தர்மத்தின் வாழ்வுதனை ‘கவ்வும் சூது’

soodhu-kavvum-movie-review

மங்காத்தாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நவீன கால ‘தீது வெல்லும்’ ட்ரெண்ட் சூது கவ்வும்மில் கொஞ்சம் விலாவரியாக காமெடி ட்ராக்கில் நீண்டிருக்கிறது.

மூன்று நண்பர்கள். சின்ஹா,ரமேஷ் மற்றும் அசோக். அதில் முதல் இருவர் வேலையில்லாத, வேலை போன வாலிபர்கள். மூன்றாவது

நண்பனுக்கும் வேலை பறி போய் திடீரென ஒரு நாள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும்போது அவர்களுக்கு அறிமுகமாகிறான் தாஸ்(விஜய் சேதுபதி), ஒரு லோக்கல் லெவல் கடத்தல்காரன். ஸாரி.. முறையாய் 5 ரூல்ஸ் வைத்து கடத்தல் செய்யும் கடத்தல்காரர்.

தாஸின் ‘கடத்தல்’ விதிகள் ஐந்தும் கீழே..
1.    அதிகாரத்தின் மேல் கைவைக்கக் கூடாது.
2.    வன்முறையை பிரயோகிக்கக் கூடாது.
3.    எக்காரணம் கொண்டும் கையில் ஆயுதம் தூக்கக் கூடாது.
4.    பேராசை கூடாது. எதிராளி கொடுக்க முடிந்த தொகையை மட்டும் தான் பிணயத்தொகையாக கேட்கவேண்டும்.
5.    திட்டம் சொதப்பினால் வாபஸ் வாங்கிவிட வேண்டும்.

இந்த ஐந்து விதிகளுக்கும் உட்பட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறு சிறு ஆட்கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிக் கடத்தி விடுவிக்கும் ஒரு ஸ்கூல் பையனின் அப்பாவிடமிருந்து வினோதமான கோரிக்கை வருகிறது. நேர்மையான அமைச்சர் ஞான உதயத்தின் 25 வயது மகனை கடத்தும் கோரிக்கை. அவர்களின் 5 விதிகளில் அது பொருந்தி வராவிட்டாலும் பேராசையால் அந்த முயற்சியில் இறங்குகிறார்கள்.

அங்கே ஆரம்பிக்கும் சனி இன்டர்வெல் தாண்டியும் பிரம்மா என்கிற என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் வடிவில் அவர்களைத் துரத்த அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நகைச்சுவையாக படம் விவரிக்கிறது.

கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புக்கள் எல்லாம் படு சீரியசாக இருக்கும். ஆனால் பார்க்கும் நமக்கோ சிரிப்பை வரவழைக்கும். கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் இந்த வகைக் காமெடி தான். இப்படத்தில் அவ்வளவு கஷ்டமான காமெடி வகையை முயன்று சிக்ஸர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நலன் குமரசாமி. இவர் ஏற்கனவே படு ஹிட்டான 5 குறும் படங்கள் இயக்கியவர். இவர் மட்டுமல்ல. படத்தில் வரும் அனைவருமே விஜய் சேதுபதி உட்பட குறும்பட ஆட்கள்தாம்.

படத்தின் மிகப் பெரும் பலம் திரைக்கதை, வசனம் மற்றும் மிகைப்படுத்தலில்லாத நடிப்பு. காட்சியமைப்புக்கள் மிகச் சாதாரணமாகவே இருந்தாலும் பளிச்சிடும் நக்கல் வசனங்களுக்கு கைதட்டல்கள் கேட்கின்றன. அதே போல அடுத்ததாக என்ன நிகழும் என்பதை ஊகிக்கமுடியாமல் போக்கை மாற்றியபடியே செல்லும் திரைக்கதை பார்வையாளர்களை படத்துடன் கட்டிப் போடுகிறது. நலன் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

ஒளிப்பதிவு செய்திருப்பவர் தினேஷ். குறும்பட டீம் கேமரா மேன்கள் போலவே தேவையற்ற ஒளியளவுகளை உபயோகப்படுத்தாமல் செய்திருக்கிறார். படத்திற்கு புதிய அழுகூட்டாவிட்டாலும் போதிய பலம் சேர்க்கிறது.

