இதயம் ”களவாடிய பொழுதுகள்” – தங்கர் மச்சான்

kalavadia-pozudhukal-press-release

 வழக்கமாக தன்னைத் தவிர திரையுலகில் அனைவரும் சோரம் போய்விட்டார்கள் என்று எப்போதும் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியபடியே படங்களை ரிலீஸ் செய்து வந்த அண்ணன் தங்கர் மச்சானுக்கு கடந்த படத்தின் தோல்வி வாழ்க்கையை ரொம்பவே பாதித்து விட்டது. தற்போது அவரது கர்வம் குறைந்து யதார்த்த மனநிலைக்கு வந்திருப்பது போலத் தோன்றுகிறார். அவரது புதிய ஞானம் வெளிப்படும்படி களவாடிய பொழுதுகள் படத்தின் பத்திரிக்கையாளர் குறிப்பாக அண்ணன் வெளியிட்டதை அப்படியே கீழே தருகிறோம்.

“என்றைக்கும் தன் வீரியத்தை இழந்துவிடாமல் ஒவ்வொரு இதயத்தையும் ஆட்டி வைத்து, சுக்கு நூறாக்கிப்போட்டுவிடும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் என்றும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது காதல் மட்டுமே! எத்தனை பேரரசுகளை தவிடுபொடியாக்கியிருக்கிறது! அவ்வளவு வலிமையான காதல் சாதாரண மனிர்தகளை மட்டும் விட்டு வைத்து விடுமா? தினம், தினம் இதில் சிக்கித் தவிக்கும் இதயங்கள்தான் எத்தனை! மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருமே அதனைக்கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.

சில நொடிகளில் வேர்விட்டு வளர்ந்துவிடுகிற காதல், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நெஞ்சைவிட்டுப்போகமட்டும் மறுக்கிறது! துரத்திக்கொண்டேயிருக்கிறது! பாடாய்ப்படுத்துகிறது! காற்றைப்போல உணர்ந்துக்கொள்ள மட்டுமே முடிகிற காதல், ஆண்டாண்டு காலமாக படைப்புக்கலைஞர்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. எந்த மொழியுமற்ற காதல் ஒரு சாதாரண மனிதனையே பாடாய்ப் படுத்துகிறபோது ஒரு கலைஞனை விடாமல் பிடித்துக் கொண்டால் என்னவெல்லாம் நிகழும்!
அதில் சிக்குண்ட கலைஞர்களால் கணக்கற்ற  எத்தனை ஓவியங்கள், சிற்பங்கள், இசைக்கோர்வைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என படைக்கப்பட்டுக் கொண்டே யிருக்கின்றன. எந்த மண்ணில், எந்த நாட்டில், எந்த மொழியில் என உலகத்தில் எந்த மூலைக்குப்போனாலும், அங்கெல்லாம் வாழ்ந்து முடிந்த மனிதர்களால் விட்டுச்சென்ற காதலின் அடையாளங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

காதலின் வலிமையை, வலியை, தாக்கத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை எழுதிக்கொண்டேயிருக்கலாம். என்றைக்கும் எத்தனை லட்சம் ஆண்டுகள் கடந்தாலும் அதன் பக்கங்கள் எழுதித் தீராது. அதே போலத்தான் உலகின் எந்த மொழியில், எந்த நாட்டில் காதலை மய்யப்படுத்திய திரைப்படங்கள் உருவானாலும் அதன் தனித்துவத்தை இழக்காமல் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய் இருக்கின்றன.

பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. விலைக்கு  வாங்கக்கூடியவைகளை மட்டுமே செய்துவிடமுடியும். சிறந்த படைப்புகள் இதற்கு எப்போதுமே விதிவிலக்கு. அவைகள் விலைக்கு வாங்கப்படுவதில்லை. தோன்றுகின்றன! . ஒரே ஒரு காதல் காட்சிகூட இல்லாத, காதலிக்கிறேன் என ஒரு சொல்கூட  சொல்லாத ’அழகி’ திரைமூலமான ”கல்வெட்டு” சிறுகதை எனக்குள் தோன்றியதுதான். திட்டமிட்டு உருவாக்கப்பட்டதில்லை. இந்த பதினொரு ஆண்டுகளில் ஒன்பது படங்களை இயக்கியபின் இப்போதுதான் மீண்டும் ”அழகி” போன்ற காதல் உணர்வை மய்யப்படுத்திய ”களவாடிய பொழுதுகள்” எனும் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். ”அழகி” போன்றே இந்தப்படமும் நான்  எழுதிய சருகுகள் எனும் குறுநாவலிலிருந்து விரிவாக்கப்பட்டதுதான்.

காதலில் விழுந்து எழுந்து மீண்டுவிட முடியாமல் சிக்குண்ட இதயம் போலத்தான் இதைத்தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு பொழுதும் வேதனையோடும், வலியோடும், துயரங்களோடும் வெளியில் சொல்லமுடியாமல் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனிடமிருந்து நீண்ட வலிகளுக்குப் பின்தான் சிறந்த படைப்புகள் உருவாக்கமுடியும் என்றால் அந்தப்படைப்புகள் இனி எனக்கு வேண்டாம் எனத்தான் சொல்வேன். உண்மை உணர்வை, உன்னதப்படைப்பாக்க இவ்வளவு தண்டனைகளையும் பெற்றால்தான் அது கிடைக்கும் என்றால், அதற்கான மனவலிமையை நான் இழந்துவிட்டதாகவேத் தோன்றுகிறது.

என்னுடைய ஜெயந்தியும், பொற்செழியனும், செளந்திரராஜனும் இன்னும் சில நாட்களில் ஒவ்வொரு இதயத்திடமும் பேசப்போகிறார்கள். அப்போதுதான் நானும் உங்களிடம் பேசுவேன். இருப்பதிலேயே கடினம் ம் இதயத்துக்கு நெருக்கமான உண்மையைப்பேசும் படைப்புகளை உருவாக்குதுதான் என்பது தேர்ந்த கலைஞர்களுக்கு மட்டுமேத் தெரியும்.
காதலிக்கப்போகிறவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலை மறக்கமுடியாமல் சுமந்து திரிபவர்கள் என எல்லோரையுமே இந்த களவாடிய பொழுதுகள் களமாடும்.