம்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

அழகிய தீயேமுதல்பயணம்வரை தமிழ்சினிமாவுக்கு கவுரமான படங்கள் தந்து, தனித்த ஒரு முத்திரையுடன் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர் நீங்கள். அதிர்வுகள் அதிகமற்று

மெல்லிய மனதுடன் உரையாடிய உங்கள் திரைமொழியால் கவர’ப்பட்ட சில லட்சம் ரசிகர்களுள் நானும் ஒருவன். ஆனால் பிரகாஷ்ராஜைப் போல் நெருங்கிய நண்பனோ, உங்களை சதா கக்கத்துள் முடிந்து வைத்துக்கொண்டுவெளியேநடமாட விடாத நண்பனோ அல்ல.

மொழிஉட்பட்ட உங்கள் படங்களை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் சினிமாவில் சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்பே, மேல்தட்டு அல்லது நடுத்தர மேல்தட்டு வகுப்பினரைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன். யூகிக்கக்கூட தேவையில்லாத இன்னொரு சமாச்சாரம் நீங்கள் கண்டிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்லது அவர்களது வலியைச் சற்றேனும் அறிந்தவரும் அல்ல என்பது.

ஏனெனில் தலித் இன மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாவ்லா பண்ணப்பட்டுள்ள கவுரவத்தின் ஒரு ஃப்ரேமில் கூட அவர்களது வலி பதிவு செய்யப்படவில்லை. நீங்கள் தலித்தாய் இருந்திருக்கும் பட்சத்தில் சினிமா மொழியே கைவரப்பெறாதவராய் இருந்திருப்பினும், ஒரு கசப்பான அனுபவத்தின் பகிர்வே கூட மிகப்பெரிய கலைப்படைப்பாய் வந்திருக்கக்கூடும்.

இதை முன்வைத்து தலித்கள் பிரச்சினையை அவர்கள் அல்லாதவர்கள் கையாள முடியாது என்றோ, உண்மையான வலியோடு பதிவு செய்ய முடியாது என்றோ நான் சொல்ல வருவதாக, குறுகிய மனதோடு புரிந்துகொள்ளல் ஆகாது. அப்படிப் புரிந்துகொண்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்றே கூறுவேன்.

அடுத்த இன்னொரு பிரச்சினை, ’கவுரவம்’ படப்பிடிப்புக்கு முன்னர் நீங்கள் தற்செயலாகக் கூட எந்த கிராமத்துப் பக்கமும் கூட போயிருக்க வாய்ப்பில்லை என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் பேஸ்மெண்ட் இவ்வளவு வீக்காக இருக்கும்போது, கிராமம், தலித் இனப் பிரச்சினை என்று எப்படி ஒரே நேரத்தில் இரண்டு விஷப்பரிட்சைகளில் இறங்கத் தயாரானீர்கள் அல்லது இறக்கிவிட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

சரி, கதைக்கு வருவோம்.

வெண்மணி என்று நிஜ கிராம பெயரைச் சூட்ட திராணியற்று வெண்ணூர் என்று கதை நடக்கும் கிராமத்துக்கு நீங்கள் பெயர் சூட்டியதில் இருந்தே, தலித் சினிமா என்ற பெயரில் ஆட ஆரம்பிக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாகிவிடுகிறது.

ஊர்ப்பெரியவரான பிரகாஷ்ராஜின் மகளை, அதே ஊரைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில், தலித் இளைஞருடன் கூடப் படித்த நண்பர் [ஆந்திர நாயகன் அல்லுசுரேஷ்] அவரைத்தேடி வெண்ணூருக்கு வந்து நண்பனை தேட ஆரம்பிக்கிறார். இந்த தேடுதல், குழிதோண்டி புதைக்கப்பட்ட தங்கள் கவுரவத்தை மீண்டும் தோண்டி எடுத்து அவமானப் படுத்துவதாக பிரகாஷ்ராஜ் கோஷ்டி நினைத்து, நாயகனுக்கு தொந்தரவு கொடுக்க ஃபேஸ்புக் உதவியுடன், தலித் இளைஞருடன் படித்த அத்தனை நண்பர்களையும், அதே வெண்ணூர் கிராமத்துக்கு வரவழைத்து, காதல் ஜோடிகள் இருவரும் வறட்டு கவுரவத்துக்காக வெட்டிக்கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் இணையாடும் நண்பர்களில், சில குழுவினர், சமூக அவலங்களுக்கு எதிரான சிறிய மிரட்டலாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது நிதர்சனமாகப் பயன்படுத்தப்படாமல், ஒரே கலர் ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்து கைகோர்த்துப் பாடி புரட்சி ஏற்படுவதுபோல், ஒரு மாயையை வணிக நோக்கில் மட்டுமே செய்திருக்கிறீர்கள் என்ற சந்தேகத்தை மட்டுமே உண்டாக்குகிறது.