நடிப்பில் விஜய் சேதுபதியும், சின்ஹா, ரமேஷ், இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் அதிக சிரத்தை காட்டியிருக்கிறார்கள். ஆனால் படத்தின் நான்கு நண்பர்கள் கதாபாத்திரங்களுமே தட்டையாக பணம் என்றால் வாயைப் பிளப்பவர்களாக, குடிப்பவர்களாக, மனசாட்சியை ஆடியன்ஸ் போல் தொலைத்தவர்களாக உள்ளது தான் நெருடல்.  

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் என்கிற பையன் குறும்படத்திலிருந்து வந்தவரே. பிட்சா, ந.கொ.ப.காணோம் என்று நாலைந்து படங்கள் ஹிட் கொடுத்து பிஸியான இசையமைப்பாளராகிவிட்டார். 13 படங்கள் கைவசம் வைத்திருக்கிறாராம். காசு, பணம், துட்டு, மணி பாட்டும், கம்முனா கம், கம்மாட்டி கோ என்கிற பாட்டும் செம ஹிட். மற்ற பாடல்கள் கேட்கலாம் ரகம். இசையில் எதுவுமே மனத்தை மயக்காவிட்டாலும் கேட்கும்படி இருப்பது படத்துக்கு பலமே. அவருடைய பிண்ணனி இசையும் கூட அப்படித்தான். இருக்கிற வெற்றிடத்தை சரியாய் நிரப்பும் பிண்ணனி இசை. அவ்வளவே.

மொத்தத்தில் பார்த்தால் படம் ஒரு சிறந்த படமாய் இருக்க வேண்டும். இது ஒரு தமிழ் சினிமாவின் மைல்கல் படமல்ல தான். என்றாலும் படம் ஹிட்டாகும். அதில் சந்தேகமே இல்லை. கதை கருத்து என்று எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல ஜனரஞ்சகமான பொழுது போக்குப் படம்… என்று முடித்து விடலாம் தான். ஆனால் முடிக்கும் முன் படத்தில் எனக்கு எழும் ஒரு சிறு உறுத்தல் பற்றியும் பேசிவிடலாம்.

சென்னையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர் தண்ணி செலவுக்குப் பணமில்லாமல் போகவே தங்களுடைய நண்பனான பணக்கார வீட்டுப் பையனைக் கடத்தி அவன் பெற்றோரிடம் பணம் கேட்டு அதற்குள் அவன் முரண்டு பிடிக்கவே ஓங்கி அடித்ததில் நண்பன் செத்துப் போனான்…

சமீபத்தில் அம்பத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் கழுத்திலிருந்து செயின் அறுக்கும் கும்பலை போலீஸ் விரட்டிப் பிடித்த போது மாட்டியவர்கள் கல்லூரி மாணவர்கள்..

தாஸின் ஐந்து விதிமுறைகளை மேற்சொன்ன குற்றவாளிகளுக்குப் பொருத்திப் பார்த்தால்… வன்முறையற்ற பிரச்சனைகளற்ற, பண ஏற்றத் தாழ்வுகள் கடத்தல்களால் ‘சரி செய்யப்படும்’ ஒரு சமுதாயம் அமைந்து விடும். யாரும் சாக வேண்டியதில்லை. யாரும் போராட வேண்டியதும் இல்லை.

தற்காலத்தில் சினிமா படமே ஒரு வகையான தப்பித்தல் மனப்பான்மையை (escaping tendency) வளர்க்கும் கலையாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல் அதிலிருந்து நழுவிச் செல்வது. வெறுமனே அர்த்தமில்லாமல் பைத்தியக்காரத்தனமாய் சிரித்துக் கொண்டே இருப்பதற்கு மட்டுமே எடுக்கப்படும் இது போன்ற காமெடிப் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

ரமேஷ்ஷின் வேலை போனதுக்குக் காரணம் அடுத்தவர் காரை ஓட்டிப் பார்க்க விரும்பிய ‘பேராசையே’. அதனால் தான் பேராசை கூடாது என்று தாஸ் ஒரு விதிமுறை வைத்திருக்கிறான்.
அசோக்கின் வேலை போனதன் காரணம் மேலதிகாரியை ‘போடா வெண்ணை’ என்று திட்டியதே. அதனால் தான் தாஸின் இன்னொரு விதிமுறை அதிகாரத்துடன் மோதாதே என்று உபதேசம் செய்கிறது.
ஆயுதம் தூக்குபவர்கள் யார் ? ஒன்று கொலைகாரர்கள். இன்னொன்று தீவிரவாதிகள். கொலைகாரனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ யாரும் ஆகிவிடக்கூடாது என்கிற ‘நல்லெண்ணத்தில்’ சொல்லப்பட்டது தான் ‘எக்காரணம் கொண்டு ஆயுதம் ஏந்தக் கூடாது’ என்கிற விதிமுறை.

