ஆதலால் காதல் செய்யாதீர்.

aadhalal-kadhal-seiveer-movie-review

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக் காட்டும்படியாக ஒரு திரைப்படம் அமையும்போது பார்வையாளர்கள் படத்துக்கு எதிரான ஒரு மனோநிலைக்கு வருகிறார்கள். இப்படி எதிர் மனநிலை

கொள்ளவைத்தாலும் அவர்களின் தவறான மனோபாவத்தை இடித்துக் காட்டியதால் அத்திரைப்படம் அவர்களது ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது.

தமிழில் யதார்த்தத்தை மிகவும் நெருங்கிவிடக்கூடிய அதே சமயம் ரசிக்கக்கூடிய விதத்திலும் எடுக்கப்படும் படங்கள் குறைவு. இயக்குநர்களும் குறைவு. அவை தியேட்டரில் ஓடுவதும் குறைவு. ராஜபாட்டையில் சறுக்கி விழுந்த சுசீந்திரன் மீண்டும் ஆதலால் காதல் செய்வீரில் நிமிர்ந்து நின்றிருக்கிறார்.

அது ஒரு இருபாலர் படிக்கும் பொறியியற் கல்லூரி. கல்லூரி என்றால் காதல் தானே. அங்கே படிக்கும் சந்தோஷூம், மனீஷாவும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின்பு காதலர்களாகிறார்கள். காதலர்களானால் அவுட்டிங் போகவேண்டுமே. காதலியே எப்போ போகலாம் என்கிறாள். சந்தோஷ் மஹாபலிபுரம் என்கிறான். அங்கே போகிறார்கள். மோகமும் காதலில் அடக்கம் இல்லையா ? காதல் கலவியாகிறது. இப்படியே ஆறுமாதங்கள் போனபின் கவனப் பிசகால் மனீஷா கர்ப்பமாகிறாள். அதைக் கலைக்க அவர்கள் அலைவதும் அதன் பிரச்சனைகளுக்கும் முன் காலம் கடந்துவிட, வீட்டிலும் தெரிந்துவிட, வெடிக்கும் பிரச்சனைகள், சுயநலம் மிக்க மனிதர்கள்.. அதன் முடிவுகள்.

படத்தில் நடித்த அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். படம் இரு குடும்பங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை ஒரு மூன்றாவது பார்வையாளன் கோணத்தில் சொல்லிச் செல்கிறது. சந்தோஷூம், மனீஷா, மனீஷாவின் தோழி, அம்மா, அப்பாக்கள் என்று யாருமே நடிப்பில் சளைக்கவில்லை. இயக்குனருக்கே இவர்களை நடிக்க வைத்ததன் பாராட்டுக்கள் சேரும். பூர்ணிமா ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான பாத்திரம் அவருக்கு இல்லை.

படத்தின் காட்சிகள் சுருக்கம் மற்றும் கச்சிதம். வளவளவென்று இழுவை இல்லை. இளைஞர்கள் பெற்றோரை எவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியும், ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுமிடத்தில் சுசீந்திரன் ஜெயிக்கிறார். படம் ஒரு விதத்தில் எதிர்மறையானது தான் என்றாலும் இதுதான் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிய இந்தியா, தமிழ்நாடு. இதை மறுக்கச் சொல்லுங்கள். டாஸ்மாக் வைத்துக் குடிக்கவைத்து மக்களை அழித்து காசு சம்பாதிக்கும் அரசு இருக்கும் ஊரில் வாழும் பிள்ளைகள் மட்டும் சுயநலமில்லாமல் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் பளிச்.பளிச். யுவன் படத்திற்கு மிகப் பெரிய பலம். அவருடைய ஹிட்டான பாடலை டைட்டில் சாங்காக வைத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர். (பட்ஜெட் பிரச்சனையோ ?). இன்னும் கவனமாக ஷாட்கள் வைக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் பிரபல முகங்களாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் பெரிதாய் இருந்திருக்கும்.

