குறும்பட உலகம் சினிமாவை வேறு திசைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது – சிம்புதேவன்

simbudevan-3kalavani-interview

சிம்புதேவனின் இம்சை அரசனிலிருந்து துவங்கி வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து பயணிப்பவர் சிம்புதேவன். அவரது புதிய படமான ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தின் பின்தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தவரை அணுகி பேசினோம்.

வித்தியாசமான கற்பனைகளை சுமந்த உங்கள் பழைய படங்கள் போல இந்தப் புதிய படத்தின் கதையும் இருக்குமா?
‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ தலைப்பே கதையை சொல்லிவிடுகிறது. மூன்று திருட்டுப் பசங்களுக்கும் ஒரு பெண்ணுக்குமான சிநேகம் தான் கதை. இந்த நால்வரும் ஒவ்வொருவரும் நினைத்ததை அடைவதற்காக ஏதோ ஒரு தேடலில் இருக்கிறார்கள். அவர்களின் தேடல் நிறைவேறியதா என்பதே கதை. முழுக்க முழுக்க சென்னையை களமாகக் கொண்ட கதை. பேன்ட்டஸி காமெடிக் கதைகளில் எனக்கு தமிழில் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அதை இன்னும் உறுதிப்படுத்தும் படமாக இது அமையும்.

அன்றாட வாழ்வில் நாம் தெரிந்தே செய்யும் தவறுகள் தான் அதிகம். காலம் காலமாக செய்து பழக்கப்பட்டுவிட்டதால் நம்மால் அது தவறு என்று உணரவே முடிவதில்லை. அதுபோல எல்லாவித தனிமனித ஒழுக்கங்களையும் சாமர்த்தியம் என்று வரையறுப்பது பொதுக்குணமாக மாறிவிட்டது. இதுபோன்ற விஷயங்களை படத்தில் துணைக்கு கையாண்டு கதை அமைத்திருக்கிறேன்.

கற்பனை கதைகளுக்குள்ளேயே தொடர்ந்து நிஜம்போல எவ்வாறு பயணிக்க முடிகிறது உங்களால் ?
‘சினிமாவே ஒரு கற்பனை எனும்போது கற்பனையிலும் இல்லாத கதையை எப்படி சார் படமாக எடுக்கமுடியும்?’ என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நல்ல கேள்வி தான். ஒரு சின்னக் கதைக்கரு. அதைச் சுற்றி இயங்கும் கதாபாத்திரங்களின் நகர்தல் என்பதே சினிமாவின் எளிமை என்று நான் கருதுகிறேன். அது நிஜம், கற்பனை என்பதைத் தாண்டி அதன் நியாய அநியாயங்களுக்குள்ளே நாம் பயணிக்கமுடியும். கதை எவ்விதத்திலோ நமது நடப்பு வாழ்வை பிரதிபலிக்கும்போது பார்வையாளன் எந்தவித சிரமமும் இன்றி கதையை ஏற்றுக்கொள்கிறான்.

அருள்நிதியை காமெடி ஹீரோவாக ஆக்க முடிந்த அனுபவம் பற்றி.
படத்தின் கதை எனக்குள் வெகுநாள்களாக மனதில் இருந்த கதை. பாண்டிராஜ் மூலம் அருள்நிதியை சந்தித்தேன். அவர் சொல்லித்தான் அருள்நிதிக்கு இந்தக் கதையை அருள்நிதிக்குச் சொன்னேன். உடனே நடிக்க ஓ.கே. சொன்னதுடன் அவரே தயாரிக்கவும் ரெடியாகிட்டார். அருள்நிதி கொஞ்சம் முரடுதான். ஆனால் இதுபோன்ற இயல்பான குணங்களை ஆக்ஷன் , காமெடி என்ற இரண்டுக்கும் பயன்படுத்த முடியும்னு புரிஞ்சுகிட்டேன்.

படத்தின் வசனங்களையும் நீங்களே எழுதியிருக்கிறீர்களா?
ஆம். படத்தில் வசனங்கள் துருத்திக்கொண்டிருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அறை எண் 305ல் கடவுள் படத்தில் மனித உணர்வுகளுக்கு அருகில் வசனங்கள் பயணிக்கும். வாழ்க்கையின் தத்துவங்களைப் பற்றி பேசும். இம்சை அரசனிலும் அதேபோல் கதைக்கு ஏற்ப அரசியல் மற்றும் சமூக விஷங்கள் முன்னின்றன. இதிலும் அப்படித்தான். பாடல்களை வைரமுத்து சார் எழுதியிருக்கிறார்.

இம்சை அரசன் 2-ம் பாகம் வருமா ?
கதைக்கு இன்னும் இறதி வடிவம் கொடுக்கவில்லை. வடிவேல் சாரும் மீண்டும் பிஸியாகிவிட்டார். மீண்டும் நேரமும், கால்ஷீட்டும் அமைந்துவிட்டால் இம்சை அரசனின் முதல்பாகத்தை மிஞ்சும்படி படம் வருகிற அளவு கற்பனைகள் கொண்ட கதைதான் இது. இதுபோக தனுஷிடமும் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.

இப்போதைய தமிழ்ச் சினிமாச் சூழல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
2000க்கு முன்பு இருந்த தமிழ்ச்சூழல் இப்போது நிறைய மாறியிருக்கிறது. 2000க்குப் பின்புதான் உலக சினிமாக்களின் திருட்டு டி.வி.டிக்கள் சென்னையில் சர்வசாதாராணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. அதன் தாக்கம் இப்போது வரும் புதிய தமிழ் இயக்குனர்களிடம் நன்றாகவே தெரிகிறது. வெறுமனே காப்பியடிப்பதைவிட உலகசினிமாக்களால் உந்தப்பட்டு அதன் தாக்கத்தில் நிறைய படங்கள் வர ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம்.

இப்போது வந்திருக்கும் குறும்பட உலகம் சினிமாவை வெறு திசைக்கு அழைத்துச்சென்றிருக்கிறது. யாரிடமும் உதவியாளர்களாக பணியாற்றியிருக்கும் தேவையின்றி நேரடியாக இயக்குநர்களாக அவதரித்திருக்கிறார்கல் பலர். பல வருடங்களாக உதவி இயக்குனர்களாக இருக்கும் உதவி இயக்குனர்கள் போல இவர்கள் எதிர்காலம் பற்றிப் பயப்படுவதில்லை. தைரியமாக மோதி ஜெயிக்கிறார்கள். இது நல்லதா ? கெட்டதா ? தெரியவில்லை. பார்ப்போம். இந்தச் சூழல் எப்படி நம்மை கொண்டு செல்கிறது என்று.

தற்போது வந்திருக்கும் இரண்டாம் உலகம் ஒரு புனைவுக் கதை வகைப் படமே. அதை இன்னும் பார்க்கவில்லை. டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கவேண்டும்.