மட்டனும், சிக்கனும் சாப்பிடும் பிராமின்கள் பயங்கர புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்கள் என்கிற மொக்கையான சிந்தனையை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.[ விசனம் விஜி ]

நாயகன் அல்லு சிரிஷ் பணக்கார வீட்டுப் பிள்ளையாக இல்லாதிருந்தால், அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூட்டத்தில் முதல் வரிசையிலாவது நிறுத்தியிருப்பார்களா என்பதே சந்தேகமே? அப்படி ஒரு முக லட்சணம். முக லட்சணத்தை விட்டுவிடுவோம். முகபாவம் எதையும் வெளிப்படுத்தத் தெரியாமல் படம் முடியும் வரை, பாவமாக வந்து விட்டுப்போகிறாரே, அது யார் செய்த பாவம்? உங்கள் தயாரிப்பாளர் எவ்வளவு வாங்கிக்கொண்டு அவரை ஹீரோ ஆக்கினார்? அதற்கு உடன்பட்டதற்கு உங்கள் பங்கு என்ன? [அதில் எனக்கு வரவேண்டிய ‘கட்டிங்’ ஏன் இன்று வரை வந்து சேரவில்லை?]

நாயகி யாமி கவுதமுக்கு யாழினி என்று அழகிய பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். புடலைங்காய்க்கு புடவை கட்டிவிட்டமாதிரி, அதை பொறியல் செய்து சாப்பிடலாம் போல புதிரான ஒரு அழகாய் இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் வழக்கமான மிகைநடிப்பு. இன்னொரு பக்கம் நாசர் குட்டி வேடத்தில் வந்தாலும் பிரகாஷுக்குப் போட்டியாக நடிப்பில் நெஞ்சை நக்குகிறார். நூற்றுக்கணக்கான படங்களில் இதே போன்ற பாத்திரங்களில் நடித்த பிறகும், இந்த குணவிசித்திர நடிகர்கள் நம்மை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்க காரணம் என்ன என்று, ஒரு காமெடி கதையாக யோசித்து, நல்ல நடிகர்களாகப் போட்டு அடுத்த படம் இயக்குங்களேன். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்றாக வரும்.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவிலும், எஸ்.எஸ். தமனின் இசையிலும் வில்லேஜ் எஃபெக்ட் விழலுக்கு இரைத்த வெந்நீர்.

பாடல்களுக்கான சூழலும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் கூட கவுரமாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இப்போதும் நீங்கள் எனக்குப் பிரியமான இயக்குனர்தான். ஒரு சமூகப் பிரச்சினையை கையில் எடுத்து, அதை வியாபாரம் மட்டுமே ஆக்க முயன்றதால் வந்த கோபமே இது.

இனி கிராமங்களை படங்களில் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு, உங்களைச் சுற்றியுள்ள வாழ்வியலைப் படமாக்க முயலுங்கள். இது ஆலோசனை அல்ல சுயநலம்.

தமிழில் நல்ல இயக்குனர்கள் என்று நம்பப்பட்டவர்கள் எல்லாம் நாறிக்கொண்டு வரும் வேளையில் உங்களையும் இழக்க நாங்கள் தயாரில்லை.

‘கவுரவம்’ ஆச்சாரமான சாத்தான்கள் ஒன்றிணைந்து ஓதிய வேதம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.