விதி என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு படம் வந்தது. அதில் மோகனும், பூர்ணிமா ஜெயராமும் இதே மாதிரி காதலிப்பார்கள். அதில் மோகன் ஒரு ரோமியோ டைப். அவர் பூர்ணிமாவை நைச்சியமாகப் பேசி மஹாபலிபுரம் கூட்டிச் சென்று கடலில் விளையாட வைத்து, ஹோட்டலில் ரூம் போட்டு திட்டமிட்டு அவரை வளைத்துவிடுவார். பின்பு பூர்ணிமா கர்ப்பமாகிவிட வில்லத்தனமாகச் சிரிப்பார் மோகன். பூர்ணிமா பின்பு கோர்ட்டுக்குச் சென்று வக்கீல் சுஜாதாவின் உதவியோடு பரபரக்கும் கோர்ட் காட்சிகளோடு மோகனை கோர்ட்டில் ஜெயிப்பார்.

இந்த இரு படங்களுக்கும் நடுவில் இவ்வளவொரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருப்பது சுவராசியமான விஷயமாகும். பழைய படம் கொஞ்சம் நாடகத்தனமானது. புதிய படம் யதார்த்தத்தை நெருங்கி நிற்பது. பழைய படத்தில் காதல் என்பது கல்யாணத்தை நோக்கி என்று வரையறுக்கப்பட்டிருக்கும். புதுப் படத்தில் காதல் காதலுக்காக மட்டுமே. ஜாலியாக இருப்பது காதலின் முக்கிய தொழில். அதில் காமம், உடலுறவு எல்லாம் சகஜம் என்கிற சமூக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய பாணிச் சுதந்திரம் சமூக அளவில் மட்டுமின்றி உடலளவிலும் சுதந்திரத்தை தேட விட்டிருக்கிறது நம்மை. உடல் ரீதியான சுதந்திரம் தேவையா இல்லையா? இளைஞர்களால் உடல் ரீதியான சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த முடியுமா ? எதிரில் நடந்துவரும் ஆணை நிமிர்ந்து பார்ப்பதே குற்றம் என்கிற அளவுக்கு சமூகக் கண்காணிப்பு இருந்த காலத்திலும் இது போன்ற எல்லை மீறல்கள் உண்டு தான். இப்போது கண்காணிக்கவே யாரும் தயாராயில்லாத போது எல்லை மீறல்கள் என்பது யதார்த்தமாகின்றன. சகஜமாகின்றன. வளரும் மகனை, மகளை கண்காணிக்க வேண்டிய அப்பாவும், அம்மாவுமே தங்கள் உடல் தேடல்களை முடித்தபாடில்லாமல் அலைகிறார்கள் இங்கே. உடல் ரீதியான மீறலுக்கும், உள்ள ரீதியான மீறலுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையானது. சுதந்திரம் பற்றிப் பேசும் எல்லோருமே அதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். மனரீதியாக கனவில் தியேட்டரில் பார்த்த நடிகையுடன் சரசமாடலாம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் அதன் விளைவுகளே வேறு. இது ஒரு யதார்த்தம்.

சுசீந்திரன் நான் மகான் அல்லவில் இதைப் போன்றேயான ஒரு பிரச்சனையை கையாண்டிருப்பார். இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ். இந்தப் படம் மட்டும் ஹன்ஸிகா மோத்வானி, சித்தார்த் போன்ற பிரபல முகங்கள் நடித்திருந்தால் பெரிதும் பேசப்படும் படமாக ஆகியிருக்கக் கூடும். பார்வையாளர்களை பெரிய அளவு சலனப்படுத்தியிருக்கவும் கூடும். தாண்டவம் ஆடிய கோரதாண்டவத்தில் பரதேசியாய் சுசீந்திரன் ஆனதால் இப்படி ரசிகர்களை பெரிதும் வசீகரிக்காத புதுமுகங்களை காதல் செய்வீர் என்றிருக்கிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை பிள்ளைகள்
ஓடவைக்க வாய்ப்பில்லை. பெற்றவர்களே! நீங்கள் ஓடவையுங்களேன்.

இளசுகளே! ஆதலால் இது போன்ற காதல் செய்யாதீர்.