போதையின் ஞானம் மாற்றம் எதுவும் தந்துவிடாது – தினந்தோறும் நாகராஜ்

dhinandhorum-nagaraj-mathappoo-interview

சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வெளியான தினந்தோறும் என்கிற படம் யதார்த்தமான குடும்பம், காதல் பிரச்சனைகள் என்று வித்தியாசமாக பளிச்சிட்டபோது அப்படத்தின் இயக்குனர் நாகராஜை எல்லோரும் நம்பிக்கையுடன் கவனித்தனர். ஆனால்

கலைஞர்களுக்கேயான பலவீனங்களான குடி, பிடிவாதம் ஆகியவற்றால் இழுக்கப்பட்டு வாழ்வின் இருளான பக்கங்களுக்குள் பயணித்த நாகராஜ் பின்பு அவற்றிலிருந்து மீண்டெழுந்த புதுமனிதராக ‘மத்தாப்பூ’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் நுழைகிறார். நடுவில் அவர் மின்னலே மற்றும் காக்க காக்க படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதியிருக்கிறார்.

மத்தாப்பூ வழக்கமான காதல் படம் போலத் தான் தெரிகிறது. இல்லையா ?
எளிய மனிதர்கள்தான் வாழ்க்கையை குதூகலமாக வாழத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நம்மைப் போல சாதாரண ஒரு மனிதனின் எளிய வாழ்க்கை, காதல் தான் படம். அதை அவனது உறவுகளின் அருகே போய் உணர்வுபூர்வமாக படம் பிடித்தால் எப்படியிருக்குமோ அது தான் மத்தாப்பூ. இதில் காதல் எப்படி.. பொறுத்திருங்கள்.

காதல் போக கதையில் வேறு ஏதும் உண்டா ?
எனது ஊர் நாகர்கோவில் அருகில். டிப்ளமா படித்த காலத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று இரவு பகலாக முழித்துப் படிப்பேன். நடு இரவில் விழிக்கும் அம்மா ‘என்னடா இந்நேரத்துல படிக்கிற’ என்று கரிசனமாக கேட்கும் போது ‘உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாதும்மா’ என்று சொல்லியிருக்கிறேன்.

பின்பு சினிமாவுக்கு சென்னை வந்து போராடிக்கொண்டிருக்கும் போது ஊர் பக்கம் போனால் ‘மெட்ராஸ்ல என்னடா பண்ற’ன்னு கேப்பாங்க அம்மா. ‘இதுவும் உனக்குப் புரியாதும்மான்னு’ சொன்னேன். ‘சாக்காடு வர்றதுக்குள்ள எனக்கு புரியற மாதிரி ஏதாவது செய்டா’ ன்னு சொன்னாங்க அன்னிக்கு.
 
இன்னிக்கு அவங்க வார்த்தைகள் என்னைச் சுடுது. இருக்கும் போது அம்மா, அப்பாவோட அருமை புரியலை. எது சொன்னாலும் திட்டுறாங்கன்னு நினைக்கிறோம். ஆனால் பின்னாளில் காலை எழுந்தது முதல் வேலை வேலையென்று அலைந்து திரிந்து மனம் வாடி வரும்போது ‘சாப்பிட்டியா’ என்று கேட்க ஆள் வேண்டும். அப்படி இல்லாத வாழ்க்கை நரகம் தானே. இந்த உலகின் அழுத்தங்களிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் இப்படிப்பட்ட பாசம், உபசரிப்பு, அன்பு, காதல் இதற்காகத்தானே நம் மனது ஏங்குகிறது. அந்தப் பாசத்தையும், அன்பையும் இந்தப் படம் மனிதர்களின் மனத்தில் விதைக்கும். கலகலப்போடு கனத்தோடு கதை சொல்லியிருக்கிறேன்.

உங்களைப் பொறுத்தவரை நல்ல சினிமா என்பது என்ன ?
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லாவற்றையும் மாற்றவும் சினிமாவால் முடியும் என்கிற நம்பிக்கையுடையவன் நான். படைப்பாளிதான் தன்னுடைய சினிமாவை தீர்மானிக்கிறான். ரசிகன் தான் மதிப்பெண் போடுகிறான். எவ்வளவோ விஷயங்களை சினிமாவில் சொல்லமுடியும். அதே நேரம் ஒரே மாதிரியான பார்முலாவில் இயக்குனர்கள் லாக் ஆகிவிடக்கூடாது. முதலில் என்னை கமர்ஷியலாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். பின்பு நெஞ்சைத் தொடும் நிறைய கதைகள் சொல்லுவேன்.

படத்தின் புதுமுக ஹீரோ, ஹீரோயின் பற்றி..
ஹீரோ ஜெயன் சென்னை வாசி. சினிமாவுக்கு நடிக்க வர்றியான்னு கேட்டதும் ‘அதுக்கு உடம்பை எப்படியெல்லாம் மாத்திக்கனும் சார்’ன்னு கேட்டார். ‘உடம்பை முறுக்கு, நசுக்குற வேலை எதுவும் இதில் இல்லைப்பா. நல்லா நடிச்சாப் போதும்’னு சொன்னேன். அதை கேட்டுக்கொண்டு நல்லா இன்வால்வ் ஆகி நடித்திருக்கிறார். ஹீரோயின் காயத்ரி தமிழ் சினிமாவுக்கு ஏற்ற முகம். இது ஹீரோயினை முன்னிலைப் படுத்தும் கதை இல்லை.  அவர் தனது பங்கை சரிவரச் செய்திருக்கிறார்.

தினந்தோறும் படத்தில் நல்ல பெயர் பெற்று பின்பு காணாமல் போய் தற்போது மீண்டு வந்திருக்கிறீர்கள். அதைப் பற்றி..
எது சந்தோஷமோ.. அதுவே துயரம். போதையில் வரும் ஞானம் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்று உணர்ந்தபோது என்னுடைய அடையாளம் தொலைந்து போயிருந்தது. மனைவி, மகனுக்கு ஏதோ வேலை செய்து காசு கொடுத்து விடுவேன். என் தேவையாக குடி மட்டுமே ஆகிப் போனது. அதனால் சினிமாவை விட்டு வெகுதூரம் போன நான் வாழ்க்கையை விட்டும் ரொம்ப தூரம் போய்விட்டேன்.  சினிமாவில் இருந்து அழிந்து போனதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கக்கூடாது என்று திடீரென ஒரு நாள் மண்டையிலடித்தாற் போல தோன்றியது. போராட்டங்களுக்குப் பின் மீண்டும் உங்கள் முன் நிற்கிறேன்.

வாருங்கள் நாகராஜ் தமிழ் ரசிகர்கள் புது மத்தாப்பூக்கள் தூவி உங்களை வரவேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.