gravity-movie-review
அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது ‘நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக

இருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது. இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.

இது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த  மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா? என்பதுதான் மீதமுள்ள படம்.
3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது. ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் படித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.

படத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)

படத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.

50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón)எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர்.  ஜோனஸ் குவாரான் (Jonás)என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.

இந்தப்  படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.
–இரா.பிரபாகர் (http://prabahar1964.blogspot.in)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.