இப்படி எந்த வித வன்முறையுமின்றி ஆனால் தங்களது நோக்கமான பணம் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எப்படி ? அதற்கு அம்பானி மகனை அவர்கள் கடத்தி அம்பானியின் பல லட்சம் கோடிகளில் ஒரு பத்து கோடியை பிணையமாகப் பெற்றுவிட முடியாது. அய்யாச்சாமியின் மகனைத் தான் எளிதில் கடத்த முடியும். அவன் வாங்கும் 45 ஆயிரம் ரூபாய்ச் சம்பளத்தை அவனிடமிருந்து எளிதில் பிடுங்கி விட முடியும். ஆகவே அதுவே அவர்களுக்கு விதிமுறையாகிறது.

தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த போது படத்தின் ஆரம்பத்தில் தொடர்ந்து வரும் குடிகாரக் காட்சிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த விசில். அப்போது தான் பார்த்தேன் என் பக்கத்து சீட்காரன் சீட்டுக்கு அடியில் டாஸ்மாக்கை கலந்து கொண்டு ரகசியமாய் குடித்துக் கொண்டிருந்தான். முன்வரிசையில் அவனது மிக்சிங்குக்காக காத்திருக்கும் மூன்று நண்பர்கள். பின்வரிசையில் நவநாகரிக உடையணிந்து பாரிலிருந்து நேரே வந்திறங்கிய கல்லூரித் தங்கங்கள் நான்கு பேர். இவர்களது இத்துப் போன மனசாட்சிக்கு இந்தப் படம் வக்காலத்து வாங்குகிறது டயலாக்குகளில் (மச்சி 9.50 ஆச்சிடா கிளம்புடா 10 மணிக்கு கடையடைச்சிடுவான்..). உடனே தியேட்டர் பூராவும் ஒரே ஆரவாரம்.

அதுகூடப் பெரிதில்லை. அந்த நேர்மையான அமைச்சர் ஞானப் பிரகாசத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவருடைய ஃப்ராடு மகனுக்கு தேர்தல் சீட் கொடுத்து அவனை ஷேர் தரச் சொல்லும் முதலமைச்சரின் டயலாக்குக்கு தியேட்டரே அதிர்கிறது அதை ஆமோதிக்கும் விதமாக. இங்குதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு இருக்கும் மறைமுக கற்பனை வியாதி போல நிஜத்தில் ஆடியன்ஸூக்கும் பணவெறி வியாதி உள்ளுக்குள் உறைந்திருப்பதை உணரமுடிகிறது. ‘பணத்துக்காக எது வேணும்னாலும் செய்’ என்பது தான் மக்களின் புதிய ஆத்திச்சூடியாய் மாறியிருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை மட்டுமல்ல.. இப்போது எல்லோருடைய வாழ்க்கையையுமே பணம் என்கிற சூது கவ்வி விட்டது என்பதை தியேட்டரை விட்டு வெளியே வந்த போது என்னால் உணர முடிந்தது.

தண்ணியடிச்சா தப்பில்லை மாமு.. 2000ஆம் வருடத்தில். பிடிச்ச பொண்ணோட படுத்துக்கிட்டாவும் தப்பில்லை. 2010ஆம் வருடத்தில். . பணத்துக்காக எது வேணா சைலன்ட்டா பண்ணிணா தப்பில்லை மாமு.. 2013ஆம் வருடத்தில்.

இவ்வகையில் சூது கவ்வும் தேய்ந்து மறைந்து கொண்டிருக்கும் மனித மதிப்பீடுகளை மறைமுகமாக அளவிட பயன்பட்டிருக்கிறது.

அளவீட்டு மதிப்புக்கள் தான் நம் நெஞ்சை பாரமாய் அழுத்துகிறது.